You are currently viewing ‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

புத்தாண்டு மலர்ந்திருக்கின்றது. அதன் பெயர் குரோதி. பல்வேறுபட்ட சவால்கள், நெருக்குவாரங்கள், பொருளாதார நெருக்கடிகள், அரசியற் பிரச்சினைகள் நிறைந்ததாக ‘காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை’ என்பதாகத்தான்-‘குரோதி’ புத்தாண்டையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற போர், 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழர் தாயகம் எதிர்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பும், அநீதித் தனங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

காணாமற்போனவர்களின் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, சிங்கள – பெளத்த ஆக்கிரமிப்பு என தசாப்தங்களாக நிலவும் பிரச்சினைகள் நாளுக்குநாள் வீரியம்பெற்று வருகின்றனவேயன்றி எந்தவொரு விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாகவில்லை. இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும், இந்தத்தீபாவளிக்குள் கிடைக்கும், எதிர்வரும் சுதந்திரதினத்துக்குள் கிடைக்கும் என்று இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைகளும் காலப்போக்கில், ‘பெருங் கடலில் வீசப்பட்ட கல்’ போன்றாகிவிட்டன.

பார்வைப் புலத்திலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக மறைந்து சென்ற ‘நம்பிக்கை’ என்னும் அந்தக் கல், இப்போது காணாமலேயே போய்விட்டது.

தமிழர்களின் அரசியல் வேணவாவை பொருளாதார இடர்பாடுகளை, நிவர்த்தித்து நிறைவேற்றக்கூடிய ஆரம்பப்புள்ளியோ குறைந்த பட்சம் அதற்குரிய நம்பிக்கைக் கீற்றொளியோ இப்போது கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் இல்லவேயில் இவ்வாறான வெற்று மனோநிலையில் – நம்பிக்கையற்ற தன்மையில்தான் புத்தாண்டை நாம் வரவேற்றிருக் கின்றோம்.

ஆனால், 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருப்பது தமிழர்களுக்கு ஒரு சாதகத்தனம்தான். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பேச்சுகள் தற்போது பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர்கள் தமிழர்களின் வாக்குகளைக் கவர்ந்திழுப்பதற்காக இப்போது தமிழர் பகுதிகளை நோக்கி பறந்துவரத் தலைப்பட்டுள்ளனர். மறுமுனையில், தமிழர்கள் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கருத்தாடல்களும் வலுப்பெற்றிருக்கின்றன.

தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் சரி அல்லாவிட்டாலும் சரி இந்தத் தேர்தல்காலம் பரந்துபட்ட பேரம்பேசலை தமிழ்த் தேசியத்தலைவர்களுக்கு வழங்கவே செய்யும். அதை அவர்கள் கனகச்சிதமாக ஓரணியில் நின்று பயன்படுத்த வேண்டும்.

கட்சிக்கொடிகளின் கீழ் பிளவுபட்டு நின்ற எம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல், இவ்வருடமாவது தேர்தல் காலங்களின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு ஒன்றிணைந்து ஓரணியில் பயணிக்க வேண்டும்.

தமிழ்த் தலைவர்கள் தீர்க்கமாகவும் தெளிந்த அறிவுடனும் செயற்படவேண்டியது காலத்தின் தேவை. ஆக, தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் வழக்கமான அரசியல் பகடையாட்டங்களுக்கு எடுபடாமல், மக்கள் மயப்பட்ட சிந்தனைகளை வெளிப்படுத்தி – மிகக்காத்திரமான முடிவுகளை எடுக்கவும், இலங்கைத்தீவு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்குவாரங்கள் விட்டகலவும் குரோதி வருடம் இடமளிக்கவேண்டும்.

மலர்ந்திருக்கும் ‘குரோதி வருடம், இனங்களுக்கிடையிலான விரோதத்தையும் நீக்கி ‘இலங்கையர்களாக’ சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிப் பயணப்பட வரம் செய்யட்டும்.