You are currently viewing கச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

கச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

இந்திய மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் பரப்புரைகளால் இந்திய அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையின் வடபகுதி அரசியலையும் ஆக்கிரமித்துள்ளது. அதேபோல மீனவ சமூகம் மத்தியிலும் குழப்பநிலை உருவாகியுள்ளது.

மார்ச் 31 ஆம் திகதி கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவொன்றை பதிவிட்டிருந்தார். இந்திய மக்கள் தொடர்பில் சந்திக்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என அப்பதிவில் மோடி குறிப்பிட்டிருந்தார். இக்கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்கள், பிரதிநிதிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி, கக்கச்தீவு எவ்வாறு தாரைவார்க்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்திவருகின்றனர்.

கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்து காங்கிரஸையும், காந்தி குடும்பத்தாரையும் மற்றும் திமுகவின் குடும்ப ஆதிக்கத்தையும் விளாசித்தள்ளியுள்ளார் பிரதமர் மோடி. தமிழ்நாடு மக்கள் பற்றி காங்கிரசும், திமுகவும் சிந்திக்கவில்லை என்பதையே கச்சத்தீவு விவகாரம் எடுத்துக்காட்டுகின்றது எனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள அப்பாவி மீனவர்கள் பற்றி சிந்திக்காமல் தமது குடும்பம் பற்றி மட்டுமே இது விடயத்தில் காங்கிரசும், திமுகவும் சிந்தித்து செயற்பட்டுள்ளன எனவும் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதை அரசியல் பிரச்சாரம் எனக் கருதி ஒதுக்கிவிட முடியுமா? இந்தியாவில் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என அனைத்திலும் கச்சத்தீவு விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்களையடுத்தே, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீளப்பெறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். ராமர் கோவில் கட்டப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிபோலவே இந்த உறுதிமொழியும் அமைந்துள்ளது.

இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையில் 1974ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சத்தீவுக்கான உரிமையை இலங்கை பெற்றது. எனினும், கச்சத்தீவு உரிமை பற்றிய விவாதங்களின் வரலாறு அதையும் தாண்டி செல்கிறது. 1920, 1950, 1960 மற்றும் 1970 களில் இந்தத் தீவைப் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. எது எவ்வாறு இருந்தாலும் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையே இருந்த பலமான நட்புறவு காரணமாக இராஜதந்திர உடன்படிக்கையின் மூலம் இலங்கை கச்சத் தீவின் உரிமையைப் பெற்றது.

கச்சத்தீவு என்பது 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய தீவாகும். ராமர் பாலத்தில் ஓர் பகுதி. இந்த பகுதிக்காக நாம் இந்தியாவை பகைத்துக்கொள்ள வேண்டுமா என கேட்கப்பட்டால், குறித்த தீவை வைத்திருப்பதைவிட அதனை இந்தியாவுக்கு வழங்குவது மேலானது. ஏனெனில் இன்னும் 30 வருடங்களில் உலகின் இரண்டாவது பொருளாதார பலத்தைகொண்ட நாடாக இந்தியா வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரு சிறந்த அண்டை நாடாக இந்தியாவுடன் நட்புறவுடன் இலங்கை பயணிப்பது நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இந்தியாவை கைவிட்டு ஒருபோதும் இலங்கையால் பயணிக்க முடியாது. பாஜக அரசியல் அட்டவணையின் பிரகாரம் இலங்கையின் மன்னார்மீது அக்கட்சி பார்வையை செலுத்தியுள்ளது. மன்னார் மற்றும் திருகோணமலைக்கு அபிவிருத்தி முதலீடுகளை கொண்டு வருவதற்கு இந்திய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அதேபோல இந்தியாவையும் இலங்கை யையும் தரைவழியாக இணைக்கும் ராமசேது பாலம் பற்றிய பேச்சும் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இந்திய மீனவர்கள் அனுமதியின்றி மீன்பிடிக்க வருவதால் வடக்கில் உள்ள மீனவ சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தால், வடகடலில் மீன்பிடிப்பது மேலும் கட்டுப்படுத்தப்படலாம் என வடக்கு மீனவர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாகவே பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவுருகின்றன. கச்சத் தீவை விட்டுக் கொடுப்பது, இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவை படகுகளை சுதந்திரமாக நுழைய அனுமதிப்பது போன்றது எனவும் கருதுகின்றனர்.

சட்டவிரோதமான முறையில் இந்திய மீனவர்கள் தமது கடற்பரப்பிற்குள் நுழைவதால் 23,154 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யாழ் ஐக்கிய மீனவர் சங்க சங்கம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் இந்திய படகுகளினால் தமக்கு முறையான மீன் அறுவடை கிடைக்கவில்லை என வடபகுதி மீனவர்கள் தொடர்ந்தும் முறைப்பாடு செய்து வருகின்றனர். இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஆண்டுக்கு 2000 மில்லியன் டாலர் மதிப்பிலான மீன் அறுவடையை நாடு இழக்கிறது என்று பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு சமீபத்தில் வெளிப்படுத்தியது.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய படகுகளில் ஓரிரு படகுகளை இலங்கை கடற்படை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் இப்பிரச்சினை தீரவில்லை. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்படும் என கடந்த பெப்ரவரி மாதம் தமிழக மீனவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழிலாலும், ரோலர் படகு பாவனையாலும் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் அழிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலைமை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இப்பிரச்சினையை இராஜதந்திர மட்டத்தில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மீனவ சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2023 ஆம் ஆண்டுக்குள் இப்பிரச்சினையை தீர்க்குமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் இடம்பெறும் எனவும் மீனவர்கள் எச்சரித்திருந்தனர். எனினும், பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இவ்வாறான பின்புலத்தில் கச்சத்தீவை மீட்போம் என பாரதிய ஜனதாக் கட்சியினர் கூறிவருவது வடக்கு மீனவர்களை கொதிப்படைய வைத்துள்ளது. சிலவேளை கச்சத்தீவை இந்தியா மீட்டால் தமது தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இலங்கையின் கடல் வளத்;தை இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு வடக்கு மீனவர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். அண்மையில்கூட வேலை நிறுத்தப்போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்கள் இடம்பெற்றன. யாழில். இடம்பெற்ற மீனவர்களின் உண்ணாவிரதப்போராட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முடித்து வைத்தார்.
‘ இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாவிட்டால் அமைச்சு பதவியை துறந்து மக்களுடன் இணைந்து போராடுவேன்.” – என அமைச்சர் டக்ளஸ் அறிவித்துள்ளார்.

யாழில் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பாதியில் நிறுத்தப்பட்டாலும் பிரச்சினை இன்னும் தொடர்கின்றது. யாழ். மீனவர்கள் இந்திய பிரதமர் மற்றும் தமிழக அரசுக்குகூட மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைக்கு இன்னும் எந்த தரப்பும் செவிசாய்க்கவில்லை.
இதற்கிடையில் கச்சத்தீவு விவகாரமும் பூதாகரமாகியுள்ள நிலையில், இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதால் இது அரசியல் கோரிக்கை என்ற தொனியில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கருத்து வெளியிட்டுள்ளார்.

‘ கச்சத்தீவை மீட்பது தொடர்பில் கருத்தாடல் இடம்பெறவில்லை. கச்சத்தீவை வழங்கியது தொடர்பில் யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது அந்நாட்டில் (இந்தியாவில்) உள்ளக அரசியல் களத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதன்போது கச்சத்தீவை மீள பெறுவது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.

இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்ட பிரச்சினையாகும். எனவே, அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் அவசியம் இல்லை.” என்பதே வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளிப்படுத்தியுள்ள கருத்தாகும். குறுகிய கடற்பரப்புக்குள் அண்டை நாடுகளுக்கு பிரச்சினை ஏற்படாமல் எவ்வாறு கடற்றொழிலை முன்னெடுப்பது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இவற்றில் சிறந்த உதாரணம் ஐரோப்பிய ஒன்றியமாகும். இந்திய மற்றும் இலங்கை தரப்புகள் பேச்சுமூலம், ஐரோப்பிய ஒன்றிய மாதிரியை பரீசிலித்து பார்க்கலாம்.

இப்பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு மீனவத் தலைவர்களும் பேச்சுகளை முன்னெடுத்துவந்தனர். தற்போது அந்த பேச்சுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்படி பேச்சுகளை மீண்டும் ஆரம்பித்து, சிறந்ததொரு தீர்வை நோக்கி நகர வேண்டும். பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
கச்சத் தீவின் உரிமையை இரு நாடுகளுக்கும் சமமாக வைத்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை இன்னும் நியாயமான மற்றும் மேம்பட்ட வழியில் தீர்க்கவும் முடியும். அதற்கு அரசியல் தலைமைத்துவம் அவசியம். வட கடலின் மீன் விளைச்சலை இரு நாடுகளுக்கும் எப்படி நியாயமாகப் பகிர்ந்து கொள்வது என்பது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படக் கூடிய பிரச்சனை. அதில் இலங்கை அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும். கக்கத்தீவு விவகாரத்தால் இரு நாட்டு மக்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்வது ஏற்புடையது அல்ல.