நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றுவிட்டது – ஆனால் சபாநாயகர்மீதான நம்பிக்கை?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 75வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 42 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிராகரிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி, டலஸ் அணி, விமல் அணி என்பன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி உள்ளிட்ட அரச பங்காளிக்கட்சிகள் எதிராக வாக்களித்தன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக 45 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் மார்ச் 19 ஆம் திகதி ஆரம்பமானது.

ஆரம்பத்தில் இரு நாட்களே விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டு 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது. எனினும், 19 ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மேலும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. இதற்கமையவே 21 ஆம் திகதியும் விவாதம் தொடர்ந்தது.

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்தரைகளில் சில பரிந்துரைகள் உள்வாங்கப்படாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதனை ஆராயாமல் பொறுப்பற்ற விதத்தில் கையொப்பமிட்டு சட்டத்தை சான்றுரை படுத்தியதன்மூலம் சபாநாயகர் அரசமைப்பை மீறிவிட்டார் என்பது முதல் குற்றச்சாட்டாகும்.
அடுத்தது பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பிலும் சபாநாயகர் அரசமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவற்றை அடிப்படையாக வைத்தே பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பின் பின்னர் சபாநாயகர் உரையாற்றினார் தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். பொலிஸ்மா அதிபர் நியமனத்தின்போது அரசமைப்பு பேரவையில் என்ன நடந்தது என்பது பற்றியும் விவரித்தார்.எனினும், சபாநாயகரின் உரையை செவிமடுக்க எதிரணி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. ஆளுங்கட்சியின் மாத்திரம் சபையில் குவிந்திருந்தனர்.

பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு எது?

பெப்ரவரி 26 ஆம் திகதி சபாநாயகர் உட்பட 9 பேர் அங்கம் வகிக்கும் அரசியலமைப்பு பேரவைக்கு பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பான யோசனை வந்தபோது இது தொடர்பில் கருத்தாடல் இடம்பெற்றது. அதன்பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், சிவில் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அரசமைப்பு பேரவையில் இடம்பெற்றுள்ள விசேட வைத்தியர் திருமதி அனுலா விஜேசுந்தர ஆகியோர் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு சார்பாக வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகியோர் எதிராக வாக்களித்தனர். சிவில் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி தினேஷா சமரரத்ன, கலாநிதி பிரதாப் ராமானுஜன் ஆகியோர் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர். இதன்பிரகாரம் – அரசமைப்பில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க முடியாது எனவும், இவ்வாறு முடிவின்றி கூட்டம் முடிவடைந்து சற்று நேரத்தின் பின்னர், சபாநாயகருக்குரிய வாக்கின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியானது எனவும் இதை அறிந்த கையோடு தனது எக்ஸ் தளம் ஊடாக இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதிவொன்றை பதிவிட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் சபாநாயகர் அரசமைப்பை அப்பட்டமாகமீறி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோனை நியமித்துள்ளார் என்பது தெளிவாகின்றது என எதிரணிகள் குற்றஞ்சாட்டின.

அரசமைப்பின் 40 ஆவது சரத்தின் பிரகாரம், உயர் நியமனங்களுக்காக அரசமைப்பு பேரவையில் முன்வைக்கப்படும் நபரொருவரின் பெயருக்கு அனுமதி கிடைக்க வேண்டும் எனில் அதற்கு சார்பாக அரசமைப்பு பேரவையில் ஐவர் வாக்களித்திருக்க வேண்டும். இங்கு நால்வர் மாத்திரமே சார்பாக வாக்களித்துள்ளனர்.ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகளும், எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளும் சமநிலையில் இருக்கும்போது தனது தீர்மானம்மிக்க வாக்கை சபாநாயகர் பயன்படுத்த முடியும்.

எனினும், இங்கு வாக்கெடுப்பு பெறுபேறு சமநிலையாக இல்லை. எனவே, அரசமைப்பு பேரவையின் தலைவர் என்ற அடிப்படையில் தனது வாக்கை சபாநாயகர் பயன்படுத்த முடியாது. எனினும், கூட்டம் முடிவடைந்த பின்னர் அரசமைப்புக்கு முரணாக சபாநாயகர் அந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார். இது அரசமைப்புக்கும், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் முரணான செயலாகும் என எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அது தொடர்பில் அவர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்தார். நாடாளுமன்ற சம்பிரதாயத்தையோ, அரசமைப்பையோ தான் மீறவில்லை எனக் குறிப்பிட்டு, அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நிகழ்நிலை காப்பு சட்ட விவகாரத்தில் அரசமைப்புமீறல் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்திருக்கலாம். ஆனால் சபாநாயகர் தொடர்பில் எழுந்துள்ள நம்பிக்கையீனம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஏற்புடைய விடயமல்ல. சபாநாயகரின் உரையை செவிமடுக்க எதிரணிகள் சபையில் இருக்காமை இதனை வெளிப்படுத்துகின்றது.

தற்போதைய சபாநாயகர் ஆளுங்கட்சிக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் விசுவாசமாக செயற்படுகின்றார் என்பதே பொதுவாக முன்வைக்கப்படும் கருத்து. வெலிக பிரதேச ஒருங்கமைப்பு குழு தலைவராக சபாநாயகர் உள்ளார் எனவும், அவரின் மகன் தேசிய லொத்தர் சபை தலைவராக பதவி வகிக்கின்றார் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தகவல் வெளியிட்டிருந்தார்.

எனினும், தான் நிறைவேற்று அதிகாரத்துக்கு விசுவாசமாக செயற்படவில்லை எனவும், ஜனாதிபதி தரப்பில் இருந்து தனக்கு எவ்வித அழுத்தங்களும் இல்லை எனவும் சபாநாயகர் தமதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

எதிரணிகள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் தற்போதைய சபாநாயகர் நீதியானவர், அரசமைப்பின் பிரகாரம் செயற்பட்டவர் என ஆளுங்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர். எதிரணி உறுப்பினர்களுக்கு சபாநாயகர்மீது நம்பிக்கையில்லை என்பது வாக்கெடுப்புமூலம் நிரூபனமாகியுள்ளது. எனவே, சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்பதே ஜனநாயக அம்சம். ஆனால் இலங்கை அரசியலில் அவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்பதே கவலைக்குரிய விடயம்.