வெளிக்கிளம்பும் மனித புதைகுழிகளும் புதைக்கப்படும் நீதியும்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு மார்ச் 4 ஆம் திகதி அறிவித்துள்ளது என சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

குறித்த புதைகுழியின் நான்காம் கட்ட அகழ்வுப் பணியை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியை நிதி அமைச்சு இன்னும் வழங்கவில்லை என இதன்மூலம் தெரியவருகின்றது. இதுவரை அகழ்வு பணியின் மூன்று கட்டங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின்போது 40 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.

2023 ஜுன் 29 ஆம் திகதி நீர்வழங்கல் சபை ஊழியர்களால் குறித்த இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் 2023 ஜுலை 6 ஆம் திகதி அகழ்வுப் பணி ஆரம்பமானது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இதற்கான நடவடிக்கை இடம்பெற்றது.

இந்த மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இன்னும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று முல்லைத்தீவு வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி கணகசபாபதி வாசுதேவ பிபிசியிடம் தெரிவித்துள்ளார். எனினும், இதன் உண்மை நிலைமையை கண்டறிவதற்காக தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் நடவடிக்கை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த புதைகுழியில் மனித எச்சங்கள் காணப்பட்ட விதத்தை பார்க்கும்போது இது முறைப்படி இறுதிக்கிரியை நடைபெற்று, சடலங்களை புதைக்கும் இடமாக இருக்காது என்பதை ஊகிக்க முடிகின்றது என்று பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். புதைகுழியில் இருந்து இதுவரை 40 எலும்புகூடுகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும், குழி மேலும் தோண்டப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

துப்பாக்கி ரவைகள், புலிகளால் அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தகடு, சயனைட், பெண்களின் உள்ளாடை, பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் ஆடை என்பனவும் புதைகுழியை தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இது போர்காலத்துடன் தொடர்புபட்ட புதைகுதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

காணாமல்ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் இங்கு புழைக்கப்பட்டிருக்கலாம் என்று முல்லைத்தீவு மாவடடத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இறுதின்போரின்போது படையினரிடம் சரணடைந்த தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பும் பெற்றோர், படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடுகின்றனர்.

எனவே, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் பதிலளிக்கப்பட வேண்டும். இதில் உண்மை எது என்பது பற்றி ஆராயப்பட வேண்டும். அதன்பின்னர் அது பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எனினும், இதற்கான நடவடிக்கை இடம்பெறுவதை காணமுடியவில்லை. மாறாக நிதி இல்லை எனக் கூறி உண்மையை மூடிமறைப்பதற்கு அரசு முயற்சித்துவருகின்றது.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாக அவ்வப்போது ஏதேனும் தீர்வுகள் முன்மொழியப்படும். உண்மையை கண்டறிவதற்காக ஆணைக்குழுவை நியமித்தல், நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஸ்தாபித்தல் என்பனவும் இவற்றில் உள்ளடங்கும். ஆனால் இவை நிரந்தரமில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. இந்த மனித புதைகுழி பற்றி பேசும்போது, சூரியகந்த மனித புதைகுழி, மாத்தளை மனித புதைகுழி, யாழ். செம்மனி மனிதபுழைகுழி, மன்னர், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி என்பனவும் நினைவுக்குவருகின்றது. இந்த புதைகுழிகளின் பின்னணி குறித்தான உண்மை கண்டறியப்பட்டதா? இல்லை. இந்த அகழ்வுப் பணிகளை அதிகாரிகளால் வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடியாமல்போயுள்ளது. இது நீதி தொடர்பில் தீர்க்கப்படாத பாரதூரமான பிரச்சினையாகும்.