You are currently viewing நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு?

நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிரணி பிரதம கொறடா லக் ஷ்மன் கிரியல்ல, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களும், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் கையொப்பம் இட்டனர். சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் சட்டத்துரை பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் கையொப்பமிட்டனர்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை நிறைவேற்றும் போது மேற்படி சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சபாநாயகர் சரியாக அமுல்படுத்தாமை, அரசியலமைப்பு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக வைத்தே இப்பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

“ அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டு, அதன் பின்னர் இவ்விவகாரத்தை உடனே விவாதத்திற்கு எடுத்து பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுப்போம்.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

எதற்காக இந்த பிரேரணை என்பது பற்றி சட்டத்துறை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.

” 1931 டொனமூர் யாப்பு தொட்டு 93 வருடங்களாக நாடாளுமன்ற சம்பிரதாயத்தை நாம் பாதுகாத்துவருகின்றோம். அந்த சம்பிரதாயத்தை தற்போது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடே இதற்கு காரணம்.

நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட மிகவும் பயங்கரமான சட்டமூலமே நிகழ்நிலைக் காப்பு சட்டமூலமாகும். இது தகவல் அறியும் உரிமையை இல்லாது செய்யும் சட்டமாகும். இது விடயம் தொடர்பில் சபாநாயகரின் அணுகுமுறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேற்படி சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. 13 சரத்துகளை அவ்வாறே அமுல்படுத்துவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் எனக் கூறப்பட்டிருந்தது. அந்த பரிந்துரiயை சபாநாயகர் மீறினார். அத்துடன், மேலும் 5 பரிந்துரைகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை சபாநாயகர் மீறியுள்ளார். இது மிகவும் பயங்கரமான முன்னுதாரணமாகும்.

நாடாளுமன்றம் அடுத்தவாரம்கூடும்போது புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் முன்வைக்கப்படலாம். அச்சட்டமூலம் தொடர்பிலும் இதே நடைமுறையை கடைபிடிக்கக்கூடும்.
தனி நபருக்கு எதிராக அல்ல, நாடாளுமன்ற சம்பிரதாயத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே நாம் இப்பிரேரணையை கொண்டுவருகின்றோம்.” – என்று பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.

அதேவேளை, பொலிஸ்மா அதிபர் நியமன விடயத்திலும் சபாநாயகர் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். அரசமைப்பு பேரவையின் தலைவர் என்ற அடிப்படையிலேயே அவர் இவ்வாறு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் குறைவு என்றபோதிலும், சபாநாயகர்மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த முடியும்.