You are currently viewing மலையக தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா?

மலையக தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தெற்கு அரசியலில் பிரதான அரசியல் கட்சிகள் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை இலக்காகக்கொண்டே குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்று மலையக தலைவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி தேர்தலின்போது மலையகத் தமிழர்களின் வாக்குகளும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

இலங்கையில் கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி உட்பட 10 மாவட்டங்களில் மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களை மையப்படுத்தியதாக செயற்பட்டுவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடனேயே எதிர்க்கட்சி தலைவர் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்காளிக்கட்சியாக இருந்தாலும், ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்வேளையில் தமது ஆதரவு சஜித்துக்கு என்பதை உறுதிப்படுத்தவும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்தால் என்ன நடக்கும் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்கும் வகையிலுமே குறித்த இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றிபெறுவார். சஜித் பிரேமதாசவின் தந்தையே மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுத்தார். எனவே, சஜித் தலைமையிலான ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.

அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றி எதிர்க்கட்சி தலைவரிடம் எடுத்துரைத்துள்ளோம். குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் வீட்டுரிமை என்பனவும் அடங்கும். இவற்றை செயற்படுத்துவதற்கு விசேட செயலணி உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கான உறுதிமொழியை சஜித் வழங்கியுள்ளார் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குறித்த உடன்படிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியவை வருமாறு,

“ மலையக தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாஷைகளை நிறைவேற்றுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மலையக தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான நகர்வே இது. குடியுரிமை இருந்தாலும் மலையக மக்களுக்கு இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனை அடைவதற்கான ஆரம்பக்கட்ட வழியே இது.” – என்றார் மனோ கணேசன்.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளதுடன், பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி 10 ஆயிரம் வீட்டு திட்டமும் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மலையக தமிழர்கள் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியும் உறுதிப்படுத்தலொன்றை வழங்கியுள்ளது.