You are currently viewing சீனாவுடன் உறவு வேண்டாம் என்றதா டில்லி? NPP இன் வெளிவிவகாரக் கொள்கை என்ன?

சீனாவுடன் உறவு வேண்டாம் என்றதா டில்லி? NPP இன் வெளிவிவகாரக் கொள்கை என்ன?

“ சீனாவுடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை நாம் கூறினோம்.”

-இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் நாடு திரும்பினர்.

இந்நிலையில் ஜே.வி.பி. தலைமையகத்தில் இந்திய விஜயம் சம்பந்தமாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கும் பதில்கள் வழங்கப்பட்டன.

பிராந்திய பாதுகாப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட விஜித ஹேரத்,

“ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பின்போது அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் பற்றி பேசப்பட்டாலும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பூகோள அரசியல் போட்டியால் பிராந்திய பாதுகாப்புக்கு சிற்சில அச்சுறுத்தல்கள் உள்ளன. இது தொடர்பில் அவர் (இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) தரப்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போது எமது நாட்டின் இறைமையை பாதுகாத்துக்கொண்டு, பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என நாம் கூறினோம்.

எமது நாட்டு பொருளாதாரம், பாதுகாப்பை நாம் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். எமது நாட்டு பாதுகாப்புக்கு பிராந்திய பாதுகாப்பும் மிக முக்கியம். இந்த நிலைப்பாட்டில் இருந்தே நாம் செயற்படுவோம். சீனாவுடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. நாமும் அது பற்றி பேசவில்லை. பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளியோம் என்ற விடயத்தை கூறினோம்.” – என்று குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவர இந்தியா முயற்சியா?

“ தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் ஆதரவு என்பது பற்றி எதுவும் பேசப்படவில்லை. நாமும் இது பற்றி கோரிக்கை எதையும் விடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்குவரும் அரசுடன் செயற்பட தயார் என இந்திய தரப்பில் கூறப்பட்டது.

அத்துடன், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் பேச்சு நடத்தினோம். இதற்கு நாம் உடன்படவில்லை என்பது பற்றியும் கூறினோம். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது, அத்தேர்தலில் எமது கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்ற தகவலை நாம் வழங்கினோம்;. கட்சியொன்றை ஆட்சிக்கு கொண்டுவருவது பற்றி பேசப்படவில்லை.” –எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரக் கொள்கை?

தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட விஜித ஹேரத்,

“ உலக அரசியலில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. அதற்கமைய ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் நாமும் மாறியுள்ளோம். சோஷலிச கொள்கையை அடிப்படையாகக்கொண்டு நவீன யுகத்தக்கேற்ப மாற்றமடைந்துள்ளோம். ஒரு தரப்பை சந்திப்பதாலோ அல்லது வெளிநாடு செல்வதாலோ எமது நிலைப்பாடு மாறப்போவதில்லை. இலங்கை முதலீடுகளில் தற்போது வெளிப்படைதன்மை இல்லை, விலைமனு கோரல் முறையாக நடப்பதில்லை என நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். இது இந்திய நிறுவனங்களுக்கும் பொறுந்தும்.

சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் பூகோள அரசியல் போட்டி உள்ளது . நாம் அந்த போட்டியில் இல்லை. நாடு என்ற ரீதியில் வங்குரோத்து நிலையில் உள்ளோம். நாட்டை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். மேற்படி அதிகாரப்போட்டிக்குள் சிக்காமல் இருக்கவும் வேண்டும். எமது நாட்டு இறைமையை பாதுகாத்துக்கொண்டு, ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டும். அதற்கேற்ற வகையிலேயே எமது நகர்வுகள் அமையும்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம், ரஷ்யா, இந்தியா, சீனா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் எமக்கு இராஜதந்திர தொடர்பு உள்ளது. அரசியல், பொருளாதார ரீதியிலான உறவு பேணப்படும். எமது ஆட்சியில் அனைத்து நாடுகளுடனும் தொடர்பை பேணுவம். எனினும், நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய முடிவுகளை எடுக்கபோவதில்லை. கடந்த காலங்களில் எடுக்கவும் இல்லை.

கடந்த வருடம் டிசம்பர் மாதமே இந்தியா எமக்கு அழைப்பு விடுத்திருந்தது. 10 நாட்கள் விஜயம் செய்யுமாறு கோரப்பட்டது. எனினும், 5 நாட்களாக மாற்றுமாறுகோரினோம். எனவே, இது அவசர விஜயம் அல்ல. இந்தியா என்பது எமது அயல்நாடு. எமது நாட்டு மக்களின் நன்மைக்கு அந்நாட்டுடனான உறவு அவசியம். சீனாவுடன் எமக்கு உறவு உள்ளது என்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும்போது நாம் மௌனம் காக்கவில்லை, அதற்கு எதிராக போராடினோம்.” – என்றார்.