You are currently viewing இந்தியா தொடர்பான ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

இந்தியா தொடர்பான ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருவதை காணமுடிகின்றது. இலங்கையிலும் இந்நிலை மாறவில்லை. இலங்கையில் உள்ள ஊடகங்களும் அநுர தரப்பின் இந்திய விஜயம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

இவ்வருடம் தேர்தலொன்று நடைபெறவுள்ளமையே இதற்கு காரணம். இலங்கையில் தற்போது எல்லா இடங்களிலும் தேர்தல் பற்றி பேசப்படுவதை செவிமடுக்க முடிகின்றது. சமூக வலைத்தளங்களிலும் ஜனாதிபதி தேர்தல் பற்றி அதிகம் பேசப்படுகின்றது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த 5 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது பிராந்திய பாதுகாப்பு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டன என்று இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். இந்த சந்திப்புகள் தொடர்பில் இந்திய ஊடகங்களும் பல்வேறு கோணங்களில் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவின் இந்திய விஜயம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த பிரதான இந்திய ஊடகமொன்று, ஜே.வி.பியை, மாக்கிசவாத கட்சியாக அறிமுகப்படுத்தி இருந்தது. ‘The JVP, a Marxist-Leninist communist party in Sri Lanka’ என்று டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த அறிமுகப்படுத்தல் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? 1980களின் பிற்பகுதியில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து, மாகாணசபை முறைமைக்கு போர்க்கொடி தூக்கி தென்னிலங்கை சமூகத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. செயற்பட்டுள்ள வரலாற்றை இந்த அறிமுகப்படுத்தல் நினைவூட்டுகின்றது. இவ்வாறு இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைபிடித்துவந்த கட்சி தற்போது கருத்தியல் ரீதியில் எந்தளவுக்கு மாறியுள்ளது என்பதையும் இந்த அறிமுகம் ஊடாக ஊடகங்கள் எடுத்துக்காட்ட முற்பட்டிருக்கலாம்.

மறுபுறத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய இலங்கையின் பிரதான கட்சியொன்றுடனேயே இந்தியா கொடுக்கல் – வாங்கலை ஆரம்பித்துள்ளது. தெற்காசியாவில் சீனாவின் தலையீட்டை கடுமையாக எதிர்க்கும் – அதற்கு எதிராக செயற்படும் இந்தியா, சீனாவுடன் நட்புறவு கொண்டுள்ள கட்சியொன்றின் தலைமையை அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளது ஏன்?

சிலவேளை இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றினால் அக்கட்சியினர் சீனா பக்கம் சாயாமல், இந்தியா நோக்கி நகரும் வெளிவிவகாரக் கொள்கையை கடைபிடிப்பார்களா? இதை இந்தியா நம்புகிறதா? அவ்வாறு இல்லையேல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிடம் தஞ்சமடைந்துள்ளதாலும் Belt and Road Initiative (BRI)
திட்டத்தில் இலங்கையை அங்கத்தவராக இணைந்துள்ளதாலும் – அதற்கு மாற்றுவழியாக தேசிய மக்கள் சக்தியை இந்தியா தெரிவு செய்துள்ளதா? சுருக்கமாக கூறுவதாயின் விஷத்தை கொண்டு விஷத்தை எடுப்பதற்கு இந்தியா முற்படுகின்றதா?

அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது என்ற கேள்விக்கு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாலேயே அவரை டில்லி அழைத்துள்ளது என்ற பதிலையே பெரும்பாலான ஊடங்கள் வழங்கியுள்ளன.

“ இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் உங்கள் வாக்கு யாருக்கு” என்ற தலைப்பின்கீழ் சுகாதார கொள்கை நிறுவகம் நடத்திய கருத்து கணிப்புகளை அடிப்படையாகக்கொண்டே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கருத்து கணிப்பின் டிசம்பர் மாத முடிவுகளின் அடிப்படையில் 50 வீதமான ஆதரவை அநுரகுமார திஸாநாயக்கவே பெற்றுள்ளார்.

நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அநுரவுக்கான ஆதரவு 52 வீதத்தில் இருந்து 50 வீதமாக குறைவடைந்துள்ளது. எனினும், 32 வீதமாக இருந்த சஜித்துக்கான ஆதரவு டிசம்பரில் 33 வீதமாக அதிகரித்துள்ளது.

2022 ஜனவரி முதல் 2023 டிசம்பர் வரை நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் 20 வீதத்தில் இருந்து 52 வீதம்வரை அதிகரித்திருந்த அநுரவுக்கான ஆதரவு தற்போது குறைய ஆரம்பித்துள்ளது. 40 வீதத்தில் இருந்து 30 ஆக குறைந்திருந்த சஜித்துக்கான ஆதரவு தற்போது எகிற ஆரம்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு 0 இருந்து 22 வீதமாக அதிகரித்து தற்போது 9 வீதமாக குறைவடைந்துள்ளது. 40 வீதத்தில் ஆரம்பமான மொட்டு கட்சிக்கான ஆதரவு தற்போது 8 வீதமாக குறைவடைந்துள்ளது.

குறித்த கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய அரசியல் போட்டியில் மிகவும் பிரபலமான வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவே விளங்குகின்றார். அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தியாவின் தெரிவு சரியானதே. மறுபுறம், இந்நாட்டில் இயங்கும் இந்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின்படி, அனுரகுமார திஸாநாயக்கவே மிகவும் பிரபலமான வேட்பாளராக இருக்கலாம். எனவே, இலங்கையின் எதிர்கால அரசியலை இந்தியா கையாள வேண்டுமாயின் ஜே.வி.பி. விளைத்து போட வேண்டும். அந்த கோணத்தில் பார்த்தாலும் இந்தியாவின் வியூகம் சரியானதே…!

எது எப்படி இருந்தாலும் இந்தியா தொடர்பில் ஜே.வி.பியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதே இலங்கை மக்களுக்கு முக்கியம். இந்தியா தொடர்பில் தமது பழைய நிலைப்பாட்டை கைவிட்டு தற்போது ஜே.வி.பி. செயற்படுகின்றதா என்பதும் முக்கியம். மறுபுறத்தில் சீனாவுக்கு எதிரான இந்திய சார்பு வெளிவிவகாரக் கொள்கையை கடைபிடிக்க ஜே.வி.பி. தயாரா என்ற விடயமும் மக்களுக்கு முக்கியம் பெறுகின்றது. சீன வேலைத்திட்டங்கள் மற்றும் சீனக் கடன்களில் சிக்கியுள்ள நாட்டின் பிரஜைகளுக்கு, மேற்படி கேள்விகளுக்கு ஜே.வி.பி. தரப்பில் இருந்து கிடைக்கும் பதில்களும் மிக முக்கியமானவை.