You are currently viewing அமைச்சர் என்றால் இப்படி மோதி தள்ளிவிட்டு பயணிக்கும் அதிகாரமும் உள்ளதா?

அமைச்சர் என்றால் இப்படி மோதி தள்ளிவிட்டு பயணிக்கும் அதிகாரமும் உள்ளதா?

” நான் சம்பத்நுவர செட்டில் இருந்து, மகாவெலி பண்ணை ஊடாக பராக்கிரம பகுதிக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தேன். அப்போது பராக்கிரம பகுதியில் இருந்து கறுப்பு நிற லேண்ட் க்ரூஸர் ரக ஜீப்பொன்று வேகமாக வந்தது. வந்த வேகத்திலேயே நான் பயணிக்கும் திசைக்கு திரும்பினர். நான் வாகனத்தை ஓரமாக நிறுத்த முற்பட்டேன், எனினும், முடியாமல்போனது – மோதி விழுந்தது. சிறிது தூரம் சென்று ஜீப்பை நிறுத்திவிட்டு அதில் பயணம்செய்த நால்வரும் என்னை நோக்கி வந்தனர். கால் உடைந்துவிட்டது என நான் சொன்னேன். நாம் வரும்வரை காத்திருங்கள் எனக்கூறிவிட்டு வாகனத்தில் ஏறி செல்வதற்கு முற்பட்டனர். அதன்பின்னர் 10 நிமிடங்களில் பொலிஸார் வந்தனர். ஆம்பியூலன்ஸ் வண்டியும் வந்தது. என்னை சம்பத்நுவர வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். அங்கிருந்து முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன். அங்கிருந்து யாழ்ப்பாணம் அனுப்பினர்.

“ யாழில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைத்தனர். வலது கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று மாதங்களாக தொழில் எதுவும் இல்லை. வீட்டிலேயே இருக்கின்றேன். யாழ். வைத்தியசாலையில் ஆறு நாட்கள் இருந்தேன், முல்லைதீவு வைத்தியசாலையில் 14 நாட்கள் இருந்தேன், ஆனாலும் யாரும் பார்க்கவரவில்லை. பிளேட் ஒன்றுக்கு மட்டும் 65 ஆயிரம் ரூபா சென்றது. மோட்டார் சைக்கிளையும் எடுக்க முடியவில்லை. என்னை மோதிய வாகனத்தின் சாரதிக்கு நவம்பர் 13 ஆம் திகதி கெப்பட்டிகொல்லாவ நீதிமன்றத்தில் பிணை கிடைத்ததாக அறியமுடிந்தது. நவம்பர் 14 ஆம் திகதி ஆகும்போது அவர்களின் வாகனமும் பொலிஸில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தது.

“ நான் வீடு திரும்பிய பின்னர் வழக்கு மறுபடி எப்போது உள்ளது என பொலிஸாரிடம் வினவினேன், ஜனவரி 19 ஆம் திகதி என்றனர். ஆனால் அன்று வழக்கு இருக்கவில்லை. இன்னும் எனது மோட்டார் சைக்கிளை வழங்கவில்லை. முதலில் நான் மோட்டார் சைக்கிளை கோரினேன். மோதிய வாகனத்தை விடுவிக்க முடியும் என்றால் எனது மோட்டார் சைக்கிளையும் வழங்குமாறும் கோரினேன். வழக்கு திகதி வரும்வரை காத்திருக்குமாறு கூறினர். தற்போது எடுத்து செல்ல சொல்கின்றனர்.”

வெலிஓய பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஜீ. குமாரதுங்க கதையே இது. 33 வயதான குமாரசிங்க சாரதி தொழில் ஊடாகவே வாழ்க்கையை கொண்டுநடத்திவருகின்றார். தனக்கு விபத்தை ஏற்படுத்திய நபர்களை, வழக்கு விசாரணை எதுவும் இன்றி விடுவிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துவிட்டனரோ என்ற சந்தேகம் அவருக்கு உள்ளது. அவருக்கு இவ்வாறு சந்தேகம் ஏற்படுவதற்கு நியாயமான காரணமும் உள்ளது.

குறித்த இளைஞனை மோதி, நடுவீதியில் விட்டுவிட்டு சென்றது வேறு யாரும் அல்ல, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடியும், அவரது சாரதியுமாவர். நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அன்றைய தினம் வெலிஓய பகுதியிலேயே இராஜாங்க அமைச்சர் இருந்துள்ளார். அவரும் மேலும் மூவரும் முறு – 5357 ; இலக்கமுடைய லேண்ட்குருஸர் ரக ஜீப்பில் பயணித்துள்ளனர். குமாரதுங்க கூறிய பகுதியில் அவர்கள் இருக்கும்போது காலை 8.30 மணியாகும்.

இவ்விபத்து தொடர்பில் வெலிஓ பொலிஸின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி வீரதுங்கவிடம் வினவியபோது,

“ சட்டத்தின் பிரகாரமே அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றன. அடுத்துவரும் நாட்களில் வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.” என பதிலளித்துள்ளார். அத்துடன், வழக்கு எப்போது வரும் என திகதியை கேட்டபோது தெரியாது என்ற பதிலே அவரிடம் இருந்து வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்கின்றேன் எனவும் மழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடியிடம் வினவியபோது, விபத்து இடம்பெற்றதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். வீதிகளில் பயணிக்கும்போது விபத்துகள் இடம்பெறுவது இயல்புதானே…மேற்படி சம்பவம் தொடர்பில் சட்டத்தின் பிரகாரம் நான் செயற்பட்டுவருகின்றேன், எதிர்காலத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படும் – என பதிலளித்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற பின்னர் குறித்த இளைஞனை வாகனத்தில் ஏற்றிச்சென்று ஏன் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என வினவியபோது, இது சாதாரண விபத்து…நான் அமைச்சர் என்பதால் நீங்கள் எனக்கு சேறுபூச முற்படுகின்றீர்கள்…” எனக் குறிப்பிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்தார்.

விபத்தின் பின்னர் வெலிஓயா மகாவலி விடுதியில் இராஜாங்க அமைச்சரவை இறக்கிவிட்டு, ஏனையோர் வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு வந்தனர் என வெலிஓய பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இருந்த நபரொருவர் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடியின் வாகனத்தில் அடிபட்ட இளைஞர் கிராம பகுதியைச் சேர்ந்த ஏழை. சட்டம் தொடர்பில் பெரிதாக அவருக்கு எதுவும் தெரியாது. இப்படியானவர்களுக்கு இவ்வாறான சம்பவங்களின்போது சட்டத்தின் அரவணைப்பு கிட்டாதா? இதுவே எமது கேள்வியும்கூட. மூன்று மாதங்களாக தொழில் எதுவும் இன்றி கட்டலில் இருந்தவாறே இந்த இளைஞன் நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றார். வேறு காரணங்களால் அல்ல, இந்த விபத்தால்தான் குறித்த இளைஞனுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் அவர் தற்போது அங்கவீனமாக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு முன்னர் வேலை செய்ததுபோல இனி அவருக்கு தொழில் செய்ய முடியுமா? எதிர்காலம்தான் இதை தீர்மானிக்கும்.

எனினும், பாதிக்கப்பட்டவருக்கு குறைந்தபட்சம் இழப்பீடாவது கிடைக்க வேண்டும். அமைச்சராக இருந்தால் என்ன, சாதாரண மக்களாக இருந்தால் என்ன அனர்த்தங்களின்போது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். விபத்து இடம்பெற்று வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஒரு நிமிடம் தாமதித்தால்கூட உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் ஏராளம். எனவே, விபத்தையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞனை இராஜாங்க அமைச்சர் தனது வாகனத்தில் ஏற்றி அருகில் வைத்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாதது ஏன்? இதுதான் பிரச்சினை.