You are currently viewing மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்?

மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்?

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஜனவரி 25 ஆம் திகதி நடந்த வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். மரணம் என்பது சோகத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒருவரின் இழப்பு அவர் சார்ந்தவர்களுக்கு ஈடுசெய்ய முடியாததொன்றாகும். இலங்கைபோன்ற நாட்டில் ஒருவர் உயிரிழந்தால் அவருக்கு அனுதாபம் தெரிவிப்பார்களேதவிர விமர்சனங்களை முன்வைப்பது குறைவு.

இந்நிலையில் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சில பதிவுகள், இலங்கை அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது. 2022 மே 09 ஆம் திகதி சனத் நிஷாந்த தலைமையிலான மொட்டு கட்சி ஆதரவாளர்கள், கோல்பேஸ் போராட்டக்களத்துக்கு வந்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். கூடாரங்களை அடித்து – நொறுக்கி, தீயிட்டுக்கொளுத்தினர். போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் கொதிப்படைந்தனர், அரசியல்வாதிகளை பழிவாங்க அணிதிரண்டனர். நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தனர். இதனால்தான் போராட்டக்களம் சென்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்குகூட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நாடு வங்குரோத்து அடைந்தமை குறித்து மக்கள் கலக்கத்தில் உள்ளனர், அரசியல்வாதிகளும், சில உயர் அதிகாரிகளும்தான் நாட்டை நாசமாக்கினர் என்ற கருத்தை சமூகம் ஏற்றுள்ளது. மக்கள் கொதிப்படையவும், அரசியல்வாதிகளுக்கு எதிராக கடும்போக்குடன் செயற்படவும் இதுதான் காரணமாக உள்ளது.

அறகலவுக்கு பிறகு ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த சூறாவளியை தற்காலிகமாக நிறுத்தினாலும், அந்த சூறாவளி இன்னும் ஓயவில்லை. சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் வலைத்தளங்களில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் இதனையே பிரதிபலிக்கின்றது. மறுபுறத்தில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆதரவு அலை அதிகரித்துள்ளமையும் இதனையே வெளிப்படுத்துகின்றது.

நாடாளுமன்றம் ஊடாக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கோபம், அதிருப்தியை இல்லாது செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தீயை கொளுத்துவிட்டு எரிய வகைக்கும் வகையிலான யோசனைகளே ஜனாதிபதி தரப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

நாட்டு மக்கள் முறைமை மாற்றத்தை கோரினர். அதற்கான காத்திரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதேபோல தற்போது பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது கோபத்தை சிலர் வலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர். எனவே, மக்கள் பிரச்சினையை தீர்க்க வழி தேட வேண்டுமேதவிர, மக்களை ஒடுக்குவதற்கு வழி தேடக்கூடாது. அது கடைசியில் அழிவையே தேடிதரும்.

நாம் எவரது மரணத்தையும் கொண்டாட சொல்லவில்லை. அதற்கான தூண்டுதலையும் வழங்கவில்லை. ஒருவர் உயிரிழந்தால் அவரின் ஆத்மா இளைப்பாறட்டும் என இறைவனை பிரார்த்திக்கும் நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். இலங்கையில் கடைபிடிக்கப்படும் மதங்களின் அடிப்படையில் எந்தவொரு மதமும், கலாசாரமும் மரணத்துக்கு மகிழ்ச்சி வெளிப்படுத்த கூறவில்லை. எமது நாட்டில் சாதாரண மக்கள் உயிரிழந்தால் அவ்வாறு எவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில்லை.

ஆனால் அரசியல்வாதிகள் உயிரிழந்தால் ஏன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள்மீது முன்னர் மக்களுக்கு மரியாதை இருந்தது. தற்போது இல்லை எனக் கூறமுடியாது. மரியாதையுடன் செயற்படும் அரசியல்வாதிகளை மக்கள் இன்றளவிலும் மதித்தே உருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் காத்திரமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றனவா? சபைக்குள் 21 பேர் இல்லாமல் சபை அமர்வுகூட ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஊழல், மோசடிகளும் அதிகரித்துள்ளன. அரசியல் தேவைகளுக்காக போலி வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன, இனவாதம், மதவாதம் தூண்டப்படுகின்றன. பதவிகளுக்காக கட்சி தாவல்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான அணுகுமுறைகளும் அரசியல்வாதிகள் தமது மதிப்பை இழக்க காரணங்களாக அமைகின்றன. எனவே, மாற்றம் என்பது அரசியல்வாதிகளில் இருந்து ஆரம்பமாகட்டும்….!