You are currently viewing நிகழ்நிலைக் காப்பு சட்டம் – அடுத்து என்ன?

நிகழ்நிலைக் காப்பு சட்டம் – அடுத்து என்ன?

நாடாளுமன்றத்தில் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (Online safety Act) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அச்சட்டம் தொடர்பில் பல தரப்பினரும் பல கோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடுமீதான வாக்கெடுப்பின்போது சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்கும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. இதற்கமை இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் அறிவித்தார்.

இச்சட்டமானது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. தடை செய்யப்பட்ட பதிவுகள் என்ன என்பதை தீர்மானிப்பது அத்தகைய பதிவுகளின் உள்ளடக்கத்தை அகற்றுவததற்குரிய இணைய சேவை வழங்குனர்களுக்கு பரிந்துரைகளை வழங்குவது மற்றும் தண்டனைக்குரியவர்கள் என்று கருதப்படுபவர்களின் இணையத்தை முடக்குவது ஆகியவை அடங்கும்.

கூகுள், முகப்புத்தகம் மற்றும் எக்ஸ் போன்ற இணையத்தளம் மூலம் சட்ட விரோத பதிவு என குழு தீர்மானிக்கும் பதிவேற்றம் செய்பவர்கள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள். மேற்படி இணையத்தள நிறுவனங்கள் தங்கள் தளங்களில் இடப்படும் பதிவேற்றங்களுக்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிறுவர் துஷ்பிரயோகம் இணையத்தரவு திருட்டு மட்டும் நேரலை மோசடி உள்ளிட்ட இணைய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், 8000 சைபர் குற்றங்கள் கடந்த வருடம் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். மேற்படி சட்டமானது பேச்சுச் சுதந்திரத்தை பாதிக்காது என்றும் மேலும் தெரிவித்தார். ஆனால் இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு மிக அச்சுறுத்தல் ஆகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

இந்த இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து சர்வதேச சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய ஆய்வாளர் ருவன்பத்திரன தெரிவிக்கையில் “இந்த சட்டம் மனித உரிமைகளுக்கு பெரும் அடியாகும். கருத்துச் சுதந்திரத்தை நசுக்கவும் கருத்து வேறுபாடுகளை அடக்கவும் அரசாங்கத்தால் பிரயோகிக்கப்படும் ஒரு கொடிய ஆயுதமாகும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சட்டத்தை திரும்பப் பெற்று நாட்டில் உள்ள மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

அப்பிள் , அமேசான், கூகுள் மற்றும் யா{ஹ இவைகளை உறுப்பினர்களாகக் கொண்ட கொண்ட ஆசிய இணையக் கூட்டமைப்பு (AIC) மேற்படி சட்டமானது கருத்துச் சுதந்திரங்களை ஒடுக்குவதற்கான ஒரு கொடூர திட்டம் என்று எச்சரித்தது.

மேலும் அது தெரிவிக்கையில் டிஜிற்றல் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடும் என்றும் கூறியது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் சாத்தியமான வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் என்றும் (AIC)  அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த சட்டமூலம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் அமைதியான எதிர்ப்புக் கூட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரம் இவற்றிற்கான் உரிமைகளை சட்டபூர்வமாக பயன்படுத்துவதற்கு இது தடையாக உள்ளது என்று கூறியது.மேலும் இந்த மசோதா சமூக ஆர்வலர்கள் சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் இவர்களினால் கடுமையாக விமர்சிக்பப்பட்டு இது கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரிய எதிர் விளைவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதில் சபாநாயகர் கையொப்பம் இட்ட பின்னரே சட்டம் அமுலுக்கு வரும். உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள சில திருத்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை எதிரணி முன்வைத்துள்ளது. எனவே, இது தொடர்பில் சபாநாயகர் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெற்ற பின்னர் சபாநாயகர் தனது முடிவை எடுப்பார்.

அதேவேளை, இது தற்காலிக சட்டம் மாத்திரமே, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அது இரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.