You are currently viewing திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

இலங்கையானது நீதி சம்பந்தமான பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாகும். நீதிகோரி எழுப்பப்படும் கோஷங்கள் எட்டு திக்கிலும் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றன.. இந்நிலையிலேயே தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ (நீதி) பற்றியும் பேசப்படுகின்றது. ‘யுக்திய’ என்ற போர்வையில் ஊடக பிரசாரமும், பொலிஸ் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. இவ்விரு நடவடிக்கையாலும் மக்களுக்கான நீதி கடுமையாக மீறப்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

‘யுக்திய’ என்றால் என்ன? 

தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர், போதைப்பொருள் வியாபாரிகளை பிடிப்பதாகக்கூறி பாரியதொரு பொலிஸ் நடவடிக்கை ஆரம்பமானது. ‘யுக்திய’ எனும் பெயரிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte 2016 ஜுன் 30 ஆம் திகதி இதேபோன்ற நடவடிக்கையை முன்னெடுத்திந்தார். அந்த நடவடிக்கைக்கு “war on drugs” என பெயரிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை தொடர்பில் கடும் விமர்சனங்கள் உள்ளன. இளைஞர்கள் மற்றும் சிறார்கள்கூட கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை குறித்து ஆவணப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.  

யுக்திய நடவடிக்கை ஆரம்பமானபோது பிலிப்பைன்ஸில் நடந்த சம்பவங்கள்தான் நினைவுக்கு வந்தன. ஆயுதம் காட்டுவதற்காக சந்தேக நபர்களை அழைத்துச்சென்று பொலிஸார் கொலை செய்யும் சம்பவங்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றமையே இதற்கு காரணம்.

யுக்திய நடவடிக்கை ஆரம்பமாகி, இரு வாரங்களுக்கு மேலாகிவிட்டன. தற்போது அந்த நடவடிக்கை தொடர்பில் வெளியாகும் செய்திகள் நல்லவை அல்ல. பிலிப்பைன்ஸ் பாணியில் நகர்வு இடம்பெறுவதுபோல் தெரிகின்றது.  

வெலிகம பகுதியில் ஹோட்டல் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதன்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அடுத்தது தெஹிவளை – வெள்ளவத்தைக்கு இடைப்பட்ட பகுதியில் கரையோரத்தில் அமைந்திருந்த ஹோட்டலை பொலிஸார் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து இடித்தழித்தனர்.  

இப்படி பல கதைகள் இருந்தாலும், மேற்படி இரு சம்பவங்கள்மூலம் யுக்திய நடவடிக்கையின் நகர்வை அறியலாம்.   

ஹோட்டல் இடித்தழிப்பு!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் ஒத்துழைப்புடன், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டப்பூர்வமான அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்ட சோல் பீச் ஹோட்டலானது போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்குக்கு உரியது என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு, அதனை இடித்தழிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. இது போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் ஹோட்டல்தான் என்ற கருத்தை சில ஊடகங்கள் சமூகத்தில் விதைத்தன. அதன்பின்னர் ஹோட்டலை அகற்றுவதற்கு ஜனவரி முதலாம் திகதி பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பான நிலையில், குறித்த கட்டடம் சட்டவிரோதமானது என பொலிஸார் அறிவித்தனர். கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் உரிய அனுமதி பெறாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஹோட்டல் சட்டவிரோதமானது எனில் அதற்கு அருகில் உள்ள கடற்கரையில் அமைந்துள்ள இரு ஹோட்டல்களும் சட்டவிரோதமானவைதானே…!  காவல்துறையின் இந்த கோட்பாட்டின்படி அந்த உணவகங்களும் உடனடியாக இடிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு உணவகங்களும் யாருடையது? அதை ஆராய வேண்டும். அப்போதுதான் யுக்தியவின் நகர்வு தெரியவரும். 

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் 

பாதாள குழு உறுப்பினர் ஹரக் கட்டாவுடன் தொடர்பைபேணிய பாதாள குழு உறுப்பினர்கள் தொடர்பில் யுக்திய நடவடிக்கைமூலம் தகவல் கிடைத்திருந்தது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர்களை கைது செய்வதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவினர், வெலிகம, பெலன பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் சென்றுள்ளனர். வெள்ளை வேனொன்றிலேயே அதிகாரிகள் சென்றுள்ளனர். ஊவா மாகாண ஆளுநர் A.J.M முஸம்மிலின் மகனுக்கு உரித்தானது எனக் கூறப்படும் ஹோட்டலுக்கு அருகில் சென்றபோது மற்றுமொரு ஹோட்டல் திசையில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

பதிலுக்கு கொழும்பு குற்றவியல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட திசையை நோக்கி அல்லாமல், முஸம்மிலின் மகனின் ஹோட்டல் பக்கமே அதிகாரிகள் சூடு நடத்தியுள்ளனர் என தெரியவருகின்றது. முயலை விட்டுவிட்டு அருகில் இருந்த புதர்மீது சூடு நடத்துவதுபோல்தான் பொலிஸாரின் செயல் அமைந்துள்ளது. தற்காப்புக்காக எவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது குறித்து கொழும்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகளுக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பின்னர் அது தொடர்பில் நபரொருவர்  119 இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் பிரகாரம் வெலிகம பொலிஸின் ரோந்து வாகனம் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகளின் வாகனத்தை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. எனினும், நிறுத்தப்படவில்லை. இதனையடுத்தே ரோந்து ஜுப்பில் வந்த வெலிகம பொலிஸார் அந்த வாகனம்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியும் வாகனம் வேகமாக தப்பி சென்றுள்ளது. இது தொடர்பில் வெலிகம பொலிஸாரால் ஏனைய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் வைத்து பொலிஸாரால் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. காயம் அடைந்த பொலிஸ் அதிகாரிகள் கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவ்வேளை ஒருவர் உயிரிழந்துவிட்டார்.   

கொழும்பு குற்றப் பிரிவினர், மாத்தறை வெலிகம பகுதிக்கு சட்டப்பூர்வமான பொலிஸ் நடவடிக்கைக்காக வந்திருந்தால், வெலிகம பொலிஸாருக்கு ஏன் அது பற்றி அறிவிக்கவில்லை? ரோந்து வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தகோரியும் ஏன் அது நிறுத்தப்படவில்லை? காயமடைந்த அதிகாரிகள் ஏன் அருகில் இருந்த கராபிட்டிய வைத்தியசாலைக்கு உடன் அழைத்துச்செல்லப்படாமல், கொழும்பு நோக்கி செல்வதற்கு வாகனம் முற்பட்டுள்ளது? வெலிகம பொலிஸாரின் ஒத்துழைப்பு ஏன் கோரப்படவில்லை?