You are currently viewing அவசர பொதுத்தேர்தலும் வலதுசாரிகளின் அரசியல் எதிர்காலமும்…!

அவசர பொதுத்தேர்தலும் வலதுசாரிகளின் அரசியல் எதிர்காலமும்…!

தற்போதைய நிலைவரத்தின் பிரகாரமும், இறுதியாக வெளியான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவருகின்றது. தாண்டவமாடும் பொருளாதாரப் பிரச்சினைகள், மின் கட்டணம் அதிகரிப்பு, வற் வரி அதிகரிப்பால் ஏற்படவுள்ள விலையேற்றம் போன்ற காரணங்களால் 2024 ஆம் ஆண்டிலும் மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு செல்வாக்கு பெருக சாத்தியமில்லை.

மக்கள் வெறுப்பு

மறுபுறத்தில் மக்கள் அதிருப்தியும் அதிகரித்துவருகின்றது. கிரிக்கெட் பிரச்சினையின்போது பெரும்பாலான மக்கள் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பக்கமே நின்றார்கள். இந்த அரசுமீது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்தி அலைக்கு இதுவும் ஒரு சான்றாகும். ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதான சாகல ரத்னாயக்க உட்பட ஜனாதிபதிக்கு நெருக்கமான செயற்படும் நபர்களையும் மக்கள் வெறுக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி – அதில் போட்டியிட்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவது இலகுவான காரியம் அல்ல. எனவே, முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என்பதே ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களின் நிலைப்பாடாக இருப்பதாக அறியமுடிகின்றது. இது தவறான அரசியல் கணக்கீடாகும். ஏனெனில் முதலில் ஜனாதிபதிமீதான மக்கள் அபிப்ராயத்தையே அறியவேண்டும்.

முதலில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் மொட்டு – யானை கூட்டணி ஊடாக ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார, வஜிர அபேவர்தன, சாகல ரத்னாயக்க, அகில விராஜ் காரியவசம், நவீன் திஸாநாயக்க, ரவீ கருணாநாயக்க, ரமன் ரத்னபிரிய போன்ற தற்போது ரணில் விக்கிரமசிங்க பக்கம் நிற்பவர்கள் மொட்டு கட்சியின் வாக்கு வங்கி ஊடாக நாடாளுமன்றம் செல்லக்கூடும். அதன்மூலம் ஜனாதிபதியின் ஆதரவு சற்று பெருகக்கூடும். இந்த நோக்கிலேயே நாடாளுமன்ற தேர்தல் பற்றி கவனம் செலுத்தப்படுகின்றதேதவிர அதில் புத்தாக்க சிந்தனை ஒன்றும் இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் ஆசனங்களை வெல்லும் எனக் கருதப்படும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எதிராக ஆட்சி அமைப்பதாயின் , சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குழு, தேர்தலின் பின்னர் யானை – மொட்டு கூட்டணியில் இணையவேண்டியேற்படும். இல்லையேல் ஆட்சி அமைக்ககூடிய அறுதிப்பெரும்பான்மையை பெறமுடியாமல்போகும். அந்த நிலை நாட்டில் பெரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும். அந்த உறுதியற்ற தன்மையின் அனுகூலம் ஜனாதிபதிக்கே சாதகமாக அமையும்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கலாம். இது ஜனாதிபதிக்கும், அவரின் சகாக்களினதும் அரசியல் எதிர்காலத்துக்கு சாதகமாக அமையும். சிலவேளை பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச நிராகரித்தால், நாடு ஸ்தீரமற்ற நிலையை எதிர்கொள்ள இடமளியோம் என்ற போர்வையில் சஜித் பக்கம் உள்ள ரணிலின் விசுவாசிகள், அவர் பக்கம் நோக்கி செல்லலாம்.

அவ்வாறு நடந்தால், தேசிய மக்கள் சக்திக்கு எதிரான வலதுசாரி முகாமின் கொடியை தந்திர வியூகத்தின் மூலம் ஜனாதிபதி விக்கிரமசிங்க பறிக்க முடியும். அடுத்த தசாப்தத்தில் இலங்கையின் அரசியல் வடிவத்தை தீர்மானிக்கும் சூழ்நிலையாக இது மாறலாம்.

இவ்வாறு அமையும் நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி ஆகலாம். அந்த இடதுசாரி சக்திக்கு எதிராக வலதுசாரி கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

அந்த புதிய சக்திக்கு தலைமைத்துவம் வழங்குவது யார்? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? பாடளி சம்பிக்க ரணவக்கவா? எனவே, இந்த புதிய அரசியல் சூழ்நிலையில், சிறப்பாக காய் நகர்த்தக்கூடியவர் வலதுசாரிக் கொடியை பிடிக்க முடியும். ரணில் விக்கிரமசிங்க முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சென்றால், இலங்கையின் அரசியலில் வலதுசாரிகளின் தலைவிதியை சஜித் பிரேமதாச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜி.எல்.பீரிஸ் போன்ற தலைவர்கள் எடுக்கும் அரசியல் முடிவுகளே தீர்மானிக்கும்.