You are currently viewing வடக்கு, கிழக்கு பிரிந்தால் என்ன நடக்கும்?

வடக்கு, கிழக்கு பிரிந்தால் என்ன நடக்கும்?

தமிழ் ஈழம் அமைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்களை வெளிநாடு தப்பிச்செல்லவும் விடமாட்டோம் – என்று சூளுரைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

” பயங்கரவாதிகளை நினைவுகூரவே மாவீரர் தினம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் எம்.பிக்கள் சிலரும் ஆதரவு வழங்கியுள்ளனர். நாட்டை பிளவுபடுத்தவே பயங்கரவாதிகள் முற்பட்டனர். படையினர் தமது உயிர்களை தியாகம் செய்தனர். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட நாம் விரும்பவில்லை. தமிழர்களும் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.” எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

” யாழ். கோப்பாயில் சிறார்களுக்கு புலிகளின் சீருடை அணிவிக்கப்பட்டு, கழுத்தில் சயனைட்டும் மாற்றப்பட்டு நிகழ்வில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர். சிங்கள மக்கள் தொடர்பில் சிறார்களுக்கு சிறு வயதில் இருந்தே குரோத்தையும், வைராக்கியத்தையும் விதைத்துவருகின்றனர்.

ஒற்றையாட்சியை பாதுகாப்போம். ஈழம் அமைவதற்கு உடலில் உயிர் உள்ளவரை, தேசப்பற்றுள்ள மக்கள் வாழும்வரை ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.

நாட்டில் மீண்டும் போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்கள் வெளிநாடு செல்வதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்களின் குடும்பத்தை போர் நடக்கும் இடத்துக்கு அனுப்ப வேண்டும் என யோசனை முன்வைக்கின்றேன்.” – எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

ஒற்றையாட்சி

” பௌத்த சாசனத்தை காக்க வேண்டுமெனில் நாட்டில் ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் தற்போது வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்பொருட்கள், புராதன சின்னங்கள் வேகமா கஅழிக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம் இதற்கு சிறந்த சான்று, நெடுங்கேணியில் இருந்த பௌத்த சின்னம் அகற்றப்பட்டு வேறொரு சிலை அங்கு வைக்கப்பட்தை நான் கண்டேன்.

இந்நிலைமையில் வடக்கு, கிழக்கு பிரிந்தாலோ, தனி நாடு உருவாகினாலோ என்ன நடக்கும்? எனவே ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம்.” எனவும் வீரசேகர குறிப்பிட்டார்.

கூட்டமைப்பு எம்.பி. பதில்

” சிங்கள மக்களை ஆள வேண்டும், பௌத்தத்தை ஆள வேண்டும் என்ற சிந்தனை புலிகளிடம் இருந்ததில்லை. அதற்கான நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கவும் இல்லை. தங்களுடைய நிலத்தில் இன, மொழி, கலாச்சார அடையாளங்களுடன் வாழ வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்தது. எமது கோரிக்கையும் அதுதான்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

” முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தமிழர்களின் இன விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. சில அதிகாரிகளும் இதற்கு துணை நிற்கின்றனர்.

வடக்கை பொறுத்தமட்டில் அங்குள்ள காணியை தொல்பொருள் திணைக்களமோ. ஏனைய தரப்புகளோ அபகீரிக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி, காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசு அக்கறை காட்டவில்லை. எனவே, காணி அதிகாரம் தொடர்பில் விசேட செயல் திட்டத்தை காணி அமைச்சு உருவாக்க வேண்டும்.

எங்களுக்கு சிங்கள, பௌத்த மக்களிடம் எதிர்ப்பு, காழ்ப்புணர்ச்சி இல்லை. எமது நிலத்தில் ஆக்கிரமிப்புகளை செய்வதை நிறுத்துங்கள்.” – எனவும் சார்ள்ஸ் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.