You are currently viewing வரலாற்று தவறு சீர்செய்யப்படுமா?

வரலாற்று தவறு சீர்செய்யப்படுமா?

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றே அமைச்சர் ஜீவன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

” இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு சென்றவர்களில் ஒரு தரப்புக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது. இதனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது மக்களுக்கு இலங்கையில் குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம்.

இந்த வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். எமது மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவை போதுமானவை அல்ல. பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று தவறு சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக தமக்குள்ள பொறுப்புகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இது விடயம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணைந்து பணியாற்ற நான் தயாராகவே இருக்கின்றேன்.” – எனவும் ஜீவன் தொண்மான் குறிப்பிட்டுள்ளார்.

மலையக தமிழர்களுக்கு வரலாற்று தவறு இழைக்கப்பட்டுள்ளது. அது சீர்செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரே இதனை ஒப்புக்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

முதலில் இங்கு உள்ளவர்கள் முழு உரிமைகளைப் பெறட்டும். அதன்பின்னர் இந்தியாவில் உள்ளவர்கள் பற்றி சிந்திக்கலாம் என்ற கருத்து எழுகின்றது. இலங்கையில் வாழும் மலையக தமிழர்கள் உரிமைகள் பெறாத நிலையில், இந்தியாவில் உள்ளவர்களையும் இங்கு அழைப்பது பொருத்தமா என்ற வினாவும் எழுகின்றது.

மலையக மக்களுக்கு குடியுரிமை கிடைத்துவிட்டதா என்ற கருத்தாடல் சமூகவலைத்தளங்களில் அண்மைய நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்திய தொலைக்காட்சியொன்றில் நடந்த நிகழ்வில், மலையக மக்களுக்கு இன்னும் குடியுரிமைக்கூட இல்லை என நடிகர் சத்தியராஜ் குறிப்பிட்டிருந்தார். அந்த விடயத்தை மையப்படுத்தியே இந்த விவாதம் எழுந்துள்ளது.

1948 இல் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அந்த பிரச்சினை முழுமையாகதீர 60 ஆண்டுகள்வரை சென்றது. அவ்வாறு குடியுரிமை கிடைக்கப்பெற்றாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய உரிமைகளை மலையக தமிழர்கள் பெறவில்லை என்பதே கசப்பான உண்மை.

அந்தவகையில் சத்தியராஜ் கூறியது உண்மை என சொல்லலாம்.

முகவரி

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் நேற்று (04) அறிவித்துள்ளது.

முவன்கந்த தோட்டத்தில் வசித்து வருகின்ற சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைகளை முடிவிற்கு கொண்டுவந்த போதே உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு இதனை அறிவித்துள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். எனவே, முகவரி வழங்கப்பட வேண்டும். காணி உரிமை வழங்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை உரிமைகள்மூலமே சீர்செய்யலாம். மாறாக சலுகைகள் ஊடாக அல்ல.