You are currently viewing பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

பொலிஸ்மா அதிபர் பதவி என்றால் என்ன என்பது தொடர்பில் விவாதிப்பதற்கு சரியான தருணம் வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசமைப்பின் பிரகாரம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுடன் சமூகத்தில் சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதும் பொலிஸாரின் கடமையாகும். அனைவருக்கும் சமமாம சட்டத்தை செயற்படுத்தல், சட்டத்தை மதித்து நாட்டு மக்கள் வாழ்கின்றனரா என்பதை கண்காணித்து, ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதும் பொலிஸாரின் பொறுப்பாகும். மறுபுறம், நாட்டு பிரஜையின் பாதுகாப்பையும் அவரது தனிப்பட்ட மற்றும் சமூக சுதந்திரத்தையும் உறுதி செய்வது பொலிஸாரின் கடமையாகும்.

இவ்வாறு மிகமுக்கிய பொறுப்புகள் வாய்ந்த பொலிஸின் பிரதானியாக எவ்வாறான நபரை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் உருவாக வேண்டும். ஏனெனில் இலங்கை சமூகம்போல் காவல்துறையும் ஒரு நிறுவனமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தேசபந்து தென்னகோனுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், இந்நியமனம் குறித்து பரந்தப்பட்ட பார்வையை செலுத்த வேண்டும்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடந்த மார்ச் 25 ஆம் திகதியே சேவையில் இருந்து ஓய்வுபெறவிருந்தார். எனினும், அவருக்கு மூன்றுமாதகால சேவை நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அந்த காலம் முடிந்ததும் பின்னரும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு நான்கு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்ட பின்னணியிலேயே பதில் பொலிஸ்மா அதிபராக மூன்று மாத காலத்துக்கு தேசபந்து தென்னகோன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக்க வேண்டும் என்ற நோக்குடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உள்ளிட்டோர் செயற்பட்டனர். எனினும், பேராயர் மெல்கம் ரஞ்சித், சிவில் அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் பலர், பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோனை நியமிக்ககூடாது என ஜனாதிபதியை வலியுறுத்திவந்தனர். குற்றச்சாட்டுக்கு இலக்கான நபரொருவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படக்கூடாது என்பதுதான் அவர்களின் கருத்தாக இருந்தது. இதனால்தான் பொலிஸ்மா அதிபராக அவரை நியமிப்பதில் இருந்து அரசு சற்று பின்வாங்கியது.

எனினும், இறுதியாக கடந்த 29 ஆம் திகதி தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுவிட்டார்.
வரலாற்றில் முதன்முறையாக பல குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி இருக்கும் பொலிஸ் அதிகாரி, மக்கள் போராட்டத்தின்போது தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை பெற்றுள்ளார். 1971 ஆம் ஆண்டு பிறந்துள்ள தேசபந்து தென்னகோன் 2031 ஆம் ஆண்டுவரை பொலிஸ் சேவையில் தொடர முடியும். எனவே அவர்தான் பொலிஸ்மா அதிபராக வருவதற்குரிய சாத்தியம் அதிகம். குறைந்தபட்சம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிகாலம் முடிவடையும்வரையாவது அவர் பதில் பொலிஸ்மா அதிபராக செயற்படுவார்.

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவை?

தகவல்கள் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த தவறினார் என்பது இவருக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவும், இவர் கடமையை நிறைவேற்ற தவறினார் என சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை அவசியம் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடமை தவறியமை குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவால் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த விசாரணையில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியென கண்டறியப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது. இந்த பரிந்துரை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பின்னர் இது விடயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறவில்லை.

2022 ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர் ஒருவர், 178.5 இலட்சம் பணத்தை கண்டுபிடித்தார். அந்த பணத்தை கோட்டை பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தபோது, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்ட தேசபந்து தென்னகோன், அந்த பணத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்கு வழங்குமாறு கூறியுள்ளார். இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடமை ஆவணத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் நீதிமன்றத்திலும் விடயம் தெரியவந்தது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது அரசியல் கும்பல் தாக்குதல் நடத்தவந்தபோது அரசியல் தரப்புக்கு சார்பாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டும் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உள்ளது.

பொலிஸை சரியான பாதையில் வழிநடத்த வேண்டுமெனில் குற்றச்சாட்டு மற்றும் வழக்கு இல்லாத நபர் ஒருவர் உயர் பதவிக்கு நியமிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் இந்நாட்டில் பொலிஸையோ ஆட்சியையோ சரியான வழிக்கு கொண்டுவரமுடியாது. பொலிஸ்மா அதிபர் பதவிக்கு அடுத்து வரக்கூடிய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பதவியில் இருக்கும் மூவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர். அதில் மூன்றாவதாக உள்ளவருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பொலிஸில் உயர் அதிகாரிகளுக்கிடையில் மோதலையும் உருவாக்கக்கூடும். பதவி நிலையில் 4 ஆவது இடத்தில் இருக்கும் பிரியந்த வீரசூரியவின் பெயர் ஏன் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பரீசிலிக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குள் கேள்வி எழலாம். பொலிஸை அரசியல் மயமாக்கி, அரசியல் நியமனங்களை வழங்க முற்பட்டால் அத்துறை சீரழிவை நோக்கியே பயணிக்கும்.