You are currently viewing பொல்லை கொடுத்து அடிவாங்கிய ரொஷான்!

பொல்லை கொடுத்து அடிவாங்கிய ரொஷான்!

பாம்பை அடிப்பதற்கு முன் தடியை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என பேச்சு வழக்கில் கூறுவார்கள். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்தபோது மேற்படி விடயம்தான் நினைவில் வந்தது. எதுஎப்படியோ கிரிக்கெட்டில் ஏற்பட்ட பிரச்சினை இறுதியில் விளையாட்டுத்துறை அமைச்சரையே வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. நவம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்ட விவகாரத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதற்கமைய கிரிக்கெட் பிரச்சினை மற்றுமொரு களத்தை நோக்கி தற்போது நகர்ந்துள்ளது.

பதவி நீக்கப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய ரொஷான் ரணசிங்க, தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னை முடக்குவதற்கு உயர்மட்ட அரசியல் ஆலோசனைக்கமைய பொலிஸார் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு நடக்கும் விடயங்களை அவதானித்துக்கொண்டிருக்கும் நடுநிலை வாசகர்களுக்கு, கிரிக்கெட் பணத்தால் அமைச்சரவைக்கூட மாற்ற முடியும் என்ற சிந்தனை ஏற்படுவது இயல்பே. ஏனெனில் இலங்கை கிரிக்கெட் என்பது ஒரு பொக்கிஷம். அதன் நிதி கடந்த காலங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை வெளிச்சம்போட்டு காட்டியது. யார் என்ன சொன்னாலும் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பெரும் செல்வம், சிறு குழுவின் கைகளுக்குள் சென்றுள்ளது என்பது கசப்பான உண்மையாகும். விளையாட்டு சங்க சட்டத்தின்படி இது சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை புறந்தள்ளிவிட முடியாது. ஊழல், மோசடி அற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எவரேனும் முயற்சி செய்தால், அவ்வாறானவர்களுக்கு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை புறக்கணித்துவிட்டு செல்ல முடியாது.

கிரிக்கெட் பிரச்சினை மேலோங்கி இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி ‘டைம் அவுட்’ ஆவாரா என்ற தலைப்பின்கீழ் கட்டுரையொன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி உரிய நேரத்தில் களமிறங்கி, பந்தை சிக்ஸர் நோக்கி அடித்துள்ளார். அந்த பந்து எல்லைக் கோட்டை தாண்டுமா அல்லது எல்லைக் கோட்டின் விளிம்பில் வைத்து எதிரணியிடம் பிடியெடுப்பாக சிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதன்மூலம் மொட்டு கட்சிக்கும், தமக்கு பாடம் கற்பிக்க வந்த எதிரணிக்கும் ஜனாதிபதி ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். இதன்போது நியமனம் தொடர்பில் அரசமைப்பு பேரவைக்கு தன்னால் அனுப்படும் பெயர் தாமதப்படுத்தப்படுவது தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.

அத்துடன், ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் நிர்வாகம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்காக முன்னின்று செயற்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேற்படி அறிவிப்பும், பதவி நீக்கமும் நாடாளுமன்ற அதிகாரத்தை சவாலுக்குட்படுத்தும் செயலாகும். மறுபுறத்தில் நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டசபைக்கும் இடையில் மோதலுக்கும் இது வழிவகுக்கின்றது.