You are currently viewing நடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?

நடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?

கடந்த  26 ஆம் திகதி முகநூலை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென வீடியோவொன்று தென்பட்டது. மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முறுகலில் ஈடுபடும் காணொளியே அது. அதனை பார்க்கையில் மற்றுமொரு விடயமும் தெரியவந்தது. அதாவது அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையில் திவுலபதான என்ற கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட விகாரையில் இருந்த புத்தர் சிலையொன்று முதல்நாள் இரவு காணாமல்போயுள்ளது. 

குறித்த சிலைக்கு என்ன நடந்தது என்பதை ஆராய தேரர் கிராமத்துக்கு செல்ல முற்பட்டுள்ளார். எனினும், அங்கு செல்ல அனுமதி வழங்க முடியாது என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார். யார் இவ்வாறு கட்டளையிட்டது என தேரர் பதிலுக்கு கேட்டுள்ளார். பொலிஸ்மா அதிபரின் உத்தரவு என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதற்கு பதிலளித்துள்ளார்.  

பதற்ற நிலைக்கு மத்தியில் தேரர் கிராமத்துக்கு சென்றுள்ளார், அவ்வாறு செல்வதற்கு முன்னர் மாயமான புத்தர் சிலைக்கு என்ன நடந்தது என உயர் பொலிஸ் அதிகாரியிடம் தேரர் வினவியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி வழங்கிய பதில் எமக்கு மற்றுமொரு தகவலையும் வெளிப்படுத்தியது. காணாமல்போன சிலை பற்றிய உண்மை கதை பாதுகாப்பு தரப்பினருக்கு தெரிந்துள்ளது என்பதே அந்தக்கதையாகும். குறித்த சிலை இனக் கலவரத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கருதினால் அதனை பகிரங்கமாகச் சொல்லி, வெளிப்படையாக அகற்றுமாறு அதிகாரிகளுக்குச் சொல்லும் தைரியம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும். 

அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த காலத்தில்தான், மட்டக்களப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியேற்ற கிராமத்துக்கு ஊர்வலமாக இந்த சிலை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு எடுத்துச்செல்லப்பட்ட சிலை காணாமல் ஆக்கப்பட்டமை மீண்டும் இன முரண்பாடு ஏற்பட வழிவகுக்கக்கூடும். எனவே, பிரச்சினைக்கு இந்த அணுகுமுறையில் (காணாமல்ஆக்கல்) தீர்வு காண முற்படக்கூடாது. மறுபுறத்தில் பௌத்தர்களை தூண்டும் செயலும் இதன் பின்னணியில் உள்ளதா? இது குறித்தும் பௌத்தர்கள் சிந்திக்க வேண்டும்.

சம்பவம் 

கடந்த 19 ஆம் திகதி காலையில்தான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும், தேரருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. தேரரின் கூற்றின் பிரகாரம் 18 ஆம் திகதி இரவுதான் சிலை காணாமல்போயுள்ளது. கடைசியில் தேரர் கிராமத்துக்கு சென்று, மக்களை அணிதிரட்டி, புத்தர் சிலை காணாமல்போனமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இப்படியான அறிவிப்பை விடுப்பது பாரதூரமான விடயமாகும். அப்படிக்கூறுவதற்கு தேவையான பின்னணியை உருவாக்கியமையும் பாரதூரமான விடயமாகும். ஊடகங்கள் முன்னிலையில் தேரர் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

” இந்த காணி பிரச்சினை குறித்து சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கதைக்கின்றார், எனினும், எம்மை பற்றி எவரும் கதைப்பதில்லை. இது கவலையளிக்கின்றது. எங்களை உள்ளேவர அனுமதிக்க வேண்டாம், வாகனங்களை உள்ளே விட வேண்டாம் என கடந்த 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.  

அவ்வாறு கூறுவதற்குக் காரணம், கடந்த 16 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது பிக்குகள் இக்கிராமத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் தடுப்பு ஒன்றை அமைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில்தான் நேற்றிரவு யாரோ புத்தர் சிலையை எடுத்துச்சென்றுள்ளனர். அதனை யார் எடுத்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. சாணக்கியன்தான் காணாமல் ஆக்கியிருப்பார் என்ற சந்தேகம் உள்ளது.” – என்றார். 

தேரரின் இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் வினவினேன், 

” சிங்கள மக்கள் மத்தியில் எனக்குள்ள ஆதரவை அழிக்கும் சதி இது. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமல்ல, இந்த நாட்டில் புலனாய்வுத் துறை இருக்கிறது, இங்கு எல்லா இடங்களிலும் இராணுவம், காவல்துறை  இருக்கிறது, எனவே ,புத்தர் சிலைக்கு என்ன நடந்தது என தேடிபார்க்க சொல்லுங்கள்” – என அவர் பதிலளித்தார்.

உண்மையில் மட்டக்களப்பில் நடப்பது என்ன? இந்த பிரச்சினையின் அடிமுடி எது என்பதை தேட முற்பட்டேன்.

முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் உருவாக்கிய பிரச்சினைதான் இங்குள்ளது.  1980 காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தால், கிராமத்தைவிட்டு இடம்பெயர்ந்த திவலபதான எனும் கிராம மக்கள் இங்கு குடியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் இந்த இடம் திவுலபதான என்ற பழைய கிராமம் இருந்த இடம் அல்ல. அந்த கிராமம் இருந்த இடத்தில் தற்போது பாரிய காடுதான் உள்ளது. அந்த இடத்தை கையகப்படுத்தி சுத்தப்படுத்தினால் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் திவுலபதான கிராமம் என இவர்கள் பிடித்துவைத்துள்ள இடம் மேய்ச்சல் தரையாகும்.   

“ சிங்கள மக்களுடன் எமக்கு இனவாதப் பிரச்சினை இல்லை.  அவர்களை  கொண்டு வந்து இங்கு குடியமர்த்தியதுதான் எங்களுக்குள்ள பிரச்சினை.  சுமார் 06 இலட்சம் கால்நடைகளுக்கு உணவளிக்கும் (புல்தரை) இடம் இது. இந்த இடத்தில் எப்போதும் மாடுகளை காண முடியாது. விவசாய காலங்களில் மட்டும் மாடுகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன.” என்று தமிழ் மக்கள் குறிப்பிட்டனர். 

மக்கள் தங்களிடம் உண்மையில் எத்தனை பசுக்கள் உள்ளன என்று கூட சொல்வதில்லை. அதற்குக் காரணம் சமுர்த்தி போன்ற அரசாங்க மானியங்கள் வெட்டப்பட்டு விடுமோ என்ற அச்சமே. அதனால் இங்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

  மயிலத்தமடு 

மயிலத்தமடு என்பது மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியாகும். மட்டக்களப்பு மக்கள் கூறுவதன் பிரகாரம் 60 வருடங்களுக்கு மேலாக இங்கு கால்நடைகள் வளர்க்கப்பட்டுவருகின்றன.  இந்தப் பகுதியில் வசிக்கும் பால் பண்ணையாளர்கள் தங்களுக்குத் தேவையான புற்களைப் பெறுவதற்காக இந்தப் பகுதி சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்துக்கு முன்னரே இந்த ஏற்பாடு இடம்பெற்றுள்ளது. அந்த முடிவு சரியாக செயற்படுத்தப்படாமையே பிரச்சினைக்கு காரணமாகும். நாட்டில் சட்டம், ஒழுங்கு முறையாக இல்லையேல் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். 

இந்த மேய்ச்சல் தரையில் மேயும் மாடுகளின் எண்ணிக்கை 6 லட்சம் என நாடாளுமன்ற உறுப்பினர் கூறினாலும்,  8,242 எக்டேயரில் 35,000 ஆயிரம் மாடுகளே மேய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

செங்கலடி, கொம்மாந்துறை, மாவடி வேம்பு, சித்தாண்டி, கிரான் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் சுமார் 9 ஆயிரம் பால் பண்ணையாளர்கள், இந்த பசுக்களால்தான் வாழ்கின்றனர்.  3 ஆயிரம் வரையான தொழிலாளர்களும் இதனை நம்பி உள்ளனர். இந்த மண்ணில் இருந்து நாளொன்றுக்கு 3 ஆயிரம் லீற்றர்வரை பால் எடுக்கப்படுகின்றது. ஆனால் 2011 இற்கு பிறகுதான் நிலைமை மோசமாகிவிட்டது.

  முறைசாரா குடியேற்றமும் – தவறான முடிவும்

 2011 ஆம் ஆண்டு அரலகங்வில, பொலன்னறுவை, தெஹியத்தகண்டி, மஹாஓயா போன்ற பிரதேசங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து இங்கு இறக்கியுள்ளனர். இவர்களில் பலருக்கு அவர்களின் சொந்த கிராமங்களில் வீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கதை உண்மையாக இருக்கலாம், ஏனென்றால் 2016 ஆம் ஆண்டு நல்லாட்சியின்போது இப்பிரச்சினை வந்தபோது, ​​அன்றைய ஆட்சியாளர்கள்   சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றி இந்த மேய்ச்சல் தரையை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆனதும், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஐ நியமித்தார். அவர் பதவியேற்ற பின்னரே இப்பிரச்சினை மீண்டும் உருவானது. அரசியல் காரணங்களுக்காக   பாலைவனம் போன்ற நிலங்களுக்கு மக்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். மகாவலிக்கு இடம் இருக்கின்றது என்பதற்காக இவ்வாறு மக்களை கொண்டுவந்து குடியமர்த்தினால் பிரச்சினை ஏற்படுவது இயல்பே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வெலிஓயாவிலும் இப்பிரச்சினை உள்ளது, வவுனியா நாமல் கிராமத்திலும் இப்பிரச்சினை உள்ளது. 

பிரச்சினைக்கு தீர்வு என்ன?

அரசியல்வாதிகள் இணைந்துதான் இப்பிரச்சினை உருவாக்கியுள்ளனர், எனினும், இதனால் தற்போது பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி தமிழ், சிங்கள, முஸலிம் மக்களே ,எனவே, காணி இல்லாமல், வீடு இல்லாமல் இங்கு வந்து குடியேறியவர்கள் இருப்பார்களாயின் அவர்களை விரட்டுவதன்மூலம் இப்பிரச்சினைக்கு  தீர்வு காண முடியாது.  வேறு இடத்தில் அவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும். 21000 ஹெக்டேயர் மகாவலி நிலம் மேய்ச்சல் நிலத்திற்காக ஒதுக்கப்பட்டதாக தமிழ் மக்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு அந்த இடம் சட்டரீதியாக ஒதுக்கிக்கொடுக்கப்பட வேண்டும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட நில அளவையாளரால் தயாரிக்கப்பட்ட பிம்புரைக்கு சொந்தமான பகுதியை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என இம்மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவ்வாறும் முடியாவிட்டால் 28,034 ஹெக்டேயர் நிலத்தை மேய்ச்சல் நிலமாக அறிவிக்குமாறு 2011 ஜூன் 5ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் கோரப்பட்டபோது, ​​15,035 ஹெக்டேயர் மேய்ச்சல் நிலத்தை மேய்ச்சல் நிலமாக வழங்குவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என உண்ணாவிரதம் இருக்கும் பால் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மட்டக்களப்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மனக்கவலை உள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டு இப்பிரச்சினையை இனமேதாலாக மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்ககூடாது. நள்ளிரவில் காணாமல் போகும் சிலைகள் போன்றவற்றின் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இராணுவம் மற்றும் காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்ட ஒரு கிராமத்தில் புத்தர் சிலை காணாமல் போனால், அதற்கு அரசின் ஆதரவு இருந்திருக்க வேண்டும். எனவே மீண்டும் இனவாதத்தை பரப்பி பிரச்சினைகளை தற்காலிகமாக தீர்க்க எவராவது முயற்சித்தால் அந்த முயற்சிகளை தோற்கடிக்க வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

அத்துடன், அரசாங்கத்துக்கு காணிக்கொள்கை, குடியேற்றக் கொள்கை,  தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பான கொள்கை என்பன அவசியம். இந்த பொறிமுறை இல்லாமல் முன்னோக்கி செல்ல முடியாது என்பதையே இப்படியான பிரச்சினைகள் உணர்த்துகின்றன.

இக்கட்டுரை தொடர்பில் சுமன ரத்தன தேரர் மற்றும் அனுராதா யஹம்பத் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கருத்துகளை பெறுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டாலும் அது பயனளிக்கவில்லை.