You are currently viewing ‘மக்கள் புரட்சி’ – பாடம் கற்றுக்கொள்ளுமா மொட்டு கட்சி?

‘மக்கள் புரட்சி’ – பாடம் கற்றுக்கொள்ளுமா மொட்டு கட்சி?

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு – குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை இழந்த நிலையில் இன்று 8 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

இம்முறை பிரமாண்ட நிகழ்வுகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மொட்டு கட்சி தலைமையகத்தில் நாளை (03) விசேட மத வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மண்கவ்வியதும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால் ஆட்சி அதிகாரத்தை இழந்த ராஜபக்ச தரப்புக்கு, கட்சி அதிகாரமும் கைநழுவிப்போனது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பஸில் ராஜபக்சவும் அமெரிக்கா பறந்துவிட்டார்.

நாடு திரும்பிய அவர் புதிய கட்சியை அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார் . இதன்பலமாக 2016 நவம்பர் 2ஆம் திகதி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உதயமானது. மஹிந்த ராஜபக்ச உட்பட முக்கியமான தலைவர்கள் ஆரம்பத்தில் இக்கட்சியில் உறுப்புரிமையை பெறவில்லை. எம்.பி. பதவி பறிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் பின்வாங்கினர். பெயரளவில் பீரிஸ் தலைவராக செயற்பட்டார். பொதுச்செயலாளர் பதவி சாகர காரியவசத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் கூட்டு எதிரணியில் இருந்தவர்கள் கட்டங்கட்டமாக மொட்டு கட்சியில் இணைந்தனர். உறுப்புரிமையை பெற்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் மொட்டு கட்சி தனித்து போட்டியிட்டது. (முதல் தேர்தல்) 44.65 வீத வாக்குகளைப் பெற்று 231 உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதனையடுத்து மொட்டு கட்சிக்கான மவுசு எகிறியது. மைத்திரி பக்கம் இருந்தவர்களும் மஹிந்த பக்கம் தாவ ஆரம்பித்தனர். புதிய கட்சி ஆரம்பித்தால் வீதியில் அழையவேண்டிவரும் என ராஜபக்ச தரப்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்த மைத்திரி, 2018 இல் ஜனநாயக விரோத வழியில் மஹிந்தவை பிரதமராக்கி ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி செய்தார். எனினும், அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் எழுச்சி கண்ட மொட்டு கட்சிக்கு, இது ஒரு கறுப்பு புள்ளியாக அமைந்தது.

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். சுதந்திரக்கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் மொட்டுடன் இணைந்து கூட்டணி அமைத்தன. ‘வெற்றிலை’ சின்னத்தில் போட்டியிடுமாறு சு.க. விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மொட்டு சின்னத்திலேயே கோட்டா போட்டியிட்டார். 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடினார். அதன்பின்னர் பொதுத்தேர்தலிலும் மொட்டு கட்சி வெற்றிபெற்றது.

எனினும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசு பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், ராஜபக்ச தரப்பு வன்முறையை கையில் எடுத்ததால், மக்களுக்கும் பதிலடி கொடுக்க நேரிட்டது. இதனால் குறுகிய காலப்பகுதியிலேயே அதாவது – 2022 இல் மே 9 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகினார். மக்கள் போராட்டம் உக்கிரம் அடைந்ததால் ஜனாதிபதி பதவியை கோட்டாபய ராஜபக்ச துறந்தார். நாட்டைவிட்டும் வெளியேறினார்.

மொட்டு கட்சியில் இருந்து பலர் வெளியேறியுள்ளனர். டலஸ், விமல், லான்சா அணிகள் செயற்பட்டுவருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 8 ஆவது ஆண்டில் அக்கட்சி காலடி வைக்கின்றது.

மக்கள் போராட்டத்தை சதியென்றும், சூழ்ச்சியென்றும் மொட்டு கட்சி கூறுகின்றதேதவிர அதில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு முற்படுவதாக தெரியவில்லை. அரசமைப்பைமீறும் வகையிலான செயற்பாடுகளை நாம் ஆதரிக்கவில்லை. ஆனால் மக்கள் கோரிய முறைமை மாற்றம் (சிஸ்டம் சிஸ்டம் சேஞ்ச்) கட்டாயம் இடம்பெற வேண்டும். அதற்கு மொட்டு கட்சி ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால் அமைச்சரவை மாற்றம், பதவிகள் உள்ளிட்டவற்றுக்காக போராடும்போக்கை கடைபிடிக்கும் மொட்டு கட்சியினர், அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மக்கள் வாக்குரிமை என்ற ஆயுதம்மூலம் தக்க பதிலை வழங்குவார்கள்.