You are currently viewing ‘நாம் 200’ – மாற்றமா? ஏமாற்றமா?

‘நாம் 200’ – மாற்றமா? ஏமாற்றமா?

இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் மலையகத்தில் பல தசாப்தங்களாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ஆனாலும் அந்த இலக்கு எட்டப்படாத சூழ்நிலையில்தான் நாம்200 நிகழ்வும் நடைபெறுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நவம்பர் 2 ஆம் திகதி இந்நிகழ்வு நடைபெறுகின்றது. பிரதமர் தினேஷ் குணவர்தனவும் பங்கேற்கின்றார். இந்திய அரசின் சார்பில் அந்நாட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாம்200 வேலைத்திட்டம் மலையக மறுமலர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக அமையும் ஏற்பாட்டாளர்கள் கூறினாலும், சொல் என்பது செயல் வடிவில் இருந்தாலேயே அதனை நம்ப முடியும் எனக் கூறுகின்றனர்.

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைந்து (1823-2023) 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அம்மக்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கும், நாட்டுக்கும் வழங்கிய பங்களிப்பை கருத்திற்கொண்டு அவர்களை பாராட்டி, கௌரவிக்கும் வகையில் அரச அங்கீகாரத்துடன் நிகழ்வை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

குறிப்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி – அரச அங்கீகாரத்துடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை முக்கியத்துவமிக்கதாகும். இதற்கு முன்னரும் மலையகம் தொடர்பில் பல நிகழ்வுகளை அரசுகள் முன்னெடுத்திருந்தாலும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி – உரிய அரச அங்கீகாரத்துடன் நடத்தப்படும் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகின்றது. அதனால்தான் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இதனை முக்கிய நிகழ்வு என்கின்றனர்.

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்தாலும், மலையகத்தின் இருப்பை நிர்ணயிக்கின்ற பெருந்தோட்டத்துறையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களாக உள்ளவர்களின் வாழ்க்கை நிலை இன்னும் மேம்படவில்லை எனவும், நாம்200 திட்டமெல்லாம் தேவையற்ற நிகழ்வு எனவும் விமர்சனங்கள் எழும் நிலையில், இந்த நாம் 200 ஐ நாளைய மலையகத்துக்கான திட்டமாக மாற்றிக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது மலையக புத்திஜீவிகளின் கருத்தாகும். மாறாக இந்த நிகழ்வு, கட்சிக்கான, தொழிற்சங்கத்துக்கான நிகழ்வாக இருந்துவிடக்கூடாது.

நாம் 200 ஏன் முக்கியம் பெறுகின்றது?

இலங்கையில் மலையகத் தமிழர்கள் என ஒரு இனம் வாழ்கின்றது, அந்த இனத்துக்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு நிகழ்வு நடத்தப்பட வேண்டும் என்பது இதன்மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்துவரும் வருடங்களில் மலையகத்துக்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு அரச அங்கீகாரத்துடன் நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு தெரியாதவன் வாழத் தகுதியற்றவன், அந்தவகையில் மலையகம் தொடர்பில் கட்டுரை, கவிதை, குறுந்திரைப்படம், புகைப்படம் போன்ற போட்டிகளை நடத்திய மலையகம் தொடர்பான கருத்தாடல் எமது சமூகத்தில் இன்றைய தலைமுறையின் மத்தியில் விதைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பலர் வரலாற்றை தேடி அறியவும், கற்றுக்கொள்ளவும் நாம் 200 ஏதேவொரு வகையில் உதவியது என்பதை ஏற்றாக வேண்டும். இந்தபோட்டியில் வெற்றிபெறுபவர்களை அடுத்தக்கட்ட நோக்கி கொண்டு செல்லவும் இது வழிவகுக்கும் என்பது வரவேற்ககூடிய விடயம்.

நாம்200 தொடர்பில் எமது சிங்கள மக்களும் கதைக்க ஆரம்பித்துள்ளனர், முஸ்லிம், கத்தோலிக்க மக்களும்  மலையக மக்களுக்கான அங்கீகாரத்துக்கு ஏகோபித்த ஆதரவு வழங்கியுள்ளனர். மலையக எழுச்சிக்கு எல்லா இன மக்களின் ஆசியும் அவசியம். அந்த விடயமும் நாம்200 மூலம் நிறைவேற்றப்படுகின்றது.

காணி உரிமை

மலையகத் தமிழர்களுக்கு காணி உரிமை என்பதே இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தனி வீடுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஏனைய தனியார் காணிகளுக்குபோல் உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படும் உறுதி பத்திரங்களும் ஏற்புடையதாக இல்லை.

நவம்பர் 2 ஆம் திகதி சட்டப்பூர்வமான காணி உரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கக்கூடிய, சட்ட வலுவுடைய வகையில் காணி உரிமை கிடைக்கப்பெறுமானால் அது மலையக வரலாற்றில் நிச்சயம் ஒரு திருப்புமுனைதான் என்பதை ஏற்கலாம். மாறாக பத்திரம் வழங்கப்பட்டால் ஏமாற்று நாடகங்களின் மற்றுமொரு அங்கமாகவே அது அமையும்.

அதேபோல தோட்டத்தில் வேலைசெய்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு வீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன. உரிய தேர்வுகளின் அடிப்படையில் அவை வழங்கப்படும். தோட்ட அதிகாரிகளும் இதன்மூலம் பயன் பெறலாம். இதுவும் முற்போக்கான யோசனையாகும்.

மலையக மக்களுக்கென ஒரு நிகழ்வு அரச அனுசரணையுடன் நடைபெறுவது நல்லது. இது ஒரு நாள் கூத்தாக அமையாமல், இதனை ஆரம்ப புள்ளியாக கருதி, மலையக சமூகம் அடுத்தக்கட்டம் நோக்கி நகர்வதற்கான தடைகளையெல்லாம் அரசு தகர்க்க வேண்டும்.