You are currently viewing ஜனாதிபதியின் அரசியல் ‘கூக்லி’ பந்தை எவ்வாறு எதிர்கொள்வது?

ஜனாதிபதியின் அரசியல் ‘கூக்லி’ பந்தை எவ்வாறு எதிர்கொள்வது?

2024 ஆம் ஆண்டானது இலங்கை அரசியலுக்கு தீர்க்கமான வருடமாகும். ஏனெனில் 2024 ஒக்டோபருக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். இதன்படி 2024 மார்ச் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும். எனவே, அத்தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்பது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் தீவிரவாக சிந்தித்துவருகின்றனர்  மக்கள் கருத்து கணிப்புகளும் அவ்வப்போது நடத்தப்பட்டுவருகின்றது. 

இதற்கிடையில் மின் கட்டணமும் அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையும் எகிறியுள்ளது. இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. அதேவேளை ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை கட்டுநாயக்க விமான நிலையத்துடன் வழங்கினால் அதனை கொள்வனவு செய்வதற்கு இந்தியா, சீன ஆகிய இரு நாட்டு  முதலீட்டாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.  

இதற்கிடையில் கொட்டாவ – மத்தள அதிவேக நெடுஞ்சாலையை சீனாவுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் எதுவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக அமையாது என்பது வெளிப்படை. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் தொடர்ந்து பயணிப்பதற்கு அரசு எதிர்பார்க்கின்றதெனில் 2024 முற்பகுதிக்குள் மேற்படி விடயங்களில் பலவற்றை செய்தாக வேண்டும். எனவே, அந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலொன்று நடத்தப்பட்டால் அதில் வெற்றிபெறுவது ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலகுவான விடயமாக அமையாது.

இந்தசூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் ‘கூக்லி’ பந்தை வீசுவதற்கு தயாராகிவருவதாக அறியமுடிகின்றது. அதாவது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான யோசனை தயார்செய்யப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது. இதற்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு இணக்கமா, இல்லையா என சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக மக்களிடம் கேட்கப்படும். இதற்கு மக்கள் இணக்கம் தெரிவித்தால் அதற்கான அரசமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். மேற்படி திருத்தத்தின் இடைக்கால விதிகளின் ஊடாக அடுத்த பாராளுமன்ற தேர்தல் தேர்தல்வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று பிரதமராக நாடாளுமன்றத்தில் நீடிப்பார். 

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் 2024 நவம்பர்வரை இருந்தாலும், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக தேர்தலுக்கான அழைப்பை விடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாக இருந்தால் மேற்படி காலப்பகுதிக்கு முன்னதாக நடத்தியாக வேண்டும். தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2025 ஒக்டோபரில்தான் முடிவடைகின்றது. ஆக மேற்படி விடயங்கள் நடந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் ஒரு வருடமாவது அரச தலைவராக பதவி வகிக்க முடியும். 

தேர்தலுக்குச் சென்று தோல்வி அடைவதை விட இந்த முறை சிறந்தது என அவர் நினைக்ககூடும். இதன்மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பும் உருவாகக்கூடும். இதனை பயன்படுத்தி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்கி வெற்றிபெறவும் முடியும். ஏனெனில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்துபவர்கள் எல்லாம் சர்வஜன வாக்கெடுப்பின்போது ஜனாதிபதி பக்கம் நிற்க வேண்டும். அதேபோல இதனை பயன்படுத்தி புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவும் ஜனாதிபதி முயற்சிக்ககூடும்.

மற்றுமொரு உத்தியையும் ஜனாதிபதி செயற்படுத்தியுள்ளார். தேர்தல் முறைமை மாற்றத்துக்காக ஓய்வுபெற்ற நீதியரசர் பிரசாத் டெப் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றையும் அமைத்துள்ளார். பொருத்தமான தேர்தல் முறைமையை உருவாக்குவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக மேற்படி குழுவுக்கு ஜனாதிபதி 6 மாதகாலத்தை வழங்கியுள்ளார். சிலவேளை இப்பணிக்காக ஒருவருடம்கூட செல்லலாம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு, தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியில் நீடித்தால், இந்த தேர்தல் முறைமை மாற்றத்தை காரணம்காட்டி அவரால் மேலும் ஒரு வருடம் பதவியில் நீடிக்க முடியும்.  இத்திட்டம் கைகூடும் பட்சத்தில்  , முதல் சுற்றில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு விக்கிரமசிங்க இலங்கையின் அரச தலைவராக செயற்பட முடியும்.

இதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘கூக்லி’ பந்தை வீசுவதற்கே முற்படுகின்றார். ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடங்களான எதிரணி, எழுச்சி பெற்றுவரும் தேசிய மக்கள் சக்தி என்பன இந்த பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ளும்? அந்தவகையில் 2024 அரசியல் எதிர்காலத்தைபோல நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் வருடமாக அமையும்.