You are currently viewing ‘அதிஉயர்’ சபையை அரசியல் ‘சாக்கடை’ ஆக்க வேண்டாம்!

‘அதிஉயர்’ சபையை அரசியல் ‘சாக்கடை’ ஆக்க வேண்டாம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விவகாரமே தேசிய ரீதியில் மட்டுமல்ல தற்போது சர்வதேச மட்டத்திலும் பேசப்படுகின்றது. இலங்கையில் ‘கஞ்சா’ பயிரிடலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஏற்கனவே அரசியல் எதிர்ப்பு புயலில் சிக்கிய டயானா கமகே, அவ்வப்போது சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிடுவதில் முன்னணி அரசியல்வாதியாக வலம்வருகின்றார். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று (20) அரங்கேறிய சம்பவம், டயானாவுக்கு சாதாரண சம்பவமாகவும், அரசியல் ரீதியில் தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்வதற்கான ஆயுதாக இருந்தாலும் அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்துக்கு ஏற்புடைய விடயம் அல்ல. 

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குழுவின் விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் எந்த பக்கம் தவறு உள்ளது, யார் முதலில் வன்முறையை தூண்டியது என்ற விடயத்துக்கு வந்துவிட முடியாது. ஆனால் நடந்த சம்பவம், ஏற்புடைய நடவடிக்கை அல்ல என்பதை கூறியாக வேண்டும்.

நடந்தது என்ன?

நாடாளுமன்றம்  நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், 

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருவதால், உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்கவும், அமைதியான தீர்வுக்கு உடனடியாக தலையிடவும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்க ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் ஆரம்பமானது. 

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். ஆளும், எதிரணி உறுப்பினர்கள் மிகவும் காத்திரமான முறையில் கருத்துகளையும், யோசனைகளையும் முன்வைத்தனர். 

இவ்வாறு விவாதம் நடந்துகொண்டிருக்கையில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே திடீரென் சபைக்குள் வந்தார், ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். 

“ நாடாளுமன்ற வாசிகசாலை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மின்உயர்த்திக்கு அருகாமையில் வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீத் பெரேரா என்னை தாக்கினார்  இது தொடர்பில் சபாநாயகர் சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும். குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன். தனது மனைவியையும் தாக்கும் நபர்தான் சுஜீவ பெரேரா. கீழ்த்தரமான நபர்கள்தான் இப்படி செயற்படுவார்கள். நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சரை தாக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு பெண் உரிமை பற்றி கதைக்க அருகதை இல்லை. இதற்கு எதிராக நான் வீதியில் இறங்குவேன்.” – என்று பரபரப்பான குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். 

அவர் குற்றச்சாட்டை முன்வைத்தபோது ஏதோ பாரிய சம்பவம் நடந்துள்ளது என்றே எண்ண தோன்றியது. இதனால்தான் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்து, நாடாளுமன்றத்துக்கு பொறுப்பான சபாநாயகரிடம் இந்த பிரச்சினையை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்தார் சபாநாயகர். 

மறுப்பு 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்து 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை, மீண்டும் கூடியபோது சுஜித் பெரேரா சபைக்குள் இருந்தார். அவர் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.

” நான் தாக்கவில்லை. அவர் (டயானா) அவதூரான வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தார். இப்படி செயற்பட வேண்டாம் எனக் கூறினேன். அதன்பின்னர் என்னை தாக்க முற்பட்டார். அதனை நான் தடுக்கவே முற்பட்டேன். சிசிரிவி காட்சிகளை எடுத்து பார்த்தால் அவர் எப்படி செயற்பட்டார் என்பது தெரியும். எனவே, பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துங்கள்.” – எனவும் சுஜித் பெரேரா கோரிக்கை விடுத்தார். 

இந்த சம்பவம் நடைபெற்று ஒரிரு மணித்தியாலயத்துக்குள் வீடியோக்கள் சில சமூகவலைத்தளங்களில் கசிந்தன. நாடாளுமன்றத்துக்குள் சிசிரிவி கமராக்கள் உள்ளன. எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தொலைபேசியில் எடுக்கப்பட்ட காணொளியே கசிந்துள்ளது. 

இந்த காணொளியின் பிரகாரம் டயானா கமகே, நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துவதை கேட்க முடிகின்றது, காற்சட்டையை கழற்றுவேன், தாக்குவேன் என அறுவறுப்பான சில வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி இருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கும், டயானா கமகேவுக்கும் இடையில்தான் கடும் தர்க்கம். நிலைமையை சமரசப்படுத்த முற்படுகையிலேயே சுஜித் பெரேரா சிக்கலில் மாட்டியது காணொளியின் தெரிகின்றது. அதன்பிறகு ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், டயானாவின் முகத்தில் ஆணொருவரின் கை படுவது தெரிகிறது. அது சுஜித் பெரேராவின் கையாகவே இருக்கக்கூடும்.

விசாரணைக்குழு 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, ரமேஷ் பத்திரண, கயந்த கருணாதிலக்க, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு சபாநாயகருக்கு அறிக்கை வழங்கவுள்ளது.

முன்னர் கூறியதுபோலவே முழுமையான விசாரணை முடிவடையும்வரை தவறு எந்த பக்கம் என்ற விடயத்துக்கு வந்துவிடக்கூடாது. ஆனாலும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்றே கூற வேண்டும்.

இலங்கையில் நாடாளுமன்றமே உயரிய சபையாக கருதப்படுகின்றது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால்தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறப்புரிமைகளும், வரப்பிரதாசங்களும் வழங்கப்படுகின்றன. மக்கள் பிரதிநிதிகள் என்போர் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் சிற்சில சம்பவங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீதான மதிப்பை கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. சிலரின் நடவடிக்கையால் 225 பேரையும் மக்கள் வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்ட காலத்திலும் இது தெளிவாக தென்பட்டது.

பெண் வன்கொடுமை என்றெல்லாம் கூறுவதைவிட இந்த சம்பவமே தவறுதான் என்பதை ஏற்க வேண்டும். நாடாளுமன்றத்தின் உயரிய தன்மையை பாதுகாக்க சபாநாயகர் காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும், நாடாளுமன்ற நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். சட்டம் இயற்றும் சபை, அரசியல் சாக்கடையாக மாற இடமளிக்ககூடாது.