You are currently viewing காசா போரை தடுக்க ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலையீடு அவசியம்

காசா போரை தடுக்க ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலையீடு அவசியம்

இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (20) முழுநாள் விவாதம் நடத்தப்பட்டது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்து உரையாற்றினார். அவரால் மிகவும் காத்திரமான – காலத்துக்கு தேவையான கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் ,சிறப்பான யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டது.

‘அதிஉயர்’ சபையாகக் கருதப்படுகின்ற இலங்கை நாடாளுமன்றத்தில் நெடு நாட்களுக்கு பிறகு ஆரோக்கியமானதொரு விவாதத்தை இன்று காண முடிந்தது. (டயானா கமகேவிவகாரம்தவிர) இலங்கையானது பாலஸ்தீனம் பக்கம் நிற்கின்றது என்பது தெளிவானது. ஒரு நாடு என்ற வகையில் அனைத்து கட்சிகளும் இது விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

” உக்ரைன் – ரஷ்யா போரால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்களால்தான் கோட்டாபய ராஜபக்சவுக்கு வீட்டுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. எனவே, இஸ்ரேல் – ஹமாஸ் போரால் மீண்டும் இந்நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அரசு தயார்படுத்தல் குழுவொன்றை அமைத்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.” என்று கம்மன்பில வெளியிட்ட கருத்து ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருவதால், உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்கவும், அமைதியான தீர்வுக்கு உடனடியாக தலையிடவும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்க ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் , இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினை ஏன் தீராமல் உள்ளது என்பது பற்றியும் கம்மன்பில விவரித்தார்.

” ஐ.நா. பாதுகாப்பு சபையில் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட அமெரிக்காவும், பிரான்சும் இணைந்துதான் இஸ்ரேலை ஸ்தாபிக்கும் முயற்சிக்கு தலைமைத்துவம் வழங்கின. இதில் பிரிட்டனுக்கும் பங்குள்ளது. தமது நாட்டில் பெரும்பான்மை இனத்துக்கும், யூதர்களுக்கும் இடையில் இருந்த பிரச்சினையை மேற்படி நாடுகள் அரபுலகம் நோக்கி ஏற்றுமதி செய்தன. அமெரிக்கா நோக்கிவந்த யூத பிரச்சினை மத்திய கிழக்கு நோக்கி திருப்பட்டது.

எனவே, இப்பிரச்சினையின் ஆரம்பகர்த்தாக்களான அமெரிக்கா, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐநாவில் பிரதான கதிரைகளில் இருக்கும்வரை, இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில் ஐ.நாவால் ஒன்றும் செய்ய முடியாது. ” என்பதே அவரின் கருத்தாகும்.

அதேபோல தீர்க்கமானதொரு யோசனையையும் முன்வைத்தார். இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு இந்த பிரச்சினையை தீர்க்க தலையிட வேண்டும் என்பதே அந்த யோசனையாகும்.

அதேவேளை, இந்த பிரச்சினையை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும், எதனை எதிர்கொள்வதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது பற்றி இலங்கைக்குள் இன்னும் கருத்தாடல் ஏற்படவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் லட்சக்கணக்கான இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். போர் நிலைமையால் அவர்கள் வேலையை இழந்து வீடு திரும்புவார்களா என்ற ஐயம் உள்ளது.  வேலை இழப்பு என்பது சேறு கதை, ஆனால் சவப்பெட்டியில் வருவார்களோ என்ற அச்சம் உள்ளது.

உக்ரைன், ரஷ்யா போரால் எரிபொருள் விலை அதிகரித்தது, சமையல் எரிவாயு, நிலக்கரி என்பவற்றின் விலைகளும் அதிகரித்தன. இதனால் மின்வெட்டு ஏற்பட்டது. வரிசை யுகம் உருவானது. மக்கள் வீதிக்கு இறங்கினர். வெளிநாட்டு சக்திகளின் வலைக்குள் சிக்கினர். இறுதியில் கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல வேண்டி வந்தது.

ஆக இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருக்க, இப்பிரச்சினையால் (இஸ்ரேல் – ஹமா) எமது ஏற்றுமதி வருமானம் குறைந்தால் என்ன செய்வது, சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தால் என்ன செய்வது, வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தால் என்ன நடக்கும் என்பன பற்றி ஆராய வேண்டும். இதற்காக தயார்படுத்தல் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.” -என்ற கம்மன்பிலவின் கருத்து ஏற்புடையது.