You are currently viewing நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

“சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன,கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சமூக ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களையும் கைபேசிச் செயலிகள் வழியாகப் பகிரப்படும் விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. ஏனென்றால் கடந்த ஆண்டு நிகழ்ந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் அடித்தளம் சமூக வலைத்தளங்களே என்று கருதப்படுகின்றது. படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக ராஜபக்சங்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பினார்கள். அக்கருத்துக்கள் பின்னர் செயலுருப்பெற்றன.

சமூக வலைத்தளங்கள் நல்லதையும் கெட்டதையும் மக்கள் மயப்படுத்துகின்றன. கடந்த தசாப்தங்களில் நிகழ்ந்த “அரபு வசந்தம்” என்று அழைக்கப்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் அடிச்சட்டம் சமூகவலைத்தளங்களே என்று பரவலான ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் அது மிகைப்படுத்தப்பட்ட ஓர் அபிப்பிராயம் என்று பின்வந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அரபு வசந்தம் தொடங்கிய டுனுஷியாவில் முகநூல் பாவனையாளர்களின் மொத்த எண்ணிக்கை மிகக் குறைவு என்பது சுட்டிக்காட்டப்பட்டது. எனவே அரபு வசந்தம் நிகழ்ந்த நாடுகளில், தன்னெழுச்சிப் போராட்டங்களில் சமூக வலைத்தளங்களின் பங்கு குறித்த அபிப்பிராயம் வேண்டுமென்று மிகைப் படுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனாலும் வலதுசாரிப் பண்பு அதிக முடைய தலைவர்கள் சமூக வலைத்தளக் கட்டமைப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டு அடிப்படைவாத உணர்வுகளை அல்லது பகை உணர்வுகளை அல்லது சாதி,சமூக,பிரதேச உணர்வுகளை அல்லது இனவாத,மதவாத,குறுந் தேசியவாத உணர்வுகளை வாக்குகளாக அறுவடை செய்கிறார்கள் என்று அவதானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வாறு ருவிட்டர் தளத்தைத் தனது தேர்தல் வெற்றிகளுக்கு பயன்படுத்தியதாக அப்பொழுது குற்றம் சாட்டப்பட்டது. அதுபோலவே மியான்மரில் ரோஹிங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் முகநூல் ஒரு கருவி போல செயல்பட்டது என்ற தொனிப்பட ஐநா குற்றம் சாட்டியது.

இனப்படுகொலை தொடர்பான ஐநாவின் நிபுணத்துவ ஆய்வுகளின் தொகுக்கப்பட்ட முடிவு ஒன்று பின்வருமாறு கூறுகிறது.. “யூத இனப்படுகொலை எனப்படுவது நச்சுவாயுக் கிடங்குகளில் இருந்து தொடங்கவில்லை, அது வெறுப்புப் பேச்சுகளில் இருந்துதான் தொடங்கியது” என்று.வெறுப்புப் பேச்சுக்களை அதிகம் பரப்புவதற்குரிய அதிகரித்த வாய்ப்புகளை சமூக வலைத்தளங்கள் வழங்குகின்றன. அதற்கு மியான்மர், ருவண்டா போன்ற படுகொலைக் களங்கள் உதாரணங்களாகக் காட்டப்படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் தகவலை உடனடியாக வழங்குகின்றன.மேலும் அவை பாரம்பரிய ஊடகங்களைப் போலன்றி சாதாரண மக்களின் உணர்வுகளை,கருத்துக்களைப் பரப்புவதற்கு அதிகரித்த வாய்ப்புகளைத் தருகின்றன. எனவே அவை சாதாரண ஜனங்களின் அறிவுபூர்வமற்ற உணர்வுகளை உடனடியாகவும் அதிகரித்த அளவிலும் பரப்புகின்றன.

சாதாரண மக்கள் அறிவு பூர்வமாக அரசியலை அணுகுவதை விடவும் உணர்வு பூர்வமாகவே அரசியலையும் தம்மைச் சுற்றி நடப்பவற்றையும் அணுகுவார்கள். குறிப்பாக இன,மத, சாதி ,பிரதேச, பால் வேறுபாடுகளைக் குறித்து அவர்களுடைய கருத்துக்கள் அதிகம் உணர்வுபூர்வமானவைகளாகவே காணப்படுகின்றன.இவ்வாறு அறிவு பூர்வமற்ற, விஞ்ஞானபூர்வமற்ற, உணர்ச்சியூட்டும் கருத்துக்கள் உடனடியாகவும் அதிகரித்த அளவிலும் பகிரப்படும்பொழுது அது இன உணர்வுகளை, மத உணர்வுகளை, பாலுணர்வுகளை ,பிரதேச உணர்வுகளை, சாதி உணர்வுகளை, தூண்டி விடுகின்றன. இது வெறுப்பு பேச்சை அதிகம் பரப்புவதற்கு இடமளிக்கின்றது

மேலும் தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றி கருத்துக் கூறும் துணிச்சலை சமூக ஊடகங்கள் வழங்குகின்றன.இது அறிவியல் அர்த்தத்தில் சீரழிவான ஒரு போக்கு.இதனால்,சமூக வலைத் தளங்களில் இருந்து நிபுணர்கள் வளியேறும் வாய்ப்பு அல்லது நிபுணர்களை வெளித் தள்ளும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் அஞ்சப்படுகின்றது.

இந்த அடிப்படையில் பார்த்தால், சமூக வலைத்தளங்களை ஏதோ ஒரு விதத்தில் நெறிப்படுத்த வேண்டிய தேவை உண்டு. ஆனால் அதனை சட்டத்தால் மட்டும் செய்ய முடியாது. சட்டம் அதைச் செய்ய அனுமதித்தால் அது அனேகமாக கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நசுக்கி விடும். மாறாக அதை ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும்.அந்தப் பண்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும். தொடுதிரைக்கும் விரலுக்கும் இடையே உள்ள இடைவெளி இலத்திரனியல் வெளி மட்டும் அல்ல, வெறும் சட்ட வெளியும் அல்ல, அது ஒரு பண்பாட்டு வெளி. அதைப் பண்படுத்தி வளர்க்க வேண்டும்.

இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே நிகழ்நிலை காப்புச் சட்டத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் எதிர்க்கவும் வேண்டும்.குறிப்பாக,வெறுப்புப் பேச்சுக்களைப் பாதுகாக்கும் ஒரு நாடாளுமன்றத்தைக் கொண்ட ஒரு நாட்டில் சமூகவலைத்தளங்கள் வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி விடும் என்று அஞ்சுவது ஒரு தர்க்க முரண்.

நாட்டின் அதி உயர் சட்டமன்றத்தில் வெறுப்புப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சரத் வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக இரண்டு தடவைகள் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்தார். நாடாளுமன்ற சிறப்புரிமைக்குப் பின் மறைந்திருந்து கொண்டு அவர் அவ்வாறு செய்தார். அந்த சிறப்புரிமையை விட்டு வெளியே வந்து அவர் கதைக்கட்டும் பார்க்கலாம் என்று சட்டத்தரணிகள் சங்கம் சவால் விட்டது. ஆனால் அவர் மட்டுமல்ல, அவரைப் போன்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்புரிமையின் மறைவில் இருந்தபடி வெறுப்புப் பேச்சுக்களைக் கக்கி வருகிறார்கள்.அவாறான வெறுப்புப் பேச்சுக்களின் விளைவாக ஒரு நீதிபதி தனது பதவியைத் துறந்துள்ள ஒரு காலச்சூழலில் இக்கட்டுரை எழுத்தப்படுகின்றது.

எனவே வெறுப்புப் பேச்சுக்களைத் தடுப்பது அல்லது இன முரண்பாடுகளை, சமூக முரண்பாடுகளைத் தூண்டி விடும் பேச்சுக்களைத் தடுப்பது என்பது இலங்கைத் தீவை பொருத்தவரையிலும் நாடாளுமன்றத்தில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். ஒரு கெட்ட முன்னுதாரணமாக நாட்டின் மீ உயர் சட்டமன்றத்தை வைத்துக்கொண்டு,இலத்திரனியல் வெளியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

இதுதான் பிரச்சினை.அரசாங்கத்தின் நோக்கம் தனக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தடுப்பது.கிளர்ச்சிகளை ஊக்குவிக்கும் அல்லது ஒருங்கிணைக்கும் சமூக வலைத்தள வலைப் பின்னல்களை கட்டுப்படுத்துவது. ஜனாதிபதி அடுத்த தேர்தலுக்குத் தயாராகிறார்.அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கிடையே மீண்டும் தன்னெழுச்சிப் போராட்டங்கள் தோன்றக்கூடாது என்று பயப்படுகிறார்.அதைத் தடுப்பதற்கு அவருக்கு இப்படிப்பட்ட சட்டங்கள் தேவை.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்,நிகழ்நிலை காப்புச் சட்டம் போன்றவற்றை அரசாங்கம் எப்பொழுது விவாதிக்கிறது என்று பார்க்க வேண்டும். உலக சமூகத்திடம் குறிப்பாக பன்நாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்தான் இப்படிப்பட்ட சட்டங்களைப் பற்றி உரையாடப்படுகின்றது.ஆயின் கடன் கொடுக்கும் நாடுகள் அல்லது கடன் கொடுக்கும் உலகப் பொது நிறுவனங்கள் நாட்டின் ஜனநாயக இதயத்தை பாதுகாக்குமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்துவது இல்லையா? சீன விரிவாக்கத்தின் கருவியாகக் காணப்படும் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வருவதைத் தடுத்து ரணிலை எப்படி அடுத்த முறையும் ஜனாதிபதியாகலாம் என்பதுதான் மேற்கு நாடுகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றின் நோக்கமா?