You are currently viewing தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் முறை மாற்றம் சாத்தியமா?

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் முறை மாற்றம் சாத்தியமா?

” ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தமது கட்சி ஆதரவு வழங்காது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளரான சாகர காரியவசம் கட்சியின் சார்பில் மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான யோசனையை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்வைத்த கையோடுதான் இது தொடர்பான கருத்தாடல் சமூகத்தில் உருவாகியுள்ளது.

இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் 2024 நவம்பர் மாதம் ஆகும்போது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி பதவியேற்றிருக்க வேண்டும். அப்படியானால் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு ஆகஸ்ட் மாதம் கோரப்படும், தேர்தல் ஒக்டோபரில் நடத்தப்பட வேண்டும்.

உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்ததுபோல ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்துவிட முடியாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம், அதேபோல சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த வேண்டிவரும். தற்போதைய சூழ்நிலையில் மொட்டு கட்சி வசமே நாடாளுமன்ற அதிகாரம் இருக்கின்றது. அப்படியானால் மொட்டு கட்சி செயலாளர் கூறுவதுபோல, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அக்கட்சியின் ஆதரவு கிடைக்காது, அவ்வாறு கிடைக்காவிட்டால் அந்த முயற்சி தோல்வியில் முடியும். குறிப்பாக மொட்டு கட்சியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் இல்லை.

எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான ஏற்பாடு இடம்பெறக்கூடும் என்ற ஐயப்பாடே தற்போது எழுந்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். பிரதான அரசியல் கட்சிகள் எல்லாம் இதற்கு உடன்பட்டுள்ளன. சிலவேளை இதற்கான முயற்சியை ஜனாதிபதி முன்னெடுத்தால் அதற்கு தடையாக எதிரணிகள் செயற்பட முடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது.

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தால், தேர்தலை நடத்த வேண்டியதில்லை. அப்படியானால் 2025 ஆகஸ்ட் மாதம்வரை மொட்டு கட்சி தரப்பால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற திட்டமும் இதன் பின்னணியில் உள்ளது எனக் கூறப்படுகின்றது. ஆனால் இதற்கான சாத்தியப்பாடு உள்ளதா என்பது பற்றியும் சிந்தித்தாக வேண்டும். இல்லை எனவும் கூறிவிடவும் முடியாது.

ஏனெனில் உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போட முடியாது என எதிரணிகள் கூறிவந்தன, ஆனால் தனது குள்ளநரி தந்திரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி எப்படியோ அந்த முயற்சியில் வெற்றிபெற்றுவிட்டார். அதனால்தான் ஜனாதிபதி தேர்தல் விடயத்திலும் அவர் எவ்வாறான பந்தை வீசுவார் என தெரியாமல், எதிரணிகள் விழிபிதுங்கி நிற்கின்றது. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் மொட்டு கட்சிக்குகூட ஜனாதிபதியை இன்னும் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

” ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று தற்சமயம் சமூகத்தில் கருத்தாடல் இடம்பெறுகின்றது. எனவே, ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டாக வேண்டும், தேர்தலை ஒத்திவைப்பதற்கு நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம். கட்சியின் உறுதியான நிலைப்பாடு இதுதான், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். ஏனெனில் தமக்கான ஆட்சி, பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எனவே, தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவிதத்திலும் எமது கட்சி செயற்படாது, ஒத்துழைப்பு வழங்காது.” – என்ற மொட்டு கட்சி செயலாளரின் அறிவிப்புமூலம் ஜனாதிபதியின் நகர்வு என்ன என்பது பற்றி மொட்டு கட்சிக்குகூட தெரியவில்லை என்பதே புலனாகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும், ஆனால் அந்த முறைமை நீக்கப்படும் நாளில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் உத்தரவாதம் வேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் யோசனை நியாயமாகும்.

உண்மையில் தற்போதைய அரசுக்கு மக்கள் ஆணை இல்லை. மக்களின் மனநிலையை, நிலைப்பாட்டை பிரதிபலிக்காதே நாடாளுமன்றமே தற்போது உள்ளது. எனவே, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மக்கள் ஆணை உள்ள அரசின்கீழ்தான் இடம்பெற வேண்டும்.

” ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், அதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துதல், நாடாளுமன்ற தேர்தல் முறைமையை முழுமையாக மாற்றல் போன்ற விடயங்கள் பற்றி தற்போது கதை அடிபடுகின்றன. இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான யோசனை நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி திட்டங்களை முன்னெடுப்பதற்கு – அதாவது அரசமைப்பு மறுசீரமைப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்கு மக்களை ஆணை அவசியம். தற்போதைய நாடாளுமன்றம் மக்கள் ஆணையை – நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதிகூட பதவி விலகி, நாட்டைவிட்டு ஓடினார். இப்படி பல விடயங்கள் நடந்தது. எனவே, தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. அதனால்தான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம். மக்கள் ஆணையுடன் அமையும் புதிய ஆட்சியின்கீழ் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.” என்ற சட்டத்துறை பேராசிரியரின் கருத்து நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.