You are currently viewing இதே வழியில் பயணித்தால் ரயில்வே திணைக்களத்துக்கு ‘சங்கு’தான்…!

இதே வழியில் பயணித்தால் ரயில்வே திணைக்களத்துக்கு ‘சங்கு’தான்…!

தமது தொழிலாளர் மற்றும் நாட்டின் பொதுநலன் கருதியே தொழிற்சங்கங்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனினும், கடந்த 04 ஆம் திகதி ரயில்வே கட்டுப்பாட்டாளர்களால் தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக்கொண்டே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
இதுதான் கதை, ரயில்வே உதவிக் கட்டுப்பாட்டாளரான சானக கருணாரத்ன, கடந்த 4 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் சிகரெட் ஒன்றை புகைத்தவாறு தெமட்டகொடை, மாளிகாவத்தை ரயில் பிரிவுக்குள் நுழைந்துள்ளார். இதன்போது பாதுகாப்பு கடமையில் இருந்த ரயில்வே காவலர் நீலன், புகைப்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு ரயில்வே காவலர், உப கட்டுப்பாளரிடம் கோரியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ரயில்வே உதவி கட்டுப்பாட்டாளர் சானக கருணாரத்ன, தமது கடமை அடையாள அட்டையை பாதுகாப்பு ஊழியரின் முகத்தில் எறிந்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையில் அடிதடி ஏற்பட்டு, இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
முதலில் தாக்கியது யார் என்பதை பொலிஸ் விசாரணை ஊடாகவே கண்டறியப்பட வேண்டும். பாதுகாப்பு ஊழியர்தான் முதலில் தாக்கினார் என ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இல்லை, உதவிக் கட்டுப்பாட்டாளர்தான் முதலில் தாக்கினார் என பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நீயா, நானா என்ற முட்டாள்தனமான ஈகோ பிரச்சினை இந்த இரு தரப்புகளிடையே இருப்பது தெரியவருகின்றது.
 
மேற்படி சம்பவத்தால்தான் கடந்த 4 ஆம் திகதி திடீர் தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்று, பயணிகள் அசௌகரியத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.  

இவ்வாறு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்னெடுக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் எம்.எஸ்.கே திலகரத்ன,

” திணைக்களத்திற்குள் வைத்தே தமது சங்கத்தின் ஊழியர் ஒருவர்மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும். இனி, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறமாட்டா என ரயில்வே திணைக்களம் உறுதியளிக்க வேண்டும்.” – என குறிப்பிட்டார்.
 
இந்த நியாயமற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் கடந்த 04 ஆம் திகதி சுமார் 78 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. இதனால் மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களுக்கு வருகைதந்த பயணிகள் அங்கலாய்த்தனர். குறிப்பாக தினமும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் அலுவலக ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பயணிகள் குழப்பமடைந்து, பிரச்சினையில் ஈடுபடக்கூடும் என்பதால் அர அரசாங்கம் பொலிஸாரையும் விசேட அதிரடிப்படையினரையும் ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்கு களமிறக்கியது.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து கரையோர புகையிரதத்தின் சில நிலையங்களில் கடமையாற்றும் நிலைய அதிபர்கள் தமது பாதுகாப்பிற்காக தற்காலிகமாக கடமையில் இருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
எவ்வித அறிவிப்பும் இன்றி கடந்த 4ஆம் திகதி மதியம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தம் மறுநாள் அதாவது 5ஆம் திகதி காலையிலும் தொடர்ந்ததால் அலுவலக ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
 
ஒக்டோபர் 5 ஆம் திகதி மாலை, இந்த தன்னிச்சையான  –  முட்டாள்தனமான –  அபத்தமான வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் அந்த வேலைநிறுத்தத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு தீர்வுதான் என்ன? இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு முன்னேறும் வழியை அரசு தேடவேண்டும் என்பதை நினைவூட்டுகின்றோம்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இணங்கியுள்ளது என தெரியவருகின்றது.  ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், இப்படியான பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘நடவடிக்கை’ எடுக்கப்படும் எனக் கூறினாலும் ரயில் பயணிகள் நாளாந்தம் ஏதேனும் ஒரு வகையில் அவதிப்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. வேறு வழி இல்லாததால்தான் மக்கள் ரயில் பயணத்தை தெரிவுசெய்கின்றனர். வங்குரோத்து அடைந்துள்ள நாட்டில் இப்படியான வேலைநிறுத்தங்கள் நகைச்சுவைதனமானவையாகும்.
 
2010 – 2020 இற்கு இடைப்பட்ட 10 வருட காலப்பகுதியில் ரயில்வே திணைக்களம் அடைந்துள்ள நஷ்டம் 331 பில்லியன் ரூபாவாகும். ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கான சம்பளத்துக்காக மொத்த செலவீனத்தில் 24 வீதம் ஒதுக்கப்படுகின்றது. அற்ப விடயங்களுக்காக அடிபட்டுக்கொண்டு, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு இது தெரியுமா என தெரியவில்லை?

அதளபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் பொதுபோக்குவரத்து சேவையான ரயில் சேவை, இப்படியான மடத்தனமான செயற்பாடுகளினால் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறினாலும் இப்படியான சேவையாளர்கள் இருக்கும் ரயில்வே திணைக்களம் போன்றவற்றில் முதலிட எந்த முதலீட்டாளர்தான் முன்வருவார்? இது பாரதூரமான பிரச்சினையாகும்.