You are currently viewing நீதிபதி பதவி விலகியதன் பின்னணி கண்டறியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

நீதிபதி பதவி விலகியதன் பின்னணி கண்டறியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பதவி காலம் முடிவடைந்து – அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக அவர் ஓய்வுபெற்று நாட்டைவிட்டு சென்றிருந்தால் அது சாதாரண சம்பவம். ஆனால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது எனவும், அழுத்தங்கள் உள்ளன எனவும் கூறிவிட்டே அவர் இலங்கையில் இருந்து வெளியேறி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளார். 
பதவி விலகலுக்கு அவர் கூறிய காரணங்களே பாரதூரமானவை. எனவே, இதனை தனி நபருக்கு எதிரான பிரச்சினையாக கருதாமல், ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாக கருதப்பட்டு, வெளிப்படையான விசாரணைகள்மூலம் உண்மை கண்டறியப்பட வேண்டும். இதுவே முதற்கட்ட நீதி நிவாரணமாக அமையும். 

நீதிபதி கூறும் விடயங்களை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடவும் முடியாது. நாட்டில் சிஸ்டம் என்பது அந்தநிலையில்தான் உள்ளது. குறித்த நீதிபதியை மனநோயாளி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் விமர்சித்திருந்தார். அவர் வழங்கிய தீர்ப்பையும் சாடியிருந்தார். நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் ஒளிந்துகொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். எனவே, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும், வடக்கு, கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் சரத் வீரசேகரவுக்கு எதிராக போராட்டமும் நடத்தி இருந்தனர்.

குருந்தூர் மலை விவகாரம், முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களை குறித்த நீதிபதி விசாரித்து தீர்ப்பும் வழங்கியுள்ளார். குறிப்பாக குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் அவர் வழங்கிய தீர்ப்பு சில கடும்போக்கு வாதிகள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது .

எனவே, நீதிபதிக்கு அழுத்தம் – அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே ஏற்க முடியாது.  நீதிபதிக்கு தான் அச்சுறுத்தல் எதையும் விடுக்கவில்லை என நாடாளுமன்றத்தில் நேற்று சுட்டிக்காட்டி சரத் வீரசேகர,மறைமுகமாக நீதிபதியை தாக்கி பேசி இருந்தார்.

” மேற்குலகில் அரசியல் தஞ்சம் பெறுவதற்காக தமது சுயகௌரவத்தையே காட்டிக்கொடுக்கும் நபர்களுக்கு, நிழல் தந்த தாய் நாட்டைக் காட்டிக்கொடுப்பது பெரிய விடயமாக அமையாது.” – என்று   சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், நாட்டு மக்களின் குறிப்பாக பெரும்பான்மையாக வாழ்வது சிங்கள மக்கள், அவர்களின் வரி பணத்தில் கல்வி கற்று , பல வருடங்கள் சம்பளம் பெற்று, சகல வரப்பிரதாசங்களையும் அனுபவித்துவிட்டு, சிங்கள மக்கள் தமக்கு இடையூறு விளைவிக்கின்றனர் எனக் குறிப்பிட்டு அரசியல் தஞ்சத்துக்காக வெளிநாடு செல்வது கீழ்த்தரமான செயற்பாடாகும் எனவும் அவர் விமர்சித்திருந்தார்.

நீதிபதியின் பெயரை அவர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் நீதிபதியை இலக்கு வைத்துதான் இப்படியான சொற்கணைகளைத் தொடுத்துள்ளார். அதேபோல நீதிபதியை உளவியல் நோயாளி என காணிப்பதற்கும் அவர் முற்பட்டார்.

”  நீதிபதியின் மனைவி, அவரின் நடத்தை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளார். உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு, மருந்து எடுப்பவர் என பொலிஸிலும் குறிப்பிட்டுள்ளார்.” – எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதனை பொதுவெளியில் குறிப்பிடாமல், நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் ஒளிந்துகொண்டே சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தன்னை எவரேனும் அச்சுறுத்தி இருந்தால், பிடியாணை பிறப்பிக்கும் நீதிபதிக்கு உள்ளது என்பதுஅனைவருக்கும் தெரியும். அவ்வாறான அணுகுமுறையை நீதிபதி ஏன் கையாளவில்லை. அப்படியாயின் அச்சுறுத்தல் விடுத்தது எவ்வளவு பெரிய சக்தியாக இருக்க வேண்டும். மறுபுறத்தில் நீதிபதி பதவி விலகலின் பின்னணியின் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சி இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். இப்படி பல கோணங்களில் கதைகள் வெளியாகின்றன. 

அதனால்தான் இது தொடர்பில் உண்டை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இதனை சாதாரண சம்பவமாக கருதாமல், தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையாகக் கருதி விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும். சிஐடி விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில், நீதிச்சேவை ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. பின்னணி குறித்து கண்டறிய முழு நாடும் ஆவலாக உள்ளது.

அதேவேளை, நீதிபதிக்கு நீதிகோரி யாழில் நேற்று மனித சங்கிலி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதும் உண்மை கண்டறியப்பட வேண்டும், அதற்காக சுயாதீன விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டது.