You are currently viewing இணைய வழி ‘தலை’யிடியும் – ‘சட்ட ஏற்பாடு’ எனும் தைலமும்!

இணைய வழி ‘தலை’யிடியும் – ‘சட்ட ஏற்பாடு’ எனும் தைலமும்!

‘நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்’ எனப்படும் இணையம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது நேற்று (03) நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 14 நாட்களுக்குள் (நேற்றிலிருந்து) உயர் நீதிமன்றம் செல்வதற்கு அவகாசம் உள்ளது.

இன்று சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வலைத்தளங்கள் ஊடாக பல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. குறிப்பிட்ட சில தகவல்கள்,  குறிப்பிட்ட சில ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு சென்றடைந்த யுகம் முடிவடைந்து, தற்போது பல தகவல்கள், பல ஊடகங்கள் வாயிலாக கிடைக்கப்பெறுகின்றன. இப்போது அனைவரும் ஊடகவியலாளர்களாகியுள்ளனர். தகவல்களை பரிமாற்றிவருகின்றனர். இந்த புதிய சூழலில் ஜனநாயகமும் புதிய வடிவமாக மாறியுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் உலகின் பல அரசுகளும், சமூக ஊடக நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. 

“ உலகில் 75 நாடுகள் இதுவரை 115 சட்டங்களைக் கொண்டுவந்துள்ளன. எனினும், அவற்றில் சொற்ப அளவே வெற்றியில் முடிவடைந்துள்ளது. ”  என்று மேற்படி சட்டமூலம் தொடர்பில் குடியரசு முன்னணி எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றுகையில் கலாநிதி ரங்க கலன்சூரிய சுட்டிக்காட்டினார். ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் ஏற்றுக்கொண்ட சட்டங்கள் ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளன. ஆனால் இந்த பிரச்சினையை உலகம் நன்கு அறிந்திருக்கிறது என்பதை  நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டின் அடிப்படை ஜனநாயக விழுமியங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பிரச்னையை தீர்க்க முயற்சித்து வருகின்றன. அது இன்னும் முயற்சி என்ற கட்டத்திலேயே உள்ளது. இந்த ஒழுங்கு முறைமூலம், பல நாடுகள்  பொதுத்துறையில் தலையிட முயற்சிக்கின்றன. ஆனால், ஆட்சியாளர்கள் நினைப்பது போல் அது எளிதல்ல.

சிங்கப்பூரில் இருந்து வந்த சட்டமூலம்

இலங்கையில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டு இச்சட்டமூலம் எங்கிருந்து வந்தது?  சிங்கப்பூரில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமே இங்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி சட்ட மூலத்தின் வரலாறு பற்றி எடுத்துரைக்கையிலேயே கலாநிதி ரங்க கலன்சூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சிங்கப்பூர் என்பது முழுமையான ஜனநாயக நாடு அல்ல. ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் 180 நாடுகளில் 129 வது இடத்திலேயே உள்ளது. ஊடக சுதந்திரம் உள்ள நாடாக சிங்கப்பூரை கருத முடியாது. இந்த ஒழுங்குப்படுத்தல் குறித்து 2018 இல்தான் சிங்கப்பூர் கருத்தாடலை ஆரம்பித்தது. எனனும், 2019 ஆரம்பத்தில் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. சிங்கப்பூரில் அப்போது நீதி அமைச்சராக இருந்தவரும், எமது நாட்டில் முன்னாள் நீதி அமைச்சராக இருந்த அலி சப்ரியும் சிறந்த நண்பர்கள். இந்நிலையில்தான் சிறு மாற்றங்களுடன் சட்டமூலம் வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்திலும் அரசுக்கு இந்த ஒழுங்குமுறை குறித்த அழுத்தம் இருந்தது. எனினும், அவ்விடயத்தை தொடவில்லை. உண்மையில், இது முதன் முதலில் திகன தாக்குதலின் போது, நான் அரச தகவல் திணைக்கள பணிப்பாளராக இருந்தபோது வந்தது. நாங்கள் 6 நாட்களுக்கு சமூக ஊடகங்களை முடக்கினோம். 2019 இல், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றபோது, இது மீண்டும் பேசுபொருளானது. வெறுப்பு பேச்சுக்கு எதிராகவே முதன் முதலில் அமுலுக்கு வந்தது.

2020 ஆம் ஆண்டின் முதல் வரைவு வெளிவந்த பிறகு, அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்து, சற்று பொறுமை காக்குமாறு கோரினோம். ஏனெனில் அப்போது சிங்கப்பூரில் Asia Internet Coalition உடன், நியூசிலாந்தில் நிறைவேற்றப்பட்ட சுய ஒழுங்குமுறைக் குறியீடு பற்றி பேச்சு நடத்திக்கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில், Tik Tok உட்பட அனைத்து நிறுவனங்களும்,  நியூசிலாந்தை மையமாகக் கொண்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்த நியூசிலாந்துடன் உடன்பட்டன. இது அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒன்று. இதைத்தான் நாங்கள் இங்கே செய்ய முயற்சித்தோம். உண்மையில் நீதியமைச்சர் அலி சப்ரியும் அப்போது ஊடகத்துறை அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெருமவும் இதை விரும்பினார்கள்.  போராட்டத்தின் போதும் அதன் பின்னரும் இது பற்றிய விவாதங்கள் நடந்தன. ஆனால் கூகுள் காரணமாக அந்த விவாதங்களை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. அதன்பிறகு, தற்போது இந்த சட்டமூலம் வந்துள்ளது எனவும் கலாநிதி ரங்க கலன்சூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கதையிலிருந்து இன்னொரு சாளரம் நமக்குத் திறக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இணையம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கிய பேச்சு சுதந்திரம், கருத்துரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமாக அது இருக்க வேண்டும். அது உலகத்துடன் செல்லும் ஒன்றாக இருக்க வேண்டும். கூகுள், மெட்டா, எக்ஸ் போன்ற நிறுவனங்களை புதுக்கடை நீதிமன்றத்துக்கு கொண்டுவர முடியும் என நினைத்துக்கொண்டு சட்டம் இயற்றப்படுமானால்,  அது காலத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகவே அமையும்.

மறுபுறம் இப்படியான விளையாட்டால் நாடு ஏராளமான செல்வத்தை இழப்பது மட்டுமல்லாமல், எந்த சட்டத்தையும் ஆட்சேபனையின்றி இயற்ற முடியாத சூழ்நிலையையும் உருவாகக்கூடும்.

பாகிஸ்தான் முன்னுதாரணம்

பாகிஸ்தானில் அண்மையில் இதுபோன்ற சட்டத்தை இயற்ற முற்படுகையில், கூகுள், மெட்டா போன்ற நிறுவனங்கள்,  “நீங்கள் சட்டத்தை கொண்டுவாருங்கள், நாங்கள் வெளியேறுகின்றோம்.” என அறிவித்தன. 

மே 9 சம்பவத்துக்கு பிறகு ஆகஸ்ட் 9 சம்பவம் இடம்பெறுகையில், ‘லைவ்’ போடப்படுவதை தடுக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் இலங்கை கோரியது. மே 9 லைவ் கொடுக்க முடியுமென்றால் ஏன் ஆகஸ்ட் 09 கொடுக்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் கேட்டதுடன், இது கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் எனக் கருதி, அரசின் கோரிக்கையை பேஸ்புக் நிறுவனம் நிராகரித்தது. இதுதான் உண்மை நிலைவரம். கலாநிதி ரங்க கலன்சூரிய சுட்டிக்காட்டுவதும் உண்மை நிலைவரத்தைதான். அதைத் தவிர்க்க நம்மிடம் வழி இல்லை. இதனை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் இணையம் தனி ஊடகமாக அங்கீகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், பொதுத்துறையை கட்டுப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற   சட்டங்களை திணிக்க முற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும், இந்த புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட உண்மை கண்டறியும் ஆணையம்  அபத்தமானது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு , உண்மை எது என்பதை எப்படி தீர்மானிக்க முடியுமா? ஏதேனும் ஒரு விடயம் உண்மையென தீர்மானிப்பதற்கு இச்சட்டமூலம் ஊடாக முன்வைக்கப்படும் நிர்ணயங்கள் எவை? உண்மை என்றால் என்ன? அதற்கு இச்சட்டமூலத்தில் வழங்கப்படும் பதில் என்ன? எனக்கு உண்மையெனத் தோன்றுவது மற்றையவர்களுக்கு உண்மையாக தெரியாது. ஆணைக்குழுவுக்கு உண்மையென தோன்றுவது , குடிமகனுக்கு தோன்றாமல் இருக்கலாம். ஆக தண்டனை நடைமுறை எவ்வாறு செயற்படுத்தப்படும்?

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்

அரசியலமைப்பின் 14(1)(a) பிரிவைப் படிக்கவும், இனம், மதம் மற்றும் நல்லிணக்கம் அல்லது பாராளுமன்ற சிறப்புரிமை, நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடாமல், சுதந்திரமாக கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் உள்ளது. 

ஆனால் இந்த புதிய சட்டமூலம், அரசியலமைப்பின் 14 மற்றும் பிரிவு 15(2) ஆகியவற்றின் வரம்புகளை மீறியுள்ளது. இத்தகைய பரந்த சட்டமூலம் இறுதியில் குடிமகனின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையே பாதிக்கும். இது ICCPR சட்டத்தை விட அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்படும்.

இந்த சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பிரிவினையை மீறுவது மட்டுமின்றி, நிர்வாகச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் மீறுகிறது என்பதை தெளிவாகின்றது. எனவே,  புதிய சட்டமூலத்தை வாபஸ் பெற்று, நியூசிலாந்து போன்ற நாட்டை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். பொதுத்துறையை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தாமல், மேலும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஜனநாயக சீர்திருத்தங்களை நோக்கியே நகர்வுகள் இடம்பெற வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

கலாநிதி ரங்க கலன்சூரிய கூறுவதுபோல், நியூசிலாந்து முறைமையை இலங்கைக்குள் ஸ்தாபிப்பது கடினமான காரியம் அல்ல.  இங்கே என்ன நடக்கிறது என்றால்,  இலங்கையில் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன குழு மூலம்,  இலங்கை தொடர்பான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு Google, Meta மற்றும் X போன்ற 16 நிறுவனங்களுடன் உடன்படிக்கைக்கு வர முற்படுகின்றனர். இந்த ஒழுங்குமுறை பொறிமுறையானது ஒரு சுய ஒழுங்குமுறை கட்டமைப்பாகும். 

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள், காவல்துறையின் பிரதிநிதிகள் போன்றவர்கள் ஒரு சுயாதீன குழுவை உருவாக்கும் ஒரு குழுவின் மூலம் (ஒரு கமிஷன் கூட உருவாக்கப்படலாம்) இது நடக்கிறது. இந்தக் குழுவின் செயல்பாட்டிற்காக ஒரு செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது,  மேற்கூறிய நிறுவனங்களுக்கு அந்த அலுவலகத்தை பராமரிக்கவும் நடத்தவும் தேவையான நிதி பலம் உள்ளது.

கலந்துரையாடலின் போது மேற்படி நிறுவனங்கள் இந்த அலுவலகத்தை பராமரிப்பதற்கு நிதியுதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக கலாநிதி ரங்க கலன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.  மேலும், ஐக்கிய நாடுகள் சபையும் இதற்கு இணங்கி இருந்தது.

இவ்வாறு உருவாக்கப்படும் குழு இணையவெளியில்,  ஸ்ரீலங்கா தொடர்பான உள்ளடக்கத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. அதன்படி, நிறுவனங்களுடனான ஒப்பந்தம் காரணமாக, நிறுவனங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அறிக்கையிடப்பட்ட உள்ளடக்கத்திற்கு அந்த நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பின்தொடரவும், அதைப் பற்றி நிறுவனங்களிடம் கேட்கவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கலாநிதி ரங்க கலன்சூரியவின் கருத்துப்படி, நிறுவனங்கள் இந்த பொறிமுறையை வலுப்படுத்த விரும்புகின்றன. ஏனெனில் இதன் மூலம் வெறுப்புப் பேச்சு போன்றவற்றைக் கட்டுப்படுத்த தாங்கள் சுமக்க வேண்டிய கூடுதல் சுமையைத் தவிர்க்க முடியும். எனவே, அரசு உடனடியாக இந்த ஒழுங்குமுறையை கொண்டு வர விரும்பினால், இதுபோன்ற இணைய ஒழுங்குமுறைக்கு தேவையான பின்னணியை உடனடியாக உருவாக்க வேண்டும். சிவில் அமைப்புகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும்.