You are currently viewing “வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”

“வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”

‘சூப்பர் மார்க்கெட்’ வலையமைப்பொன்றுக்கு உரித்தான பொரளை பகுதியிலுள்ள கிளையொன்றுக்கு கடந்த 22 ஆம் திகதி சென்றிருந்த யுவதியொருவர், ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது பரவியுள்ளது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் மாறியது. தாக்குதல் நடத்திய 4 பெண் ஊழியர்களும், மூன்று ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
 
தாக்குதலுக்கு இலக்கான பெண் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அப்பெண் இவ்வாறு ‘சூப்பர் மார்கட்’டுகளில் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் எனவும், எனினும், தாக்குதல் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் விற்பனை நிலையமொன்றில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதுடன், அப்போதும் அது தொடர்பில் அதிகம் பேசப்பட்டதுடன், எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலை இலங்கைக்கு புதிதல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். கிராமத்து பெட்டிக்கடை முதல் பல்பொருள் அங்காடி வரை இப்படி எண்ணற்ற சம்பவங்கள் தினமும் நடக்கின்றன.

விற்பனை நிலையங்களில் நுகர்வோரே பெறுமதிமிக்க நபராக கருதப்படுவார். வளர்ச்சியடைந்த நாடுகளில் நுகர்வோருக்கு வர்த்தக நிலையங்களில் ராஜாவுக்குபோல் மதிப்பு வழங்கப்படும். மேற்படி நாடுகளில் அவ்வாறு நடப்பதும், இலங்கையில் நடக்காமல் இருப்பதும் ஏன்? சட்டத்தால் முறையாக கட்டுப்படுத்தக்கூடிய ‘சிஸ்டம்’ ஒன்று இல்லாமையே இதற்கு பிரதான காரணம்.
 
நுகர்வோரை பாதுகாக்க சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருந்தாலும் அவை செயற்படுத்தப்படுவதில்லை. அவ்வாறு செயற்பட்டாலும் அது வர்த்தகருக்காகவே செயற்படுத்தப்படுகின்றது, மாறாக நுகர்வோருக்காக அல்ல. பணபலம் மற்றும் அரசியல் பலமே இதற்குக் காரணம்.  

அதேவேளை இலங்கையில் உள்ள நுகர்வோருக்கு சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் போதிய தெளிவூட்டல் இல்லை. சந்தைப்படுத்தலின்போது நுகர்வோரின் திருப்தியே மிக முக்கியம். ஆனால் விற்பனையின்போது அது அவ்வாறு அல்ல. கிராமத்தில் பெட்டி கடையொன்றில் உள்ள விற்பனை முறைமைக்கும் நகரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் உள்ள விற்பனை முறைமைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் சந்தைப்படுத்தல் இடம்பெறுகின்றது. அங்கு வாடிக்கையாளர்கள் திருப்திப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு நுகர்வோர் திட்டப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர், அவமானப்படுத்தப்படுகின்றனர். பொது போக்குவரத்து இதற்கு சிறந்த உதாரணம். பஸ்ஸில் ஏறுவது முதல் அதில் இருந்து இறங்கும் வரை நுவர்வோர், உரிமைகளை மீறும் கலாச்சாரம் பொது போக்குவரத்து சேவையில் காணப்படுகின்றது.

பஸ்ஸில் சத்தமாக ஒலிபரப்படும் கேசட் பிளேயரின் சத்தத்தைக் குறைக்கச் சொன்னால், பெரும்பாலான நடத்துனர்கள் வாடிக்கையாளரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடுகின்றனர். சில சமயங்களில் சண்டைகூட ஏற்படுகின்றது. அதேபோல இலக்கை அடைவதற்குள் பஸ்ஸில் இருந்து இறங்க வேண்டிய நிலையும் ஏற்படும். சில பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டி பயணிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் எண்ணற்ற சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இப்படியான சம்பவங்கள் அதிகரிக்கின்றதேதவிர குறைந்தபாடில்லை. தற்போதுள்ள முறைமை மாறவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.

கடந்த காலங்களில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்க்கூட நுகர்வோருக்கு வழங்கப்பட்டது. ஒரே தேங்காய் எண்ணெய் போத்தலில் பலமுறை தீன்பண்டங்களை பொறிக்கும் வியாபாரிகளும் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். நுகர்வோர் என்ற அடிப்படையில் நாம் அவற்றை எதிர்த்து கேட்கின்றாமோ? குரல் எழுப்புகின்றோமோ? இல்லை.

அரச நிறுவனங்களிடமிருந்து நுகர்வோருக்கு சிறந்த சேவை கிடைக்கப்பெறவில்லை. இலங்கையின் தனியார் துறையை எடுத்துக்கொண்டாலும் பாரிய வித்தியாசம் இல்லை. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் சந்தை அமைப்பை நிறுவும் எண்ணம் இலங்கையின் தனியார் துறைக்கும் இல்லை.

பொரளை ‘சுப்பர் மார்க்கெட்’ சம்பவம், நுகர்வோருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் திருப்தியடையும் வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாடுகள் கூட   ஊழியர்களுக்கு போதிக்கப்படவில்லை என்பது புலனாகின்றது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு வர்த்தக நிறுவனம், இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான நடத்தையை வெளிப்படுத்தும்போது, ​​ஒரு நாடு என்ற வகையில் நாம் எந்த மட்டத்தில் உள்ளோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சி நாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு நடக்கும்வரை, நாம் இவ்வாறு கதைப்பதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலவே அமையும்.