You are currently viewing திலீபன் நினைவேந்தல் பேரணியும் – பொலிஸாரின் பாராமுகமும்

திலீபன் நினைவேந்தல் பேரணியும் – பொலிஸாரின் பாராமுகமும்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த திலீபன் எனப்படும் ராசையா பார்த்திபனின் நினைவாக பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம்வரை பயணித்துக்கொண்டிருந்த வாகன பேரணிமீது கடந்த 17 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தே சிங்களவர்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் உள்ளடங்குகின்றார்.

பொலிஸாரின் கூற்றின் பிரகாரம் சர்தாபுரம் பகுதியில் வைத்தே வாகன பேரணிமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவிவருகின்றன.  அந்த காணொளிகளை பார்க்கும்போது சில கேள்விகள் எழுவது இயல்பே.

1. திலீபன் உருவப்படம் தாங்கிய வாகன பேரணிமீது மக்கள் தாக்குதல் நடத்துகையில் ​​அதனை தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

2. திலீபனை நினைவுகூர வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு உரிமை இல்லையா? 

3. உரிமை இல்லையெனில், அது தொடர்பில் அறிவிப்பு விடுத்தது யார்? அதன் சட்டப்பூர்வதன்மை என்ன? 

4. பொலிஸாரை அவ்வாறு பார்த்துக்கொண்டிருக்குமாறு கட்டளையிட்டது யார்?

5. இந்த வாகன பேரணி சட்டவிரோதம் எனில் பொத்துவில் பகுதியிலேயே அதனை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

6. வடக்கு, கிழக்கு தமிழ், சிங்கள மக்களிடையே இன முறுகலை ஏற்படுத்துவதற்கு ஏதேனும் தரப்பு முயற்சித்து கொண்டிருக்கின்றதா? 

இந்த கேள்விகள் தொடர்பில் கருத்தாடலுக்கு இடமளித்துவிட்டு, இதர விடயங்கள் பற்றி அவதானம் செலுத்துவோம். 

” மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.”

மேற்படி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் என்கிற இராசையா பார்த்திபன் 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். எனினும், இந்திய அரசிடமிருந்தோ அல்லது இலங்கை அரசிடமிருந்தோ எந்தவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை.

1987 செப்டம்பர் 26 ஆம் திகதி திலீபன் காலமானார். அவரின் மரணம் –  வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு வீரம், தியாகம் தொடர்பான கதையாகும். ஹலசக காமினியை தெற்கு மாவீரராக கொண்டாடுகின்றது. அதேபோல வடக்கில் திலீபன் மாவீரர் ஆகின்றார். இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திலீபன் பயங்கரவாதி, திலீபனால்தான் பயங்கரவாதம் ஏற்பட்டது போன்ற அறிக்கைகளைத் தவிர்த்து, இது குறித்து தெற்கில் நியாயமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.  

1971 கிளர்ச்சி மற்றும் 1988-89 கிளர்ச்சியின்போது உயிரிழந்தவர்களை மாவீரர்களாக கொண்டாடும் உரிமை தெற்கு சிங்கள மக்களுக்கு இருப்பதுபோல் வடக்குக்கும் அந்த உரிமை உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. வடக்கில் புலிகள் அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களை நாம் பார்க்கும்கோணத்தை பொறுத்தே அவர்கள் பயங்கரவாதிகளாகின்றனர். 

தெற்கில் உள்ள எமக்கு அவர்கள் பயங்கரவாதிகளாக இருந்தாலும், வடக்கில் பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் விடுதலைப் போராளிகளே.

தமிழர்களுக்கு தனிநாட்டை பெற்றுக்கொடுப்பதற்காக அவர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர் என வடக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் கருதுகின்றனர். நாட்டை பிளவுபடுத்த முற்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் தெற்குக்கு எவ்வாறு வீரர்களாகின்றார்களோ, அதுபோல்தான் புலிகள் வடக்கில் கருதப்படுகின்றனர். இதனை எம்மால் புரிந்துகொள்ள முடியுமானால் இடியப்ப சிக்கலில் இருந்து எம்மால் இலகுவில் மீண்டுவிடமுடியும். 

வடக்கின் தமிழ் அடையாளத்தை மறந்து எம்மால் வடக்கை வெல்ல முடியாது.  அத்துடன், தென்னிலங்கை சிங்களவர் என்ற அடையாளத்தை மறந்து வடக்குடன் பேச்சு நடத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கபோவதும் இல்லை. 

எனவே, இவ்வாறான நினைவேந்தல்களை தாக்குவதன் மூலமோ அல்லது நினைவேந்தல்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதன் மூலமோ இந்தப் பிரச்சினையை நீதியாகவும், நியாயமாகவும் தீர்க்க முடியாது. இவ்விவகாரத்தை முறையாக கையாள வேண்டும். 

நினைவேந்தலை நடத்துவதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இதுவிடயத்தில் அரசு தலையிட வேண்டும். நினைவேந்தல்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் நபரகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தில் காவல்துறையினரின் நடத்தை மிகவும் முக்கியமானது என்பதை குறிப்பிட வேண்டும். 

நினைவேந்தலுக்கு இடமளிக்கும் அதேவேளை, மேலும் பல மாவீரர்கள் உருவாகாமல் இருப்பதற்கான வழிவகைகளையும் அரசு செய்ய வேண்டும். நீடித்த அமைதி மற்றும் ஒற்றுமைக்காக அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை அரசு வலியுறுத்த வேண்டும். அதற்கு, மக்களுக்கு இடையே உறவு பாலம் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும். சுதந்திரமான வாழ்வுக்கு இடமளித்து அதன்மூலம் நாட்டை ஐக்கியப்படுத்த முடியும்.