You are currently viewing சனல் – 4 குண்டும் – தோல்வியடைந்த இலங்கையும்!

சனல் – 4 குண்டும் – தோல்வியடைந்த இலங்கையும்!

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது. இவ்வாறு போர் முடிவடைந்திருந்தாலும் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய வடக்கில் உள்ள தாய்மார் இன்னும் போராடிவருகின்றனர். இலங்கையில் நீண்ட நாட்கள் நடைபெற்றுவரும் போராட்டம் இதுவாகும்.

உண்மை மற்றும் நீதி

உண்மை கண்டறியப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்தக் கோரிக்கைக்கு இலங்கை அரசின் பதில் என்ன?

நல்லாட்சி ஆட்சிகாலத்தில் நிலைமாறுகால நீதிக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் சில வேலைகள் முன்னெடுக்கப்படுவதுபோல் காண்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போது பார்க்கையில் அவையும் காத்திரமான நடவடிக்கை அல்ல என்பது தெளிவாகின்றது. 

2015 இல் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசு ஆட்சிக்குவரும்போது, ​லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட  காணாமல் ஆக்கப்பட்டமை, வசீம் தாஜுதீன் கொலை, சிவராம் கொலை மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்தன. இவற்றுக்கு நல்லாட்சியில் நீதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் என்ன நடந்தது?   சில அரச உயர் அதிகாரிகளின் நடவடிக்கையால் விசாரணைகள் வழிதவறி, நீதிக்கான செயல்முறை  ரப்பர் பந்து போல தண்ணீருக்கு அடியில் மறைக்கப்பட்டது. எனினும், அந்த ரப்பர் பந்து தற்போது நீர் பரப்புக்கு வந்துள்ளது.

தோல்வி

இவ்வாறானதொரு பின்புலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையையும்,   தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர்களைத் தண்டிக்கும் செயல்முறையையும் பார்த்தால், நமக்கு என்ன தெரிகிறது? இலங்கை அரசு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய துறைகளில் தோல்வி அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏதேனும் குற்றச்சம்பவம் நடைபெற்ற பிறகு நீதிக்காக மக்கள் குரல் எழுப்ப வேண்டிவராது. இன்று ஏதேனும் ஒரு சம்பவம் நடைபெற்றால் அது தொடர்பில் நீதியை நிலைநாட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி எட்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தற்கொலை குண்டுதாரிகள் உட்பட 277 பேர் உயிரிழந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளும் இதில் உள்ளடங்குகின்றனர். மேலும்  
407 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, கொலையாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் எனக்கூறியே கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி அரியணையேறியது. உண்மை கண்டறியப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், இதுபோன்ற அம்பாவிதம் மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பவற்றையே மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் நடந்தது என்ன? உண்மையை கண்டறிந்து நீதியை வழங்குவதாகக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கமோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமோ காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இரு தரப்புகளுமே மூடிமறைப்பு அணுகுமுறையையே பின்பற்றின. இதற்காக தெரிவுக்குழுக்கள், ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் என்பன பயன்படுத்தப்பட்டன.

சிஐடி விசாரணைகள் சரியான வழியில் சென்றுகொண்டிருந்தாலும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இதனால் விசாரணையும் திசைமாறியது எனலாம்.
உண்மையை மறைக்க முடியாது, என்றோவொரு நாள் தனக்கே உரிய பாணியில் அது மீண்டெழும். தற்போது பிரிட்டனின் சனல் – 4 அலைவரிசையால் வெளியிடப்பட்டுள்ள காணொளியையடுத்து இவ்விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ‘அபுஹின்’, ‘சொனிக், சொனிக்’ போன்ற விவகாரங்கள் சர்ச்சையாக இருந்தன. இது திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கான சான்றுகளாக அவை கருதப்பட்டன. சனல் – 4 காணொளி வெளிவந்த பின்னர் இவை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

சனல் – 4

“Sri Lanka bombings: were 269 people killed for political power? Dispatches exclusive” என தலைப்பிடப்பட்டுள்ள இந்த காணொளியின் பிரதான சாட்சியாளர்தான் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடக செயலாளராக பணியாற்றிய அசாத் மௌலானா. உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் தற்போது வெளிநாட்டில் வசித்துவருகின்றார்.

ஆசாத் மௌலானா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சத்தியக்கடதாசியுடன் வாக்குமூலமொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும்,  ஐரோப்பாவில் உள்ள பல குற்றப் புலனாய்வு அமைப்புகளுக்கும் அவர் தனது சாட்சியத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘இதனை மனதுக்குள் மறைத்துக்கொண்டு அனுபவித்த வலி போதும்’ என கூறியுள்ள அசாத் மௌலானா , எனவேதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம்பெற்ற தமக்கு தெரிந்த அனைத்தையும் பகிரங்கப்படுத்த தீர்மானித்ததாக கூறியுள்ளார்.  

என்ன நடந்தது?

இக்காணொளி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் கலாநிதி தயான் ஜயதிலக்க இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

” இந்தத் தாக்குதல் குறித்து நமது பாதுகாப்புப் படையினருக்கு இந்தியா முன்னரே தெரிவித்திருந்தது. 5 உயர் அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் கிடைத்தது. ஆனால் இது தொடர்பில் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது நான் கேட்கிறேன்,  இந்த ஐந்து அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?’ ” என்ற தயான் ஜயதிலக்கின் இந்த கேள்வி முக்கியமானது.

இதுதான் இலங்கையில் உள்ள பிரதான பிரச்சினை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக இலங்கை எதையும் செய்யவில்லை. மாறாக பிரச்சினைகளை மூடிமறைக்கும் செயலே இடம்பெற்றுவந்துள்ளது.

அரச புலனாய்வு பிரிவு பிரதானி சலே தலைமையிலான புலனாய்வு பிரிவு இந்த தாக்குதல் பற்றி அறிந்திருந்தது என்பதும், இத்தாக்குதலின் பின்னணியில் அவர்கள் இருக்கின்றனர் என்பதும் இக்காணொளிமூலம் அம்பலப்படுத்தப்படும் பிரதான தகவலாகும். அசாத் மௌலானாவால் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இது தொடர்பில் அரசு அதிர்ச்சியடையவில்லையா?

உலகில் வேறேதும் ஒரு நாட்டில்,  உளவுத்துறை  தலைவர் மீது இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்தால், அங்குள்ள அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரியை கட்டாய விடுமுறையில் அனுப்பும், அவரின் பணி இடைநிறுத்தப்பட்டு உடன் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படும்.

ஆனால் எமது நாட்டு பாதுகாப்பு அமைச்சு என்ன செய்தது? சனல் – 4 காணொளியை விமர்சித்து, தமது அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளது. பாராமன்ற தெரிவுக்குழு அமைப்பது பற்றியும் பேசப்படுகின்றது. அரசாங்கம் இன்னும் மாறவில்லை, மாற தயாராகவும் இல்லை என்பதுதான் இதன்மூலம் புலனாகின்றது. இங்குதான் பிரச்சினையும் உள்ளது.
 
தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த அதிகாரிகளில் இருவர், அடுத்த பொலிஸ்மா அதிபருக்குரிய போட்டியிலும் தற்போது உள்ளனர். நாட்டில் சிஸ்டம் என்பது சாக்கடையாகவே உள்ளது என்பதைதவிர இதன்மூலம் வேறு என்ன புலப்படுகின்றது?

தாக்குதலை தடுக்க தவறியதால் உயர்நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, பொலிஸில் தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது.
நாளை அவர் பொலிஸ்மா அதிபராகக்கூட நியமிக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தின் நடத்தை – நடப்பு என்பது அவ்வாறே உள்ளது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துகின்றோம். வடக்கில் காணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரம், தெற்கில் படுகொலை மற்றும் கடத்தல் விவகாரங்களில் கையாளும் இழுத்தடிப்பு அணுகுமுறையை விடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசு உடன் தலையிட வேண்டும். உலகின் முன் இனியும் தோல்வி அடைந்த நாடாக இருக்காமல் காத்திரமான நடவடிக்கை இது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டும்.