You are currently viewing ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்தாத அரசுக்கு  IMF இன் ஆசி கிட்டுமா?

ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்தாத அரசுக்கு  IMF இன் ஆசி கிட்டுமா?

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காக இலங்கைவரும் இக் குழுவினர் 27 ஆம் திகதிவரை தங்கியிருப்பார்கள்.

இக்குழுவின் இலங்கை வருகை தொடர்பில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் விரிவான கடன் வசதியின் இரண்டாம் கட்டத்தை பெற முடியாமல்போகுமா என்ற கேள்வியும் எழுப்படுகின்றது. இத்தகைய தயக்கத்திற்கு என்ன காரணம்?

இலங்கையில் நிதி அதிகாரம் என்பது அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. பொது நிதிக்குழுவே இதற்கான விவகாரங்களைக் கையாளும். இக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பதவி வகிக்கின்றார்.

இந்நிலையில் சர்வதேச நாணய விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ‘சிரச’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பெதிகட’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தார். இதன்போது ஐ.எம்.எப்பின் அடுத்த கடன் தவணை கிடைக்கப்பெறுமா என கேள்வி எழுப்பட்டது, இதற்கு பதிலளித்த அவர் நாம் இன்னும்  ‘இருளில்தான்’ இருக்கிறோம் என சுட்டிக்காட்டியிருந்தார்.

நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது என மார்தட்டப்பட்டாலும் ஐஎம்எப் திட்டத்தில் என்ன நடக்கின்றது என்பது நாடாளுமன்றத்துக்கு தெரியாது என்பதே இக்கூற்றின்மூலம் புலனாகின்றது. நிலைமை இவ்வாறு இருக்கையில், ஈராண்டுகளுக்குள் நடைமுறைக்குவரவுள்ள ஐஎம்எப்பின் இலங்கை தொடர்பான வேலைத்திட்டத்துக்கு என்ன நடக்கும் என்பதும், 

மீளாய்வுக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கைவரவுள்ள ஐஎம்எப் குழுவுக்கு நாம் என்ன கூறப்போகின்றோம், எவ்வாறான விடயங்களை முன்வைக்கப்போகின்றோம் என்பதும் ஊகிக்க முடியாத விடயங்களாக உள்ளன. 

ஐஎம்எப்பின் விரிவான கடன்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு தவணை முறையில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 333 மில்லியன் அ.டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த விரிவான கடன் வசதியை அங்கீகரித்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில், இலங்கையில் சர்ச்சைக்குரிய வரிக்கொள்கைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், அரச செலவீனம் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் எனவும், எரிசக்தி நிவாரணம்போன்ற நிவாரணங்கள் இல்லாது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் அதேவேளை, இலங்கை கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார ஸ்தீரத்தன்மையை அடைதல், கடன் மறுசீரமைப்பு, சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல், நிதி ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தல், அரச நிர்வாக பொறிமுறையை மறுசீரமைப்பு செய்தல்,  பொருளாதாரத்தை மறுசீரமைத்தல், ஊழல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஊழல் தடுப்பு சட்டங்களை இயற்றல் என்பன உட்பட மேலும் பல விடயங்கள் நிபந்தனை பட்டியலில் உள்ளடங்கும்.

நாட்டின் வருமானம் மற்றும் செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், கடன் பெறுவதற்காக 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை அணுகியுள்ளது. நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நிலையில் இம்முறை 17 ஆவது தடவையும் ஐஎம்எப் ஐ இலங்கை நாடியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஐஎம்எப் நிபந்தனைகள் முக்கியமானவை.

கடந்த 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடி இருந்தாலும், காத்திரமான மறுசீரமைப்புகள் இடம்பெறவில்லை. இப்படியான வரலாற்றை கொண்டுள்ள நாடு இம்முறை தனது கடப்பாற்றை நிறைவேற்றுமா என்ற ஐயப்பாடு எழுவது இயல்பே.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடந்த காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றியும் சந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கும்போது 2ஆம் கட்ட கடன் தவணை கிடைக்குமா என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுவது நியாயமே.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த வேலைத்திட்டங்களில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்கள் எவை? இன்னும் எவ்வளவு விடயங்கள் செய்ய வேண்டும்? இவை குறித்தே மீளாய்வின்போது கவனம் செலுத்தப்படும்.

PublicFinance.lk என்ற முகநூல் பக்கத்துக்கு சென்றால், அவர்கள் ஐஎம்எப் மீட்டர் குறித்து ஜுன் மாதம்வரை அப்பேட் செய்திருப்பதை காண முடியும்.

செப்டம்பர்வரை 71 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும், ஆனால் ஜுன் மாதம்வரை 33 உறுதிமொழிகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜுன் மாதத்தை பற்றியே கதைக்கின்றனர், இது செப்டம்பர் மாதம், மீளாய்வு நெருங்கும்வேளை, எனவே, உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என சிலர் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல.

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கான திகதி கடந்த 28 ஆம் திகதியென நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும்  அது செப்டம்பர் 11 ஆம் தேதி வரை தாமதமாகியுள்ளது. வரி திருத்த சட்டமூலமும் தாமதமாகும் எனக் கூறப்படுகின்றது. எனவே, எஞ்சிய உறுதிமொழிகளை செப்டம்பருக்குள் நிறைவேற்ற முடியாது என்பதே தெரிகின்றது.

மறுபுறத்தில் ஊழியர்களின் ஓய்வூதி நிதியங்களுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வியுடன் தொழிற்சங்கங்கள் வீதிக்கு வந்துள்ளன.   இந்நிலைமை அரசுக்கு அவ்வளவு எளிதாக அமையப்போவதில்லை. மே மாதம் ஆகும்வரை நிறைவேற்றப்படாமல் இருந்த உறுதிமொழிகள் எவை?

1. வரி வருமானத்தை 650 பில்லியன் ரூபாவாக உயர்த்துதல்

2. பந்தயம் மற்றும் மதுபான வரி சட்டத்தில் திருத்தம்

3. மத்திய வங்கி சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறுதல்

4. முலதனம் மற்றும் வரிச்சலுகை வழங்குவது தொடர்பான தகவல்களை அனைவருக்கும் பார்கக கூடிய வகையில் இணையதளமொன்றை உருவாக்குதல்

ஜுன் மாதம் ஆகும்வரையும் இவை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் இவற்றுடன் ஜுன் மாதத்தில் மேலும் பல விடயங்கள் இணைந்துவிட்டன.

1. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி பெறுதல்

2. ஊழல் எதிர்ப்பு சட்டங்களை புதுப்பித்தல், புதிய சட்டம்

3. அரசுக்கு சொந்தமான 52 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் வெளியிடுதல்

4.இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் வேலைத்திட்டத்தை பகிரங்கப்படுத்தல்

இவற்றை அவதானித்தால் அரசு ஏன் பின்வாங்குகின்றது என்பது தெளிவாகின்றது. சட்டங்களை அமுல்படுத்துவதில் விக்கிரமசிங்க அரசின்  அக்கறையின்மையை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆமை வேகத்திலேயே இடம்பெறுகின்றன.

மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் பந்தய வரி திருத்தம் போன்ற சட்டமூலங்கள் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தாலும்,  அவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றும் விடயத்தில் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.

எனினும், ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தற்போது நல்ல இடத்தில் உள்ளது. கடந்த காலங்களில் கசினோக்களுக்கு வரிஅறவிடப்பட்டதாக கூறப்பட்ட போதும் அரசு ஒரு சதம்கூ வரி அறவிடவில்லை. எனவே, பந்தய வரி திருத்தம் போன்றவை முக்கியமானவை.

கடன் மறுசீரமைப்பு என்பது எவருக்கும் அநீதி இழைக்காத வகையில் இடம்பெற வேண்டும் என மக்கள் கருதுகின்றனர். EPF/ETF தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. கடன் மறுசீரமைப்பின்போது ஓய்வூதிய நிதியங்களில் மாத்திரம் கைவைக்கப்படுவது ஏன் என்ற வினாவும் எழுகின்றது.

 
பாரிய அளவிலான முதலீடுகளுக்கு வரம்பற்ற வரிச்சலுகைகள் வழங்கப்பட்டாலும், அந்த வரிச்சலுகைகளால் நாட்டுக்கு என்ன லாபம் என்று மத்திய வங்கிக்கோ அல்லது எந்த நிறுவனத்திற்கோ தெரியாது. அதை யாரும் ஆராய்ந்து மதிப்பீடு செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் விளைவாக, வரிச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

வரிச்சலுகைக்கு தகுதியானவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட ஆன்லைன் தளத்தை உருவாக்க IMF கேட்டுக் கொண்டாலும், அது நிறைவேறவில்லை. ஏனெனில் யாருக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டால் அது அரசாங்கத்துக்கும் உயர் அரசியல் வர்க்கத்துக்கும் பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.

பணக்காரர்களுக்கு வரிச்சலுகை வழங்கும் அதேவேளை, சாமானியர்களுக்கு வரி விதிக்கும் கலாச்சாரமும் அதன் மூலம் அம்பலப்படுத்த முடியும்.எனவேதான் இழுத்தடிப்புகள் இடம்பெறுகின்றன என்ற சந்தேகமும் நியாயமானதே.

அரசுக்கு சொந்தமான 52 தொழில் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையை வெளியிட கடமைபட்டிருந்தாலும் 2022 ஆம் ஆண்டுக்குள் 11 தொழில்கள் மட்டுமே அத்தகைய அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

மக்களின் வரி பணத்தில் இயங்கும் நிறுவனங்கள் தம்மை பற்றிய தகவல்களை வழங்குவதற்கு காத்திருக்க வேண்டுமா? அவ்வாறு இல்லை. தகவல் ஏன் வழங்கப்படவில்லை? அந்த தகவல்மூலம் ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

2048 கொள்கை பற்றியும், நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பேன் என ஜனாதிபதி கூறிவந்தாலும், ஊழல், மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான அவரின் அணுகுமுறை மந்த கதியிலேயே உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுமா, அதற்கான வேலைத்திட்டம் என்ன? மீளாய்வின்போது இதில் திருப்தி இருந்தால் மட்டுமே அடுத்த தவணை கடன் பற்றி சாதக பலனை எதிர்பார்க்ககூடும்.