You are currently viewing ” இனப்பிரச்சினை கட்டாயம் தீர்க்கப்பட வேண்டும்”

” இனப்பிரச்சினை கட்டாயம் தீர்க்கப்பட வேண்டும்”

மாவை சேனாதிராஜா, தமிழர்களின் விடுதலைக்கான அரசியற் பயணத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர். இளைஞராக இருந்த காலத்தில் அரசியற் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். இலங்கை இந்திய, சர்வதேச அரசியல் தலைவர்களுடனும் இராஜதந்திர வட்டாரங்களிலும் அறிமுகமானவர்.

எஸ்.ஜே.வி. செல்வநாயம், ஜீ.ஜீ. பொன்னம்பலம், அமிர்தலிங்கம்,   சம்பந்தன் ஆகிய தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். பல அரசியல் நெருக்கடிகளின் ஊடாகப் பயணித்த மாவை சேனாதிராஜா , இலங்கை நாடாளுமன்றத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் செயற்பட்டிருக்கிறார். தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் சேனாதிராஜாவுடன் நடத்திய நேர்காணல் இது.

கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வரும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளைப் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு பழுத்த ஜனநாயக ரீதியில் ஆற்றல், அறிவு கொண்ட அரசியல் தலைவர். 2005 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர். அத் தேர்தலில் இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அரசியலமைப்பினால் தீர்வுகாண வேண்டுமென அறிவித்துப் போட்டியிட்டவர். இரண்டு இலட்சம் வாக்குகள் மேலும் பெற்றிருந்தால் ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருப்பார். ஆனால் தமிழ் மக்கள் வாக்களிப்பை பகிஷ்கரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதால் ரணில் வெற்றி பெறவில்லை. சிங்கள மக்கள், பெருமளவில் சமஷ்டி அரசியலமைப்பை அறிவித்திருந்த வேட்பாளர் ரணிலுக்கு வாக்களித்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை இலங்கையும் தமிழ் மக்களும் இழந்து விட்டனர்.

தற்பொழுது அவரும் ஐ.தே. கட்சியும் சென்ற பொதுத் தேர்தலில் அவ்வளவு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்காத பிளவுபட்ட ஐ.தே. கட்சியின் தலைவர். ராஜபக்சக்களின் ஆட்சி சிங்களப் பொது மக்களின் கிளர்ச்சியினால் வீழ்த்தப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க தன்னந்தனியான ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுதும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆதரவுடன் பிரதமராகி 134 வாக்குகளை நாடாளுமன்றத்தில் பெற்று, ஜனாதிபதியாகியுள்ளார். தற்போதைய நிலையில் தமிழினப் பிரச்சினைக்கு ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வு நிறைந்த சமஷ்டி அரசியலமைப்பின் தீர்வொன்றை ஏற்படுத்த முடியும் என்பது பெருங் கேள்வியே. அவ்வாறு ஒரு தீர்வு ஏற்படுமானால் அதுவும் ஆச்சரியமே.

கேள்வி : 13 ஆவது திருத்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்தினால் அதில் வரையறுக்கப்பட்ட அளவிலான பொலிஸ் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றிருக்கும்போது, அதை வலியுறுத்திக் கூறுவது இனவாதிகளை உற்சாகப்படுத்தி விடுவதாக அமையுமல்லவா?

பதில்: 13 ஆவது அரசியலமைப்பு விதியில் பொலிஸ் அதிகாரப் பகிர்வை விட்டு ஒரு தீர்வை ஏற்படுத்தலாமா என்று பரீட்சித்துப் பார்க்கிறார் ரணில். இம் முயற்சியை இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக ஏற்க முடியாது. இன்றுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வுக்கு இடமளிக்காது. ‘திவநெகும’ அரசியலமைப்புத் திருத்தம் பகிரப்பட்ட அரசியலமைப்பையும் திரும்பப் பெறுவதற்கேயுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஆட்சியொன்றினால் (மத்தியில் ஒற்றை ஆட்சியில்) அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை.

புதிய சமஷ்டி அரசியலமைப்பினால் மாத்திரமே அதிகாரப் பகிர்வுக்கு இடமுண்டு. ஜனாதிபதி ரணில், 13 இன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை முன்வைக்க முயற்சிக்கின்றார். அதற்காக அரசியலமைப்புத் திருத்தமொன்றைக் கொண்டு வருவது பற்றியும் ஜனாதிபதி சிந்திக்கிறார் என்பதும் முரண்பட்ட ஒரு முயற்சியேயாகும். அரசியலமைப்பில் ஏற்கனவே 36 ஆண்டுகளாக இருக்கும் ’13 ஐ’ பொலிஸ் அதிகாரப் பிரிவை நீக்கி அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் அது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக இருக்க முடியாது. தமிழ்த் தேசிய இனத்திற்கு அரசியலமைப்பில் அதிகாரம் ஏதும் வழங்க சிங்கள-பௌத்த பேரினவாதம் இடமளிக்காது என்பதே உள்ள நிலைமை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி : சிங்களப் பெருந் தேசியவாதத்திற்குள் அமிழ்ந்து கிடக்கும் இலங்கை நாடாளுமன்றத்தையும் அரசியல் யாப்பையும் எப்படி மீட்டெடுத்து, ஜனநாயகமயப்படுத்துவது? அல்லது எப்படி அதைப் பன்மைத்துவப்படுத்துவது?

பதில்: கடந்த எழுபது ஆண்டுகளிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண பௌத்த -சிங்கள பேரினவாதம் இடமளிக்கவில்லை. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரினாலும் பலியாகிய நிலையிலும் இன்னும் பௌத்த -சிங்கள மக்களிடம் மன மாற்றம் ஏற்படவில்லையென்பதைத்தான் வரலாறு இன்றுவரை நிரூபித்து வந்துள்ளது. தற்போதுள்ள தமிழ் மக்களும் தலைவர்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அரசியல் தீர்வை அடைவதற்கு புதிய வழிகளைத் தேட வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.

கேள்வி : அரசியற் தீர்வுக்கு இந்தியாவின் அனுசரணை பிரதானமாக இருக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்துகிறார்கள். இன்னொரு தரப்பினரோ, ‘ ஈழப்போராட்டத்தையே நசுக்கி அழித்ததே இந்தியாதான். ஆகவே, இந்தியாவை நம்ப முடியாது. பதிலாக சர்வதேச சமூகத்தின் (மேற்குலகின்) ஆதரவைக் கோருவதே சரியானது ’என்கின்றனர். தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடென்ன?

பதில்: யார் விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய நாட்டின் எல்லையிலுள்ள இலங்கைத் தீவில் எண்ணிக்கையிற் குறைந்த ஒரு தேசிய இனம் ,பௌத்த பேரினவாதத்தினால் அழிக்கப்படும்போது இந்தியாவின் பாதுகாப்பில் தங்கியிருக்கும் தேர்வுதான் எம்மிடம் இருக்கின்றது. இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரக் காரணங்களும் சாதகமாக இருக்கும்போது, தமிழினத்தின் உறவுகளான ஐந்துகோடி தமிழ்மக்கள் இந்தியாவில் இருக்கும்போது இலங்கைத் தமிழினம் அந்த உறவுகளைச் சார்ந்துதான் தங்களைப் பாதுகாத்து வாழ வேண்டும். இந்தியாவிலும் ஐரோப்பிய அமெரிக்க வல்லாண்மை நாடுகளிலும் வாழும் தமிழ்த்தேச மக்களும் குறிப்பாக இந்தியத் தமிழ் மக்களும் அந்தந்த நாடுகளில் அரசியல் செல்வாக்குக் கொண்டிருக்கும் போது சீன வல்லாதிக்கம் சிங்கள-பௌத்த மக்கள் அரசின் தமிழின அழிப்புக்கு ஆதரவுடன் இருக்கும்போது இலங்கைத் தமிழர்கள் இந்தியாவைச் சார்ந்து இந்தியாவின் பாதுகாப்பு இராஜதந்திரக் காரணங்களை எண்ணிப்பார்த்து நடக்க வேண்டும். இந்தியாவின் நலன்கள், இலங்கைத் தமிழர்களின் நலன்களை மதிப்பீடு செய்தால் இந்தியாவைச் சார்ந்தே இலங்கைத் தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்மானங்களை எடுப்பது பொருத்தமானதாயிருக்கும்.

கேள்வி : கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா விடுத்திருந்த அழைப்பை சம்பந்தன் பொருட்படுத்தாமல் விட்டதற்கான காரணம் என்ன?

பதில்: ‘சம்பந்தன் பொருட்படுத்தாமல் இந்தியா செல்லாமல் விட்டார் ’என்ற சொற்பதத்தை நிராகரிக்க வேண்டும். சம்பந்தன் தமிழர் மக்களின் தலைவர். அவர் தன் பொறுப்பை மிகப் பொறுப்புடன் கையாண்டு வந்திருக்கிறார். அந்தச்சந்தர்ப்பத்தில் அவரின் உடல்நிலை சீரில்லை. அதனால் அப்போது இந்தியாவுக்குச் செல்ல முடியாதுபோய் விட்டது. என்னிடம் இந்தக் கேள்வியை கேட்டதனால் நானும் ஒரு பதில் கூறவேண்டும். பாரதப் பிரதமரைச் சந்திக்க வேண்டிய அந்த நாளில் எனது மகனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சம்பந்தனுக்கும் இந்தியத் தரப்புக்கும் அந்த நிகழ்ச்சி தெரிந்திருந்தது. சம்பந்தனிடம் நான் கூறிவிட்டேன் ‘கட்டாயமாக பாரதப் பிரதமரின் சந்திப்புக்கு நீங்களும் ஏனைய தலைவர்களும் செல்லுங்கள்’ என. பாரதப் பிரதமருடனான அந்தச் சந்திப்பு நிகழாமல் போனமை தவிர்க்க முடியாததாகவும் மனவருத்தம் தந்ததாகவும் வந்துவிட்டது உண்மையே. ஆனால் நிகழவேண்டிய தொடர்பாடல்களும் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்களும் சரியாகக் கையாளப்பட்டிருக்கின்றன என்று நம்புகிறோம்.

கேள்வி : இனப்பிரச்சினைக்கான தீர்விலும் இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைப்படுத்தலிலும் இந்தியாவின் அனுசரணை, வகிபாகம் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. ஆனாலும் இந்தியா இன்னும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவில்லையே?

பதில்: 1983 காலப்பகுதியிலும் ,1987 காலப்பகுதியிலும் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியும் அதன்பின் பிரதமர்களாக விளங்கியவர்களும் ஏனைய தலைவர்களும் இராஜதந்திரிகளும் தேவைப்பட்ட காலங்களில் பொருத்தமான செயற்பாடுகளில் தலையீடு செய்து செயலாற்றியிருக்கிறார்கள். இந்துமா சமுத்திரப் பிராந்தியம், இந்தோ – பசுபிக் பிராந்தியம் இந்திய – இலங்கை உறவிலும், இராஜதந்திரச் செயற்பாடுகளிலும், போட்டியும் தந்திரோபாயமும் நிறைந்தது. இந்தியநாடு வகிக்கும் முக்கியத்துவம் சீனாவின் கொள்கைக் கோட்பாடு ஆதிக்க வல்லாண்மை ஆக்கிரமிப்புக்களால் இலங்கை மீதான செல்வாக்கு இராஜதந்திரப் போட்டிகளை உருவாக்கி வருகிறது. இவற்றினால் ஏற்படும் விளைவுகள் இலங்கையில் தமிழின அழிப்புக்கு எதிரான தமிழினப் போராட்டத்திலும் இராஜதந்திர ரீதியிலும் பாதிப்புக்களைக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

தமிழினத் தலைமைத்துவமும் இந்து மா சமுத்திர, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இந்திய நாட்டின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசத்தின், மக்களின் விடுதலைக்கு அர்ப்பணித்துழைக்க வேண்டும். சர்வதேச மட்டத்தில் வல்லாண்மைச் சக்திகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிராந்திய நாடுகளின் அனுசரணையைப் பெறுவதற்கான இராஜதந்திர வெற்றிகளையும் பெறவேண்டும். அதற்குரிய பலதுறை நிபுணத்துவம் பெற்ற தலைமைகளை அனுசரித்து தமிழினம் வெற்றி பெறுவதற்கு தமிழ்த் தலைமை ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக இலங்கையில் தமிழினப் பிரச்சினைக்கு, தமிழர்தேச விடுதலைக்கு இந்திய நாட்டின் தலையீட்டை நாம் வென்றெடுக்க வேண்டும். அந்தச் சந்தர்ப்பம் மிக முக்கியமானது என நம்புகிறோம்.

கேள்வி : உண்மையில் இந்தியா யாருக்கு ஆதரவாக உள்ளது? தமிழர்களுக்கா சிங்களவர்களுக்கா? அல்லது தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள் என்ற இலங்கை மக்களுக்கா ? அப்படியென்றால் இன ஒடுக்குமுறையை இந்தியா எப்படிப் பார்க்கிறது?

பதில்: இந்தியா இன்று உலகத்தில் வல்லரசு நாடுகளில் வளர்ந்து வரும் வல்லாண்மை நாடாக வளர்ந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் (அரசியல் ,பொருளாதாரம் என்பவற்றுக்கும் மேலாக சீனாவின் தலையீடுகளுக்கு மத்தியில்) இலங்கையின் பாதுகாப்பு என்ற வகையிலும் – இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய நாட்டின் கடப்பாடு என்ற வகையிலும் நடைமுறையிலும் செயற்பாட்டிலும் இராஜதந்திரோபாயத்திலும் இந்தியா தன் பொறுப்பை நிறைவேற்றி வருகிறது. அதேவேளை தமிழ் மொழி பேசும் மக்களிடத்தில் வடக்கு – கிழக்கு பிராந்தியத்திலும் மலையகத்திலும் உணர்வுபூர்வமாகவும் அக்கறையை கடைப்பிடித்துச் செயற்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கையில் அண்மையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுதிலும், தமிழ்ப் பிரதேசங்களில் போர்க்காலத்திலும், போர்க் கலவரங்கள் ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நேரடியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் தன் அக்கறையையும், தலையீடுகளையும் இந்தியா காட்டி வந்திருக்கிறது. இன்னும் இலங்கைத் தமிழினம் தன் விடுதலையை அடைவதற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்தும் வந்துள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பு என்ற வகையிலும் தன் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. தமிழினம், தமிழர் தேசம் தன் விடுதலைக்காக, சுதந்திரம் அடைவதற்காக இந்திய நாட்டின் தலைமையை- இந்தியாவை -வென்றெடுக்க வேண்டும்

கேள்வி : சர்வதேச சமூகமானது, பிராந்திய சக்தியாகிய இந்தியாவைக் கடந்து அல்லது மீறி இந்த விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்துமா?

பதில்: சர்வதேசமானது இந்தியாவை அனுசரித்துத்தான் தமிழின விவகாரத்திலும் சரி ,பிராந்திய விவகாரங்களிலும் சரி செயலாற்றும். சர்வதேச நாடுகளில் இந்தியாவுக்கென்று தனியான மதிப்பும் செயல்முறையும் உண்டு.

கேள்வி : இலங்கையில் சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன ஒடுக்குமுறைய சர்வதேச சமூகம் எவ்வாறு நோக்குகிறது? அதேவேளை தமிழ் மக்களின் கோரிக்கைகள், போராட்டம், அவர்கள் சந்தித்த இழப்புகள் போன்றவற்றைக் குறித்து வெளியுலகின் நிலைப்பாடு எப்படியானது?

பதில்: சர்வதேச சமூகம் பல தரப்புக்களாகவே பிரிந்து செயற்படுகிறது. ஐ.நா, மனித உரிமைப் பேரவை, சர்வதேச குற்றவியல் விசாரணை முதலான அமைப்புக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமைப்புக்களாக மனித உரிமைகளைப் பாதுகாக்கச் செயற்படுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஐ.நா, அமைப்பிடமும் மனித உரிமை அமைப்புக்களிடமும் முறைப்பாடுகளை பதிவு செய்கின்றன. இலங்கை அரசுக்கெதிராக, இராணுவத்திற்கெதிராக மனித உரிமை அமைப்புக்கள் மனித உரிமைப் பேரவையில் முறையிட்டுள்ளன. எமது கட்சியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமைப் பேரவையில் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளது.

ஐ.நா.வின் செயலாளர் நாயகம், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், குற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயங்கள் பற்றி ஒவ்வொரு ஆண்டில் பேரவை நிகழ்ச்சியின் போதும் அறிக்கை சமர்ப்பிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளர் அறிக்கைகளை இலங்கை அரசு மறுத்துரைப்பது வழக்கம். பேரவையில் 30/1 முதல் இன்றுவரை 53/1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இனப்படுகொலைகள், இனவழிப்பு முதலான குற்றச்செயல்கள் தொடர்பான பிரேரணைகள் மனித உரிமைப் பேரவை குற்றவியல் நீதி விசாரணைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. அவை முறையாக குற்றவியல் நீதி விசாரணைக்கு சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.

இதுவரை மனித உரிமைப் பேரவையால் அரசுக்கெதிரான தீர்மானங்களாக மனித உரிமை மீறல்கள், பொறுப்புக் கூறுதல், மீண்டும் நிகழாமை முதலானவற்றை நிறைவேற்ற வேண்டுமென இலங்கை வற்புறுத்தப்பட்டுள்ளது. இலங்கை 2016 காலத்தில் மட்டுமே ஐ.நா. வுடன் ஒத்துழைப்பதாகக் கூறியது. ஏனைய காலங்களில் சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்துரைத்து வந்திருக்கிறது. நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறியவைகளும் ஒப்புதலுக்கானவையே தவிர உண்மையில் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. பல இராணுவ அதிகாரிகள் வெளியுலகினால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். தண்டிக்கப்பட்டவர்களுக்கு அரசு உயர் பதவிகளையும் வழங்கிப் பாதுகாத்துள்ளது. இதனால் இலங்கை சர்வதேச மட்டத்தில் மதிப்பிழந்து குற்றஞ் சுமத்தப்பட்ட நிலையிலுள்ளது. இலங்கை சர்வதேசத்தில் குற்றத்தண்டனை பெற்ற நாடாக அறிவிக்கப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல. ரஷ்யா, சீனா முதலான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவுள்ளன. இதனால் இலங்கை தப்பித்து வருகின்றது. சர்வதேச அரங்கு நாடுகள் இலங்கைக்கு சாதகமான நிலையிலேயே உள்ளதாயினும் இலங்கை மீதான குற்றத் தீர்மானங்கள் இலங்கையை நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்குகின்றன.

கடன்சுமையில் நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு, மனித உரிமைகளை பேணும் பொறுப்பு இலங்கைக்கு ஏற்படுகிறது. பொறுப்புக்கூறும் கடப்பாடு இலங்கைக்கு பெருமளவில் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.

 கேள்வி : இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பல்வேறு விதமான யோசனைகளும் பரிந்துரைகளும் பல தரப்பினாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி 60 ஆண்டுகளுக்கும்மேலாக முன்வைத்துள்ள யோசனைகளில் எந்தளவு முன்னேற்றம் அல்லது வெற்றி கிட்டியுள்ளது?

பதில்: இலங்கையில் தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் தலைவர்களும் 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையிலும் இந்தியாவிலும் சர்வதேச மட்டத்திலும் எடுத்த முயற்சிகள் போராட்டங்கள் இன்னும் தமிழர் தேசம், தமிழ் மக்கள் ஐரோப்பியரிடம் போரில் இழந்த சுதந்திரத்தை மீட்டெடுக்கவில்லை என்பது உண்மையே. இலங்கையில் தமிழின அழிப்பு குறிப்பாக 1983லிருந்து தீவிரமடைந்து வருகிறது. பல இலட்சம் மக்கள் உயிர்களைப் பலிகொடுத்து விட்டனர்.

பன்னிரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமிழர் தேசத்தை விட்டு உலகத்தின் பல பாகங்களில் குடியேறிவிட்டனர். இலங்கையில் அவர்கள் நிலங்கள் சிங்களமயமாகி, பௌத்தமயமாகி வருகின்றன. தமிழர் வாழ்வு, மக்கள் செறிவு, குடிப்பரம்பல் மிகவும் தீவிரமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. பௌத்தம், சிங்களம் பரவி, பௌத்த -சிங்கள மயமாகி வருகிறது.

தமிழரசுக் கட்சி 1948 மார்கழி 18இல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை ஏனைய தமிழர் கட்சிகளோடு இணைந்து பல வடிவங்களில் ஜனநாயக வழியில் போராடி வருகிறது. எஞ்சிய மக்களையும், தேசத்தையும் பாதுகாக்கவும், தேசத்தின் விடுதலையை அடையவும், இங்குள்ள தமிழ் மக்களும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும் உலக சந்தர்ப்பங்களை பயன்படுத்தவும், புதிய சிந்தனைகள், இலக்கை அடையும் முயற்சிகள், போராட்ட வடிவ, இராஜதந்திர முயற்சிகளை ஒருங்கிணைத்து அர்ப்பணித்து உழைக்க வேண்டியதுமான காலத்தில் உள்ளோம். இழந்த சுதந்திரத்தை மீட்டு, சுதந்திர இலட்சியத்தை அடையத் தொடர்ந்தும் அர்ப்பணிப்பதுதான் இன்று வேண்டியுள்ளது. இன்றுவரை தமிழர் தேசத்தின் விடுதலை உணர்வையும் சுதந்திர ஆட்சியையும் மீட்டு நிர்மாணிக்கும் நெஞ்சுறுதியையும் தொடர்ந்து மக்களிடம் வைத்திருப்பதே நாம் செய்து வரும் பணியாகும்.

கேள்வி : வடக்கு- கிழக்கு இணைப்பு சாத்தியமானதா? அதைச் சாத்தியப்படுத்துவதற்கு முஸ்லிகளின் ஆதரவைப் பெறுவது எப்படி?

பதில்: எமது இலக்கு, இழந்த சுதந்திரத்தை மீட்பதுதான். தற்போது வடக்கு- கிழக்கு இணைந்த தேசத்தில் வாழும் மக்களுடன் தமிழர் தேசத்தை நிலைநாட்டுவதற்குரிய சாத்தியத்தைக் கொண்டிருக்கிறோம். முஸ்லிம்களுக்கும் தம்மை ஆளும், நிர்வகிக்கும் ஆட்சி உரித்தை அங்கீகரிக்கக் கூடிய உடன்பாடு ஏற்கனவே இணக்கப்பாட்டில் இருந்தது. ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் காலத்தில் இடைக்கால அரசியலமைப்பிலும் உடன்பாடுகளிலும் இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கேள்வி : தமிழ் – முஸ்லிம் உறவு இன்னமும் நெருக்கடி நிலையில்தான் உள்ளது. இதை எப்படிச் சீரமைக்கலாம்? அது அவசியம்தானா?

பதில்: வடக்கு -கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து தம்மைத்தாமே ஆளும் ஆட்சிக் கட்டமைப்பு சாத்தியமானதே. அதனைச் சாதிக்க வேண்டும்.

 கேள்வி : இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவது எப்படி? அதற்குச் சாத்தியமான வழிகள் என்ன?

பதில்: முதலாவதாக இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆணையை மக்களிடமிருந்து பெற்று வந்த அரசு ஆட்சி தற்போதில்லை. இன்றுள்ள ஆட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆச்சரியமானவர். அரசியலமைப்பு விதிகளின்படி பிரதமராக இருந்தவர், ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பெற்றவர். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்ப்பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் , ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் ராஜபக்சவின் கட்சியினருக்கும் இணக்கம் ஏற்பட வேண்டும். அல்லது அரசியல் தீர்வு ஒன்று சாத்தியம் இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நியமனம் பெற்று ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டும் என எண்ணுகிறார். அவரை ஆதரித்து நிற்கும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின், ராஜபக்சக்களின் எதிர்பார்ப்பு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றி பெற வேண்டும் என்பதாகும். அதற்கு ஏதுவான அரசியல் காலத்தை தீர்மானிக்க விரும்புகிறார்கள்.

மறுபக்கத்தில் ரணில், தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவை இருக்கிறது. இந்நிலைமையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான அதிகாரப் பகிர்வுடன் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தில் மாகாணங்களுக்கு பகிரப்பட்ட அதிகாரங்களை திரும்பப் பெறக்கூடிய ’திவிநெகும’ அமைப்பு விதி இருக்கும்பொழுது 13 இல் பொலிஸ் அதிகாரத்தை நீக்கிவிடக்கூடிய நிலையில் ஜனாதிபதி திட்டமிட்டிருந்தால் அது அரசியல் தீர்வுமல்ல. அரசியல் தீர்வுக்குத் தொடக்கமுமல்ல. அந்த அரசியல் தீர்வு முயற்சிகள் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்காது.

2015 மார்ச் மாதம் பாரதப் பிரதமர் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொழுது இவ்வாறான நிலைமைகளில் கூட்டுறவு சமஷ்டித் தீர்வையே தான் விரும்புவதாக குறிப்பிட்டதை நினைவுபடுத்தினால் தமிழினத்தின் அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையில்தான் இருக்க வேண்டுமென்று தமிழ் மக்களும் பிரேரணையாக கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி : இந்த வழிகளைக் குறித்து ஒருமித்த எண்ணம் தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகளிடத்தில் இல்லையே?

பதில்: இந்த வழிகளைக் குறித்து இதுவரை தமிழ் ,சிங்கள, முஸ்லிம் மக்களிடத்தில் ஒருமித்த எண்ணம் ஏற்பட்டதில்லை. 13 இன் அடிப்படையிலல்ல. 13 இன் அதிகாரங்களை மட்டுப்படுத்தி திவிநெகும திருத்தம் மூலம் பகிர்ந்ததையும் திரும்பப் பெறக்கூடியதாக ஒற்றையாட்சியில் ஓர் அரசமைப்பு முன்வரக்கூடும். அப்படியானால் அது யாரையும் திருப்திப்படுத்தாத ஒன்றாக இருக்கும்.

கேள்வி : இனப்பிரச்சினைத் தீர்வில் இலங்கை அரசும் சிங்கள அதிகாரத்தரப்புகளும் (கட்சிகள், ஊடகங்கள், புத்திஜீவிகள், மதபீடங்கள்) எவ்விதம் செயற்பட வேண்டும்? இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது?

பதில்:இந்த நாட்டின் நலனுக்கும் தமிழர்களின் விடிவுக்காகவும் அவர்களிடம் ஒரு ஏற்புடைய அரசியல் தீர்வு ஏற்பட ஒத்துழைக்க வேண்டும் என அவர்கள் பாதங்களைத் தொட்டு வேண்டுகோள் விட வேண்டுமானால் அதையும் செய்வோம்.

கேள்வி : இலங்கையில் சீனப் பிரசன்னத்தையும் அதிகரித்து வரும் அதனுடைய செல்வாக்கையும் எப்படி நோக்குகிறீர்கள்? தமிழர்கள் சீனாவுடன் கொள்ள வேண்டிய அரசியல் இராஜதந்திர உறவு எப்படியானதாக இருக்க வேண்டும்?

பதில்: தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக, விடிவுக்காக சீனநாடு, இந்தப் பிராந்தியத்தில் கொண்டிருக்கும் கொள்கைகள் எவ்வாறெனினும் சீன இராஜதந்திரிகளிடத்திலும் நாம் நட்புறவுடன் பேசியே ஆகவேண்டும். கடந்த காலங்களில் சீனத்தூதுவர்களிடம் பேச்சு நடத்தியிருக்கிறோம். நான் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த காலத்தில் (2014களில்) பொதுச்செயலாளர் என்ற முறையில் இன்னுமொரு மூத்த உறுப்பினரையும் சீனநாட்டுக்கு அழைத்து வருமாறு சீன இராஜ தந்திர வட்டாரங்களிலிருந்து அழைத்திருந்தார்கள். நாங்கள் சம்மதித்திருந்தோம். நேரடியாகவே என்னை அழைத்துப் பேசினார்கள். ஆனால் நாட்டில் உள்ளூராட்சித் தேர்தலொன்றின்பொழுது வேட்புமனுக்கள் கையெழுத்திட வேண்டியதால் நான் செல்லமுடியவில்லை. எங்கள் கட்சியிலிருந்து பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களையும் கலாநிதி சர்வேஸ்வரனையும் அனுப்பி வைத்தோம். பல சந்தர்ப்பங்களில் சீனத் தூதுக் குழுவினரையும் தூதரக இராஜதந்திரிகளையும் சந்தித்து தமிழினப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவுமாறு கலந்துரையாடியிருக்கிறோம். எதிர்காலத்திலும் சீன இராஜதந்திரிகளுடன் சீனாவுடன் உறவுகளையும் மேம்படுத்த நாம் தொடர்பிலிருப்பது அவசியமேயாகும்.

கேள்வி : தமிழ்த் தேசியவாதம் உள்வாங்கும் தேசியவாதமாக (Inclusive nationalism) கட்டமைக்கப்படவில்லை. அதனால்தான் அதற்குள் இன, மத, சாதி, பால், பிரதேச வேறுபாடுகள் துருத்திக் கொண்டுள்ளன என்ற குற்றச்சாட்டுப்பற்றி..?

பதில்: இந்தக்கேள்விக்குரிய வகையில் எங்கள் தலைமைப் பொறுப்பிலுள்ள நிர்வாகிகளுடன் எதிர்வரும் கட்சி மாநாட்டுக்கு முன்னர் பேச்சுகளில் ஈடுபட்டு, ஏற்ற திருத்தங்களைச் செய்யவும் இனவிடுதலைக்கு தேவைப்பட்ட மாற்றங்களையும் ஆலோசித்து முன்னேற்றங்களை ஏற்படுத்துவோம். ஏற்கனவே இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கு அமைப்பு மட்டத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கேள்வி : தமிழர்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும் என்பது இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தரக்கூடிய சாதகங்கள் என்ன? பாதக நிலை என்ன?

பதில்: அப்படி அணிதிரள வேண்டியது முக்கியம். பாதகம் ஏதும் இல்லை. அணிதிரள்வதில் இருக்கும் குறைகளை தடைகளை நீக்கி ஒற்றுமையுடன் அணிதிரண்டு செயற்பட வேண்டிய சாதகமான காலம் இப்பொழுது வந்துவிட்டது என்பதை நன்கு அறிவோம். தமிழ்மக்கள், தலைமைகள் ஒன்றுபட்டு இனத்தின் விடுதலைக்காக உழைப்பது இன்றும் மிக முக்கியமானதாகும்.

கேள்வி : சிங்களத் தேசியவாதம், தமிழ்த்தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம், மலையகத் தேசியவாதம் என இன்று இன ரீதியான தேசியவாத உணர்வு கூர்மைப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் பகை மறப்பு, நல்லிணக்கம், அரசியல் தீர்வு, சமாதானம் போன்றவற்றை எட்டுவது எப்படி?

பதில்: தேசியவாதம் அடையாளப்படுத்தப்படுவதற்கு காரணம் 1948 இன் பின் ஒற்றையாட்சி அரசியலமைப்பும் பௌத்தம் முதன்மை மதப்பிரகடனமும்தான். உலகில் பல மதங்கள், பல இனங்கள், பல கலாசாரங்கள் நடைமுறையிலுள்ள நிலைமையில் குறிப்பாக 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்திலிருந்து உருவாகிய தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் ஆட்சி முறையை நாம் வரலாறாகக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டு தமிழ் மக்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் அபாயம் ஏற்பட்ட பொழுதுதான், சிங்களத் தேசியவாதம் அரசமைப்பு முதன்மைத்துவத்தைப் பெற்ற பொழுதுதான் தமிழ்த் தேசியவாதம் சம உரிமை பெறவும் பாதுகாக்கப்படவும் வேண்டிய போராட்டம் ஆரம்பித்தது. அதேபோலவே முஸ்லிம் தேசியவாதம், மலையக தேசியவாதம் உருவாகியது. அவை நியாயமானவைகளாகும். அவை உரித்துக்களாகும். இதைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்து போராடுவோம்.

கேள்வி : பிரதான அரசியற் தலைமைகளும் கட்சிகளும் ஊடகங்களும் பகை மறப்பிற்கும் நல்லிணக்கத்துக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் தயங்குவது ஏன்? அவை துருவப்படுத்தப்படும் அரசியலில் தொடருவதேன்?

பதில்: வலுவான நாடுகள் ஒவ்வொரு யுகத்திலும் காலகட்டத்திலும் உலகை அல்லது நாடுகளை ஆட்சி செய்து வந்துள்ளன. முதலாவது, இரண்டாவது உலக யுத்தங்கள் ஏற்பட்டமையும் அந்நிலையிலிருந்து ஒவ்வொருமக்கள் கூட்டமாக, இனங்களாக, நாடுகளாக ஆளும் உரிமை கொண்ட சுதந்திரநாடுகள் உருவாகியமை நடைமுறைச் சாத்தியமானதே. உலகின் கொள்கை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, முதலாளித்துவத்திலிருந்து பொருளாதார சமத்துவம், சோசலிசம், பொதுவுடமை என்றவாறு பல நாடுகள் உருவாகியமை தேவைப்பட்டன. சித்தாந்தங்களின், மக்களின், இனங்களின் தேசியங்களின் அடிப்படையில் சுதந்திரம் அமைந்தது. அந்த வரலாற்றில் இலங்கையில் ஐரோப்பியரிடம் போரில் இழந்த சுதந்திரத்தை தமிழ் மக்களும் தங்கள் சுதந்திர ஆட்சியை மீட்க வேண்டும். அதற்கான சாத்தியங்கள் சர்வதேச அளவில் முன்னேற்றமடைந்துள்ளன. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாம் பொருத்தமான வியூகங்களை வகுத்து எம் சுதந்திரத்தையும் அடைய வேண்டும்.

கேள்வி : போரும் பொருளாதார நெருக்கடியும் மக்களின் மனங்களிலும் அரசியல்வாதிகளின் மனதிலும் மாற்றங்களை உருவாக்கவில்லை, பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையைப் பற்றிச் சிந்திக்க வைக்கவில்லை என்றால், அடுத்த கட்டம் என்ன?

பதில்: இலங்கை சுதந்திரமடைந்த பின் 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்த் தேசிய, இனப்பிரச்சினை, தமிழ்த் தேசிய இன அழிப்பிலிருந்து தமிழ் மக்கள், இனம் விடுதலை பெறும் தீர்க்கமான சிந்தனை இன்னும் வெற்றி பெறவில்லை. தமிழ்த் தேசியஇனத்தின் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டியது அவசியம். சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி உலக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழினத்தின் விடுதலையை அடைய சுதந்திர ஆட்சியை நிறுவ , புதிய சிந்தனைகளை, வியூகங்களை முன்னெடுத்து மக்களை அணிவகுத்துச் செல்லும் தீர்க்கமான முடிவுகளை எடுத்தேயாக வேண்டும். அந்தக் காலகட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்.