You are currently viewing ’13’ குறித்த சர்வக்கட்சி மாநாட்டை சரிவர பயன்படுத்துவோம்!

’13’ குறித்த சர்வக்கட்சி மாநாட்டை சரிவர பயன்படுத்துவோம்!

ஆசியாவிலேயே மிகவும் பழமையான ஜனநாயக நாடுகளுள் ஒன்றான இலங்கைல், தேசிய இனப்பிரச்சினைக்கு இன்னும் அரசியல் தீர்வு காணப்படாமை பாரியதொரு குறைப்பாடாக இருக்கின்றது. கடந்த கால சம்பவங்களானவை அரசுகள்மீது தமிழ் மக்களுக்கான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது.

 ‘சர்வக்கட்சி மாநாடு’, ‘ஜனாதிபதி ஆணைக்குழு’ என்பனவெல்லாம் முக்கியத்துவம்மிக்கவை. தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகள் வரும்போதுதான் இவ்வாறான கூட்டங்கள் நடத்தப்படும், ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும். இதனால் அவற்றுக்கான வரவேற்பு அதிகம். நம்பகத்தன்மையும் உச்ச மட்டத்தில் காணப்படும். உலக நாடுகளில் இதுதான் நடைமுறை.

ஆனால் இலங்கையில் ‘சர்வக்கட்சி மாநாடு’, ‘ஜனாதிபதி ஆணைக்குழு’ என்பனக்கூட  நம்பகத்தன்மையற்ற பொறிமுறையாக மாறியுள்ளன என்பது கசப்பான உண்மையாகும். அதனால்தான் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை காணப்படுகின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியின் ஓர் அங்கமாக இலங்கையில் அவ்வப்போது சர்வக்கட்சி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகிய ஜனாதிபதிகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்தாலும்  தீர்வு பொறிமுறைக்கு உயிர் வடிவம் கொடுப்பதற்கு எவரும் வெளிப்படைதன்மையுடன் செயற்படவில்லை என்பதே கடந்தகால வரலாறு. சிங்கள, பௌத்த மக்களின் பேராதரவுடன் அரியணையேறிய கோட்டாபய ராஜபக்ச,  இனப்பிரச்சினை விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தமிழ் தரப்புகளையும் கண்டுகொள்ளவில்லை.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் ‘சர்வக்கட்சி மாநாடு’கள் அதிகம் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் அலரிமாளிகையில் கூடுவார்கள், பேசுவார்கள், நேரீர் அருந்துவார்கள், பின்னர் கலைந்து செல்வார்கள், பேச்சு தோல்வி என எதிரணிகளும், பிரச்சினைகளை தீர்ப்பதில் எதிரணிகளுக்கு விரும்பவில்லை என ஆளுங்கட்சியும் அறிக்கைகளை விடுக்கும் நாடகமே கால காலமாக – சிற்சில மாற்றங்களுடன் அரங்கேறி வந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் தற்போது இதே நிலைதான் காணப்படுகின்றது.  

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துவருகின்றது. மேற்குலக நாடுகளும் இதனை வலியுறுத்திவருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் சர்வக்கட்சி கூட்டத்தை ரணில் நடத்தியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர்தான் ரணில். அவர் ஆட்சியை பிடிப்பதில் வல்லவர். ஆனால் அதிகாரப்பகிர்வு விடயத்தாலேயே கடந்தகாலங்களில் ஆட்சியை இழந்துள்ளார். இருந்தும் இப்பிரச்சினையை தீர்க்க அவர் எடுக்கும் முயற்சி வரவேற்கதக்கது.
 
ரணில் விக்கிரமசிங்கவிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது, ஆனால் நாடாளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் இல்லை. மொட்டு கட்சிவசம்தான் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உள்ளது. எனவே, ரணில் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டால்கூட  ‘13’ ஐ பொலிஸ் அதிகாரத்துடன் அமுலாக்க மொட்டு கட்சி இடமளிக்காது, எதிரணிகளில் உள்ள விமல், உதய கம்மன்பில, ரத்தன தேரர் உள்ளிட்டவர்களும் ‘13’ ஐ முழுமையாக எதிர்க்கும் நிலை காணப்படுகின்றது.  

சிங்கள, பௌத்த மக்களின் ஆதரவை இழந்து தடுமாறிவரும் மொட்டு கட்சி 13 ஐ முழுமையாக அமுலாக்க இடமளிக்காது, அரசியல் சூழ்நிலைகளால் அவ்வாறானதொரு முடிவை அக்கட்சிக்கு எடுக்க முடியாது என்பதே காலம் உணர்த்தும் பாடமாகும். பொலிஸ் அதிகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியிடமும் தெளிவான நிலைப்பாடு இல்லை. எது எப்படி இருந்தாலும் ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு முயற்சி என்பதில் தென்னிலங்கை கட்சிகள் உறுதியாக உள்ளன. எனவே, சமஷ்டி அடிப்படையில் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வு எப்படி சாத்தியமாகும்?  
   
எனவே, அரசியலை மறந்து இனியாவது அனைவரும் நாடு பற்றி சிந்திக்க வேண்டும், இனப்பிரச்சினைக்கு தீர்வை தேட திறந்த மனதுடன் முன்வரவேண்டும். அதற்கான சிறந்த களமாக சர்வக்கட்சி மாநாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.