You are currently viewing உள்ளூராட்சி மன்றங்களுக்காக காப்பாகஅமைந்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்காக காப்பாகஅமைந்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

உலகின் பிரபல விஞ்ஞானியான ஆதர் சீ. கிளார்க் ‘ஜனநாயகமானது நல்லது மற்றும் கெட்டது என்ற இரண்டு
வாதங்களும் அடிக்கடி எமக்கு கேட்கக்கூடியதாக உள்ளது, ஜனநாயகமானது பூரணமானதல்ல, இதனை
இற்றைப்படுத்தல் மற்றும் நாட்டுக்கு ஏற்றவகையில் ஒழுங்குபடுத்திக் கொள்வது அவசியமாகும்.
மேலும், பல நூற்றாண்டு காலமாக காணப்பட்டு வந்த சனநாயக, சம்பிரதாயங்களை நவீன தொழில்நுட்பத்தின்
உதவி கொண்டு மென்மேலும் மேம்படுத்த முடியும். துரிதமாக பூகோளமயமாக்கப்பட்டு வருகின்ற எமது
உலகில் வறுமையை ஒழித்தல் மற்றும் சகல மக்களினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டுமாயின்,
ஆட்சியமைப்பில் முறையான வகைப்பொறுப்புக் கூறும் தன்மை அவசியமாகும்.
இது மத்திய, மாகாண மற்றும் உள்ளூராட்சி ஆகிய சகல மட்டங்களில் இடம்பெறல் வேண்டும்’. இவ்வாறு
அறிமுகம் செய்யப்படுகின்ற முறையான வகைப்பொறுப்புக் கூறலைக் கொண்ட பிரதிநிதியொருவரை தெரிவு
செய்துகொள்வது அவ்வளவு இலகுவான விடயமல்ல’ என்று ஒரு தடவை குறிப்பிட்டுள்ளார்.
கோட்பாட்டின் அடிப்படையில் உள்ளுர் மட்டத்தில் நிர்வாகத்தை எளிதுபடுத்துவதிலும், அபிவிருத்திச்
செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் முக்கிய பங்கினை
வகிப்பதால் இவற்றின் செயற்பாடுகள் காத்திரமானதாக உள்ளது.
அதனடிப்படையில் பிரித்தானிய ஆட்சிளார்களால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சுதேச உள்ளூராட்சி
முறைமையானது தற்போது மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளூராட்சி மன்றங்களாக உருவெடுத்து நிற்கின்றன.
இது அரசியல், அபிவிருத்தி திட்ட முன்னேற்றங்களுக்கு வெகுவாக உதவியபோதும், நலிவடைந்த
நிலைமைகள் முழுமையாக களையப்படாத நிலைமையும் இன்னமும் நீடித்துக்கொண்டே உள்ளது.
இலங்கையில் தற்பொழுது 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. ஏலவே 335 சபைகள் இருந்தபோதும்
மலையகப்பகுதியில் ஆறு சபைகள் புதிதாக உருவாக்கப்பட்டதன் காரணமாக அவற்றின் எண்ணிக்கை 341ஆக
உயர்ந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் அனைத்து அதிகாரங்களும் கடமைகளும்;;, மாநகரசபைகள் யாவும், 1947 ஆம்
ஆண்டின் 29 ஆம் இலக்க, மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க,
மாநகர கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் மூலமும் நகர சபைகள் யாவும் 1939ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க,
மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, மாநகர சபைகள் (திருத்தச்)
சட்டம் ஆகியவற்றின் மூலமும் பிரதேச சபைகள் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கச் சட்டம் மூலம்
வரையறுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 1999ஆண்டு உள்ளூராட்சி மறுசீரமைப்பு பரிசீலனை ஆணைக்குழு அறிக்கை, உள்ளூராட்சி
மறுசீரமைப்பு சுற்றறிக்கை தொகுப்பு, உள்ளூராட்சி க்கான தேசிய கொள்கை பிரகடனம் போன்ற காலத்துக்கு
காலம் வெளிவரும் பல்வேறு அறிக்கைகள் சட்டங்கள் சுற்றறிக்கைகள் உபவிதிகள் என்பவற்றின் மூலமும்
சபைகளின் அதிகாரங்களும் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக, நாட்டில் உள்ள பொதுவான சட்டங்களான, அரசியலமைப்பு சட்டம், உள்ளூராட்சி
தேர்தல் சட்டம், பொது நிர்வாக சட்டம், முகாமைத்துவ சட்டம், வரிச்சட்டங்கள், பொது சுகாதாரம், பௌதீக
திட்டமிடல் சட்டம், பொது நலன் சேவை சட்டம் போன்றவையும் பயன்படுத்;தப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் செயற்பட்டு வந்த நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆயுட்காலம் கடந்த மார்ச்
மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.
அதன்பின்னரான சூழலில் தேர்தலுக்காக அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
உட்பட ஆளுகையில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியின் அங்கத்தவர்கள் ஆகிய தரப்பின் ‘தேர்தல்
மீதான விருப்பின்மை’ நீடித்தது.
குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் நாட்டில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி தணிந்திருந்தாலும், ஊழல்,
மோசடிகள் தொடருகின்றமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் அரசாங்கத்தின் மீதான
மக்களின் வெறுப்பு இன்னமும் நீடிக்கின்றது.

இந்த நிலைமையானது, தேர்தலுக்காக வாக்குக் கேட்டு மக்களிடத்தில் செல்கின்றபோது மக்களின் தீவிரமான
எதிர்ப்பிற்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்ற மனோநிலையும், அதிகாரத்தினை தக்கவைக்க வேண்டும்
என்ற சிந்தனையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை
நடத்தாதிருப்பதற்கு உத்திகளை நடைமுறைப்படுத்தியது.
அந்தவகையில், நிதி அதிகாரத்தினை தன்னகத்தே கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி,
திறைசேரியில் இருந்து நிதியை விடுவித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தடுத்தமையானது தேர்தல்
திட்டமிட்டு தாமதப்படுத்துவதற்கு பிரதான காரணமாகின்றது.
அதுமட்டுமன்றி, வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான உரிய பின்பற்றல்களும் மேற்கொள்ளப்படாமை,
மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துகின்ற கடமையைச் செய்ய வேண்டிய தேசிய தேர்தல்
ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் என்பன உள்ளூராட்சி தேர்தல்
திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுவதற்கு காரணங்களாக இருக்கின்றன.
இதனால், உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலத்தையும் நீடிக்க முடியாது, காலவரையறையற்ற நிலையில்
தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. மக்களுடன் மிக நெருங்கிய கட்டமைப்பான உள்ளூராட்சி மன்றங்கள்
செயற்பாடாமை தொடர்பிலும், மக்களின் ஜனநாயக உரிமை மீறப்பட்டுள்ளமை குறித்தும் இதுவரையில்
எந்தவொரு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் மௌனம் கலைக்கவில்லை.
இதனால், உள்ளூராட்சி மன்றங்களின் அடிப்படை நோக்கங்களான தமது ஆள்புல எல்லைக்குள் வசிக்கும்
மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் தத்துவம் பின்பற்றப்படாத நிலைமையே நீடிக்கின்றது.
குறிப்பாக, உள்ளூராட்சி மட்டத்தில் நிர்வாக மாற்றம் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக முடிவுகளை
எடுத்தல், நடைமுறையில் பயனுறும் வகையில் மக்கள் சகல விடயங்களிலும் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக்களை
வழங்கி பிரதேசத்தின் ஆள்புல எல்லைக்குள் உள்ள மக்களின் அபிவிருத்தி அடிப்படை தேவைகள் மற்றும்
பிரதேச மேம்பாடுகள் கருதி, நிதிக்கொள்கை, வீடமைப்பு சமூக சேவைகள், தொழில் நுட்ப சேவைகள்,
சுற்றாடல் வாழ்க்கை வசதிகள் ஆகிய குழுக்களை துறைசார் வல்லுநர்களின் உதவியுடன் அமைத்தல்,
சபைகளின் தேவைகளை நோக்கமாக கொண்டு உப குழுக்களையும் உருவாக்குதல், கூடியளவு பிரதேச
மக்களின் பங்களிப்பு மற்றும் ஆலோசனைகளைப்பெறுதல், உத்தமமான உயர்ந்த பெறுபேறுகளை அடைதல்
உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, உள்ளூராட்சி
அதிகாரசபைகளுக்கான தேர்தலொன்றை நடாத்துவதற்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்
நாட்டிலே ஏற்பட்டுள்ள யாதேனுமொருநெருக்கடியான நிலை காரணமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளவாறு
குறித்த தேர்தலை நடாத்துவதற்கு முடியாத ஒரு சூழ்நிலை எழுந்துள்ள சந்தர்ப்பத்தின் போது, மேற்படி 10(2)ஆ
கட்டளையின் பிரகாரம் அமைச்சரினால் பதவிக்காலம் நீடிக்கப்பட்ட கால எல்லை 12 மாதங்களைத்
தாண்டியுள்ள போதிலும் கூட அமைச்சரினால் தீர்மானிக்கப்படுகின்ற மேலுமொரு காலப்பகுதிக்கு குறித்த
கலைக்கப்பட்ட அதிகாரசபையை மீண்டும் கூட்டுவதற்கு முடியுமாக இருத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டு
மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை திருத்தச்சட்டங்களில் மற்றுமொரு திருத்தத்தினை மேற்கொள்வதற்கான
தனிநபர் சட்டமூலத்தினைக் கொண்டு வந்திருந்தார்.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற அடிப்படைக் கோட்பாட்டையே
சிதைப்பதற்கான பிற்போக்கான அரசியல் கலாசாரமே காணப்பட்டது. எனினும் குறித்த திருத்தம் பற்றிய
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், அவ்விதமானதொரு மோசமான சூழல் தோன்றுவதை தடுத்து
நிறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றமானது, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் சவாலுக்குட்படுத்தப்பட்ட
தனிநபர் சட்டமூலம் தொடர்பில் தனது வியாக்கியானத்தினை பாராளுமன்றத்திற்கு அறிவித்தது.
அதனடிப்படையில், குறித்த சட்டமூலங்கள் மூன்றினதும் 2 ஆம் வாசகம், அரசியலமைப்பின் உறுப்புரை 1,
12(1), 82, 83 மற்றும் 104ஆ ஆம் உறுப்புரையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் இணங்காதுள்ளது.
எனவே, ‘பிரதேச சபைகள் (திருத்தம்)’, ‘நகர சபைகள் (திருத்தம்)’ மற்றும் ‘மாநகர சபைகள் (திருத்தம்)’ எனும்
மூன்று சட்டமூலங்களும் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டு
அரசியமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால்
அங்கிகரிக்கப்படுதல் வேண்டும்’ என்று உயர்நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

உயர்நீதிமன்றதின் இந்த அறிவிப்பானது, ஆட்சியாளர்களின் ஜனநாயக முழுமையான மறுதலிப்பை
நிராகரித்துள்ளதோடு, மக்களின் பங்கேற்பு ஜனநாயகத்தினை உறுதிப்படுத்தியிருக்கின்றது. மேலும்,
சுயாட்சியின் முக்கியமானதொரு அலகாக உள்ளூராட்சி சபைகள் மேலை நாடுகளின் பிரதான பங்கைப்பெற்று
நிற்கிறது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இது இன்னும் நலிவு நிலையிலேயே காணப்படுகிறது.
ஆகவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படுவது முக்கியமானது என்பதோடு,
அக்கட்டமைப்பும் மக்களின் பங்கேற்புடனான நடைமுறைச் சாத்;தியமான வகையில் மேம்படுத்தப்பட
வேண்டியது அவசியமாகும்.

TW