You are currently viewing பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குமாறுகோரி பிரேரணை – தீர்வு கிட்டுமா?

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குமாறுகோரி பிரேரணை – தீர்வு கிட்டுமா?

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியொன்றை வழங்குவதற்கு உரிய – ஏற்புடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” லயன் வீடுகளில் வாழ்பவர்கள் வேலைதேடி விண்ணப்பமொன்றை அனுப்பியிருந்தால், அதற்கு பதில் கடிதம் வரும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தோட்டத்தில் தொழில் செய்யவில்லையெனில் கடிதம் வழங்கப்படுவதில்லை. இதனால் தொழில் வாய்ப்புகளை இழந்தோர் ஏராளம்.

சிலவேளை அப்பகுதியில் உள்ள கடையொன்றின் முகவரி வழங்கப்பட்டிருக்கலாம். கடை முதலாளிக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் முரண்பாடுஎனில் அவரும் கடிதத்தை கையளிக்கமாட்டார்.
200 வருடங்களாகவே அம்மக்களுக்கு அப்படியான அவலநிலை தொடர்கின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

15 – 10 அடி லயன் காம்பராவில் நான்கு தறைமுறைகள் வாழ்ந்துவிட்டன. ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால்கூட நிர்வாகத்தின் அனுமதி தேவை. முகவரி இல்லாததால் தோட்டத்துக்குள் கடையொன்றைபோட்டு சுயதொழிலை முன்னெடுக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, பெருந்தோட்ட நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.குறைந்தபட்சம் முகவரியையாவது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை செய்ய வேண்டியது அனைவரினதும் கடமையாகும். ” – எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. வலியுறுத்தினார்.

அரசு வழங்கிய பதில்

” தோட்ட வீடுகளுக்காக இலக்கங்களை வழங்குவது தோட்ட நிர்வாகத்தால் செய்யப்பட வேண்டியதாகும். பெரும்பாலும் தோட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய தபால்களை தோட்ட காரியாலயத்துக்கு பெற்றுக்கொண்டு அதனை விநியோகிக்கும் போது சில கடிதங்கள் காணாமல்போகக்கூடும்.

எனவே அந்த வீடுகளுக்கு குறித்த வீட்டு இலக்கங்களை வழங்க வேண்டியது அந்த மக்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்துவரும் தோட்ட நிர்வாகத்தினதும், நீர்வளங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினதும் செயற்பாடாகும்.”

இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முகவரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சபைஒத்திவளைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரி கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெறுகிறது. இந்த அமைச்சும் குறித்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது.

நீர்வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால், தோட்ட வீடுகளுக்காக குறித்த வீட்டு இலக்கங்களை வழங்குவதற்கான முறைமையை உருவாக்குவதற்கான யோசனை இதில் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த முறைமைக்கு அமைய செயற்படுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு இந்த அமைச்சினால் அறியப்படுத்தப்பட வேண்டும்.
தபால்களை உரிய முகவரிக்கு பகிர்ந்தளிப்பது தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய செயலாகும்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு, இன்று (07) காலையும் பிரதமருடனும், அமைச்சின் செயலாளருடனும் நான் கலந்துரையாடினேன். இதற்கு வெகுவிரைவில் தீர்வு காண அவதானம் செலுத்தப்படுகிறது. இந்த பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்கப்படவில்லை.

முகவரியை வழங்குவதும் அந்த மக்களுக்கான உரிமையாகும். அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கின்றோம். – என இராஜாங்க அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் தமது தொகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

எனது தொகுதியில் உள்ள டீப்தீன் தோட்டத்தில் தமிழ் பாடசாலை ஒன்று மண் சரிவில் பாதிக்கப்பட்டது. இந்தத் தோட்டத்தில் பணியாற்றுகின்றவர்களின் பிள்ளைகள் தான் அந்த பாடசாலையில் கல்வி கற்கின்றனர். அந்தப் பாட சாலையை மீண்டும் அமைக்க இரண்டு ஏக்கர் காணி கோரியபோது காணியை வழங்க முடியாது என தோட்ட நிறுவனம் கூறியுள்ளது. இதையடுத்து, அரசாங்கம் சட்ட ரீதியாக அதிவிசேட வர்த்தாமானி மூலமாக காணியை பொறுப்பேற்று பாடசாலையை மீளமைக்க வேண்டும் என்று நான் கூறியிருக்கின்றேன். – என்றார்.