You are currently viewing உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம். நியாயமான அச்சங்களும்மறுசீரமைப்புக்கான தேவையும்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம். நியாயமான அச்சங்களும்மறுசீரமைப்புக்கான தேவையும்

1977 ஜுலை பொதுத்தேர்தலில் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான அரசாங்கம், 1978 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் நோக்கத்தில், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தை’ கொண்டுவந்தது.

1979 ஜுலை 19ஆம் திகதி அப்போதைய பாராளுமன்ற விவகார அமைச்சர் வின்சன்ட் பெரேரா அன்றைய தினமே குறித்தசட்டமூலம் நிறைவேற்றப்படக்கூடியதாக நிலையியற் கட்டளைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென பிரேரித்தார்.

நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் பயங்கரவாதச் சட்டமூலத்தை அறிமுகம் செய்தார். “இந்தச்சட்டமூலத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அதில் எந்த அவசர முக்கியத்துவத்தையும் காணவில்லை. வடக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளும் நோக்கத்திற்காகவே அது தேவைப்படுகிறது. ஏலவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமும் அதற்கு மேலதிகமாக பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையும் உள்ளன. அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு” என்று அப்போதைய எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால சேனநாயக்க மட்டுமே கவலைகளை குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தார்.

எனினும், ஆறிலந்து பெரும்பான்மையுடைய அந்தப்பாராளுமன்றத்தின் முனைப்பை அவரால் மட்டும் தடுத்து நிறுத்த முடிந்திருக்கவில்லை. குறித்த தினம் இரவு 9.58மணிக்கு அமைச்சர் தேவநாயகம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான தமது தொகுப்புரையை நிகழ்த்தினார். பின்னர் குழு நிலை உள்ளிட்ட அனைத்து வாசிப்புக்களிலும் பயங்கரவாத தடைச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.


அத்தோடு, பொதுமக்கள் பாதுபாப்பு கட்;டளைச் சட்டத்தின் கீழ் பிறிதொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, இரவு 10.25 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு ஒரேநாளில் நிறைவேற்றப்பட்ட பயங்காரவாத தடைச்சட்டம் தற்காலிக சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டாலும் பின்னர் 1982ஆம் ஆண்டில்10ஆம் இலக்க சட்டத்தின்மூலம் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டு தற்போது நாற்பத்துமூன்று ஆண்டுகளாகிவிட்டன.


பயங்கரவாதத் தடைச்சட்ட நிறைவேற்றத்தின் வரலாறு இவ்வாறிருக்கின்றபோதும், அதன் அமுலாக்கம் தமிழ்த் தேசிய இனத்தை மையப்படுத்தியதாகவே இருந்தமையால் ஏற்பட்ட வலிகள் பரம்பரைகளை கடந்து நீளுகின்றன. 2019இல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இந்தச் சட்டம் முஸ்லிம் தேசிய இனங்களையும் மெல்ல வருடியிருக்கின்றது. அதன் நீட்சியாக, ‘அரகலய’ போராட்டத்துக்குப் பின்னரான காலத்தில் சிங்கள தேசிய இனத்தின் புரட்சிக்காரர்களையும் இந்தச் சட்டம் கிடுக்குப் பிடிக்குள் கொண்டுவந்திருக்கின்றது.
இதனால், பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் தமிழர்கள் அனுபவித்து வந்த, வந்துகொண்டிருக்கின்ற சோதனைகளையும், வேதனைகளையும் தற்போது நாட்டின் அனைத்தின மக்களும் ஓரளவுக்கேனும் புரிந்துகொள்ளுகின்ற சூழலொன்று ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் இனம் சார்ந்து ஏற்படுத்திய விளைவுகள், தண்டனையிலிருந்து விலக்களித்தல், அரச பழிவாங்கல்கள் போன்ற பல்வேறு கசப்பான அனுபவங்களை அடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக மேலெழுந்திருந்தது.


இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இரத்துச் செய்து ஒரு புதிய சட்டவாக்கத்தினை கொண்டுவருவதற்கான கோரிக்கை, இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 30ஃ1 என்ற தீர்மானத்தினை நிறைவேற்றியதனைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்தது.


குறித்த தீர்மானத்தின் 12ஆம் பந்தியானது, “பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலீடாக, சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை உருவாக்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பினை வரவேற்கின்றது.”
21மார்ச் 2019அன்று நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 40ஃ1 இனூடாக தீர்மானம் 30ஃ1 இன் கீழ் உடன்பட்டுக்கொண்டவற்றை நிறைவேற்றுவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இரத்து செய்து சமகால சர்வதேச சிறப்புநடைமுறைகளுடன் இணங்கக்கூடியதான ஒரு சட்டவாக்கத்தினூடாக பதிலீடு செய்கின்ற உடன்பாடும் இதனுள் உள்ளடங்கும்.
ஐக்கிய நாடுகள் பொது சபையின்; 73ஆவது அமர்வுகள் ஒக்டோபர் 2018 இல் இடம்பெற்றபோது, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதநிதியான கலாநிதி. ரொஹான ;பெரேரா சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான முழுமையான சமவாயமொன்றினை (அனைத்து வடிவங்களிலுமான சர்வதேச பயங்கரவாதத்தினை குற்றமாக்க எண்ணியுள்ள உத்ததேசிக்கப்பட்ட ஒப்பந்தம்) ஏற்றுக்கொள்வதற்கான தேவையினை எடுத்துக்கூறியதுடன் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான முயற்சியில் இலங்கையில் முழுமையான ஒத்துழைப்பினை உறுதி செய்தார்.
அண்மையில் இடம்பெற்ற பிரசெல்ஸ் இணை ஆணைக்குழுவின் 22ஆவது கூட்டத்திற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து ஒரு கூட்டறிக்கையினை வெளியிட்டன. அவ்வறிக்கையில் இலங்கையானது 27சர்வதேச சமவாயங்களின் கீழான உடன்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதாக அவதானிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இரத்து செய்து விட்டு அதனை சர்வதேச நியமங்களுடன் இணங்கக்கூடிய வகையிலான வேறொரு சட்டவாக்கத்தினூடாகப் பதிலீடு செய்ய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் மீள எடுத்துரைத்திருந்தது.

இதனையடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய ஒரு சட்டவாக்கத்தினை வரைவதற்கான ஒரு குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்தாபித்தார். உத்தேசிக்கப்பட்ட பங்கரவாத எதிர்ப்புச் சட்டவாக்கமானது அடுத்த மூன்று வருடங்களாக மூடப்பட்ட கதவுகளுக்குள் ஆழ்ந்த கவனத்திலெடுக்கப்பட்டது.
இக்காலப்பகுதியின்போது எவ்விதமான பொதுமக்கள் கலந்தாலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின்னரும் அச்சட்டமூலத்திற்கான வரைவுகளில் குறிப்பிட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக அமைந்திருக்கவில்லை.
இதனால் மிகக் கடுமையான எதிர்ப்புக்கள் பல்வேறு தரப்பினரிடத்திலிருந்தும் எழுந்தது. இதனால் அச்சட்டத்தினை கைவிடும் சூழலொன்று அப்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
இருந்தபோதிலும், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது ஜனாதிபதியாகியுள்ள நிலையிலும், அப்போதைய அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி தற்போதைய அரசிலும் அதே பதவியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையிலும், மீண்டும் குறித்த சட்டம் தூசுதட்டப்பட்டு கையிலெடுக்கப்பட்டது.
தற்போது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம்’ என்ற பெயரில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கான வரைவு கடந்த மார்ச் 22ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய கரிசனைகள் மெல்லமெல்ல வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன.
இந்நிலையில் குறித்த வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூல ஏற்பாடுகளில் அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தவல்ல முக்கிய சில விடயங்களை கவனத்தில் கொள்ளுதல் பொருத்தமானதாக இருக்கும்.
அந்த வகையில், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் முன்னுரையில் ‘பயங்கரவாதமானது இலங்கையின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாரதூரமானவகையில் அச்சுறுத்தியும், இலங்கைப் பிரஜைகளுக்கு இறப்பையும் பாரதூரமான ஊறையும் விளைவித்தும், இலங்கையின் பொது மற்றும் தனியார் ஆதனங்களுக்குப் பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்தியும், தேசிய அபிவிருத்தியை சுணக்கியும் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பொதுப்படையானதும், ஏற்றுக்கொள்ளக்கூடியதுமாக இருக்கின்றபோதும், அச்சட்டமூலத்தின் 20ஆவது பிரிவின் ‘உ’ பகுதியில் பொதுப்பயன்பாட்டிடத்துக்கு, ஓர் அரச அல்லது அரசாங்க வசதிக்கு, ஏதேனும் பகிரங்க அல்லது தனியார் போக்குவரத்து முறைமைக்கு அல்லது ஏதேனும் உட்கட்டமைப்பு வசதிக்கு அல்லது சூழலுக்குப் பாரதூர மான சேதத்தை விளைவித்தல் தண்டனைக்குரியதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று 20ஆவது பிரிவின் ‘ஊ’ பகுதியில் அத்தியாவசிய சேவைகள் அல்லது வழங்குகைகளுக்கு அல்லது ஏதேனும் அத்தியாவசிய சேவையுடன் அல்லது வழங்குகையுடன் இணைந்த ஏதேனும் முக்கியமான உட்கட்டமைப்புடன் அல்லது ஏற்பாட்டியல் வசதிக்கு பாரிய முட்டுக்கட்டையை அல்லது சேதத்தை அல்லது அவற்றுடனான தலையீட்டை விளைவித்தலும் தண்டனைக்குரியதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 20ஆவது பிரிவின் ‘ஒ’ பகுதியில் மதஞ்சார் அல்லது கலாசாரஞ்சார் ஆதனங்களுக்கு அழிவை அல்லது பாரிய சேதத்தை விளைவித்தலும் தண்டனைக்குரியதாகும் என்றும் உள்ளது.

இத்தவறொன்றைப் புரிகின்ற எவரேனுமாள், மேல் நீதிமன்றத்தினால்
குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதோடு இருபதாண்டுகளை விஞ்சாதவொரு காலத்துக்குக் கடூழிய தண்டனைக்கும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு விஞ்சாத குற்றப்பணமொன்றிற்கும் ஆளாதல் வேண்டும் என்றும் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதிமன்றமானது, அக்குற்றத்தீர்ப்பில் குறித்த நபருக்கு அல்லது குழுவினருக்கு இழைக்கப்பட்ட தவறுக்காக விதிக்கவேண்டிய ஏதேனும் தண்டத்துடன் சேர்த்து மேலதிகமாக அவ்வாளின் அசைவுள்ள, அசைவற்ற எல்லா ஆதனங்களையும் குடியரசுக்கு இழப்பிக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் எனும் தலைப்பில், 10ஆம் பிரிவின் (1) (அ) இல், பயங்கரவாதம் என்ற தவறைப் பொதுமக்கள் புரிவதற்கு, ஆயத்தஞ்செய்வதற்கு அல்லது ஏவிவிடுவதற்கு அவர்களை நேரடியாக அல்லது நேரடியாகவல்லாமல் ஊக்குவிப்பதற்கு அல்லது தூண்டுவதற்குப் பொதுமக்களுள் சிலரினால் அல்லது எல்லோரினாலும் விளங்கிக்கொள்ளக் கூடிய சாத்தியங்கொண்ட கூற்றொன்றை வெளியிடுகின்ற அல்லது வெளியிடச் செய்விக்கின்ற, அல்லது ஏதேனும் சொல்லை அல்லது சொற்களைப் பேசுகின்ற, எவையேனும் சைகைகளை அல்லது புலப்படத்தக்க குறிப்பீடுகளைச்
செய்கின்ற எவரேனுமாள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதம் என்ற தவறைப் புரிவதற்கான, ஆயத்தஞ்செய்வதற்கான அல்லது ஏவிவிடுவதற்கான கூற்றினால் பொதுமக்கள் நேரடியாக அல்லது நேரடியாகவல்லாமல் ஊக்குவிக்கப்படுகின்ற வகையில்,
அ) அச்சு ஊடகம்
(ஆ) இணையத்தளம்
(இ) இலத்திரனியல் ஊடகம்
(ஈ) வேறு வடிவத்திலான பொது அறிவித்தல் மூலமான வெளியீடுகளும் தண்டனைக்குரியதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, ஒரு பயங்கரவாத வெளியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு,
வாசிப்பதற்கு, கேட்பதற்கு அல்லது பார்ப்பதற்கு அல்லது ஒரு கொடை அல்லது விற்பனைமூலம் அதனைப் பெறுவதற்கு அவர்களை இயலச்செய்யும் சேவையொன்றை ஏனையோருக்கு வழங்கினால் அதுவும் தண்டனைக்குரியதாகின்றது.

இந்த ஏற்பாடுகள், கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை நேரடியாகவே பாதிப்பதோடு, பொதுமக்கள், தொழிற்சங்கள் உள்ளிட்டவற்றின் சுதந்திரமான ஒன்றுகூடுதலுக்குரிய அடிப்படையையும் மறுக்கின்றது. அத்துடன் ஊடகங்களையும் நேரடியாகவே கட்டுப்படுத்துவாதாக இருக்கின்றது.

விளக்கமறியலின் ஆகக்கூடிய காலப்பகுதி பற்றிய பகுதியில்,
ஆளெவரும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளை
தொடர்ந்திருந்தாலான்றி அவருடைய கைது செய்தல் திகதியில்
இருந்து ஓராண்டை விஞ்சுகின்ற காலப்பகுதி ஒன்றுக்கு
விளக்கமறியலில் வைத்திருக்கப்படுதல் ஆகாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓராண்டு வரையில் விளக்கமறியலில் வைக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விளக்கமறியல் காலப்பகுதியானது,
சட்டத்துறை தலைமையதிபதியினால் செய்யப்பட்ட விண்ணப்பம்
ஒன்றின் மீது, மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரின் கட்டளை
ஒன்றின் மீது, நீடிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு அது ஒருதடவையில் மூன்று மாதங்களை விஞ்சுதலாகாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தடுத்து வைத்தற்கட்டளைகள் தொடர்பான பகுதியில், சந்தேகநபர் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட தவறொன்றைப் புரிந்துள்ளார்
அல்லது புரிவதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கான
நியாயமான ஏதுக்கள் உள்ளதென பிரதி பொலிஸ்
பரிசோதகர் தலைமையதிபதி திருப்திப்பட்டால், அவர் அத்தகைய
காரணங்களைப் பதிவுசெய்தபின்னர், அங்கீகரிக்கப்பட்ட தடுத்து
வைத்தல் நிபந்தனைகளின்கீழ் அங்கீகரிக்கப்ட்ட தடுத்துவைக்கும்
இடமொன்றில் சந்தேகநபரைத் தடுத்துவைத்தலுக்கு அதிகார
மளிக்கின்றது.

அத்துடன் குறித்த தடுத்துவைத்தலாவது ஆரம்பத்தில் மூன்று மாதங்களை விஞ்சாத காலப்பகுதி யொன்றுக்கு வழங்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பிரதி பொலிஸ் மா அதிபரின் அனுமதியுடன் மூன்று மாதங்கள் வரையில் நபரையோ அல்லது குழுவினரையோ தடுத்து வைக்க முடிகின்றது.

மேலும், நபர் ஒருவர் பொலிஸாரலோ அல்லது அதிகாரமளிக்கப்பட்டவர்களாலோ கைது செய்யப்படுகின்றபோது கிட்ட பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல், பதிவுகளைச்செய்தல், பெண் ஒருவரை பெண் பொலிஸாரே கைது செய்தல், கைது செய்யப்படுபவர்களின் உறவினர்களுக்கு அறிவித்தல், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கிரமமாக பார்வையிடுவதற்கு அனுமதித்தல் உள்ளிட்ட விடயங்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் சம்பந்தமாக அவற்றின் பிரயோக ரீதியான விடயங்கள் நடைமுறையில் உணரப்பட்டுள்ள நிலையில் இந்த ஏற்பாடுகளின் அமுலாக்கம் பற்றிய கரிசனை கொள்ள முடியாததெவாரு நிலையே உள்ளது.
இவ்வாறான உள்ளடக்கங்களை கொண்ட சட்டம் அமுலாக்கப்படுவதில் இயல்பான அச்சங்கள் ஏற்படுவதில் பலத்த நியாயங்கள் உள்ளன. இலங்கையின் வரலாற்றைக் கவனத்திற்கொண்டு பார்க்கின்றபோது, எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டவாக்கமும் அல்லது அந்நோக்கத்திற்கான வேறு ஏதேனும் சட்டமும் துஷ்பிரயோகப்படுத்தப்படலாம் என்பதுடன் அது தண்டனையிலிருந்து விடுபடுகின்ற கலாசாரத்தினை வலுப்படுத்தலாம்.
அதேவேளை, தற்போது வரைபாக உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை சர்வதேச விழுமங்களுக்கு அமைவாக மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகளில் பயனுரித்தாளிகள் ஒப்பீட்டளவில் தற்போதைய அரசாங்கம் சர்வதேச மற்றும் தேசிய அழுத்தங்களை ஏற்று அங்கீகரிப்பதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபோது இது ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ஆனால் அதனை ஆட்சியில் உள்ள அரசாங்கம் மேற்கொள்ளுமா என்பது தான் பெருங்கேள்வியாகவுள்ளது.