You are currently viewing

” யார் கோரிக்கை விடுத்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆடையில் – சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன். மேற்குலக கலாச்சாரத்தை இலங்கைக்குள் திணிக்கும் முயற்சிக்கு இடமளிக்கப்படமாட்டாது.” 

இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்தார். 

ஆசிரியர்களுக்கு தமக்கு வசதியான ஆடைகளை அணிந்து பணிக்குவர இடமளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு மகாசங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே கல்வி அமைச்சரும் இவ்வாறு அறிவித்துள்ளார்.

” மாணவர்களின் ஒழுக்கத்தில்தான் பாடசாலை கட்டமைப்பு தங்கியுள்ளது. எனினும், மேற்குலக கலாசாரத்தை இங்கு திணிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்கு இடமளிக்கப்படமாட்டாது. ஆடையில் மாற்றம் ஏற்படுத்த அனுமதி இல்லை. இன்று ஆடையை மாற்ற சொல்பவர்கள் நாளை மூளைச்சலவை செய்யலாம். 99 சதவீத ஆசிரியர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எமது கலாசாரத்தை நாம் காப்போம்.” – என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.