You are currently viewing மிரிஹான போராட்டம் – கைதானவர்களுக்கு எதிராக PTA வை பயன்படுத்தக்கூடாது

மிரிஹான போராட்டம் – கைதானவர்களுக்கு எதிராக PTA வை பயன்படுத்தக்கூடாது

நுகேகொடையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது – என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்து விசாரிப்பது ஏற்புடையதல்ல என்று மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. சமையல் எரிவாயு, எரிபொருள் என அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை பல நாட்களாக தொடர்கின்றன.   

இதனால் பொறுழையிழந்த மக்கள் தன்னெழுச்சியாக போராட ஆரம்பித்துள்ள நிலையில்,  மறுபுறத்தில் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. இதனால் இலங்கையில் பதற்றமானதொரு சூழ்நிலை காணப்படுகின்றது.  

இந்நிலையில்  ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்துக்கு செல்லும் மிரிஹான, பெங்கிரிவத்தை வீதியை மறித்து மக்கள் நேற்றிரவு (31.03.2022) போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொலிஸார் குவிக்கப்பட்டனர்.  

அதுமட்டுமல்ல பதற்ற நிலைமையை தணிப்பதற்கும், போராட்டம் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் இருப்பதற்கும் கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. களனி பகுதியில் போராட்டமொன்று இடம்பெற்றதால் அந்த பொலிஸ் பிரிவிலும் இன்று காலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருந்தது. 

மிரிஹானயில் அணிதிரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தண்ணீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களையும் மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பொலிஸார் இன்று  (01.04.2022) வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் பெண்ணொருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது படலம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொலிஸ் தரப்பில் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.  ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

அத்துடன், பொலிஸ் பஸ்ஸொன்றுக்கும்,  பொலிஸ் ஜீப்புக்கும், இரு சைக்கிள்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

 அதேவேளை, இப்போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் குழுவொன்றே செயற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

” இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல், ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திட்டமிட்ட  அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டில்  அரபு  வசந்தத்தை உருவாக்க வேண்டும் என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளனர். 

சமூக ஊடகங்களை அநாமதேயமாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டுள்ளது என கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் ”  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.