You are currently viewing ‘சமஷ்டி’ கிட்டும்வரை ’13’ஐ கைவிடமுடியாது!

‘சமஷ்டி’ கிட்டும்வரை ’13’ஐ கைவிடமுடியாது!

 அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் நிறைவானது என்றோ மாகாணசபை முறைமை போதும் என்றோ கூறவில்லை. எமது இலக்கு சமஷ்டியே. ஆனால் அதை எட்டும் வரை 13 ஐ விட்டு விட முடியாது. இது ஒன்றுதான் இதுவரையான எமது அரசியல் போராட்டத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சட்டபூர்வமான ஏற்பாடு.” 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர்  த. சித்தார்த்தன் தெரிவித்தார். 

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக  1985 இல் திம்புவில் நடந்த பேச்சுகளில் புளொட்டின் சார்பாகக் கலந்து கொண்டவர். அது தொடக்கம் தொடர்ச்சியாகவே அரசியற் செயற்பாட்டாளராக இயங்கி வருகிறார். 

உமா மகேஸ்வரனின் மறைவுக்குப் பின்னர் புளொட் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் ஒரு அங்கமாக செயற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தீர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, 

” இலங்கை இந்திய உடன்படிக்கை செய்யப்பட்டபோதிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் தொடர்ந்து ஆட்சியிலிருந்த எவருக்குமே இந்த உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்ற அக்கறை இருக்கவில்லை. குறைந்த பட்சத் தீர்வாக இருக்கும் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை வழங்குவதற்குக்கூட இவர்கள் தயாரில்லை. இதுதான் பிரச்சினையே. இதில் இன்னொரு காரணமும் உண்டு. 

தொடக்கத்தில் இந்திய அமைதிப்படை இங்கே இருந்த போது மாகாணசபையை இயங்க விடாமல் விடுதலைப்புலிகள் தடுத்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட ஏனைய இயக்கங்களும் இதில் பங்கேற்கவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் ஈ.என்.டி.எல்.எவ்வும்தான் பங்கேற்றன. இதை மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திச் சிங்களத் தலைமைகள் 13 ஆவது திருத்தத்திலிருந்த சில அதிகாரங்களை எடுத்துக் கொண்டார்கள். பலவீனப்படுத்தினார்கள். அந்தக் காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் கீழ் மாகாணசபை இயங்கியதால் அதைத் தடுக்கக் கூடிய வல்லமை எங்களிடம் இருக்கவில்லை.

ஆனாலும் புலிகள் மாகாணசபையை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்று செயற்பட்ட மாதிரியும் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுடைய முழுமையான ஆதிக்கத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகள் இருந்தபோது, மாகாணசபை அதிகாரிகளால் இயக்கப்பட்டது. புலிகள் அதற்கு அனுமதித்து, அதைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஒரு நாளிலிலேயே அதை நிறுத்தியிருக்கலாம்.

அதேவேளை அவர்களைப் பொறுத்தவரை மாகாணசபையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அது அவர்களுடைய தொடர்ந்த போராட்டத்துக்கு பொருத்தமாக இருக்காது. அர்த்தமில்லாமல் போய்விடும்.

ஆனாலும் அவர்கள் அதை முற்றாக நிராகரிக்கவில்லை. ஏனென்றால் இன்னொரு நல்ல தீர்வு எட்டப்படும்வரையில் இதைக் கை விட முடியாது எனக் கருதினார்கள். ஏனென்றால் சிங்களத் தலைமைகள் எதற்கும் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் எண்ணமே எப்போதுமே இருந்ததில்லை.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் (மைத்திரி – ரணில் ஆட்சியின்போது) தீர்வுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கான ஒரு உபகுழுவில் நானும் இருந்தேன். அப்பொழுது எனக்குத் தெரிந்தது, இது நிச்சயமாகத் தீர்வைத்  தராது என்று. இதை நான் பகிரங்கமாகப் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆனால் அப்பொழுது  சம்பந்தன் அதில் முழுமையான நம்பிக்கையை வெளியிட்டிருந்தார். அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன், நீங்கள் தீர்வு கிடைக்கும், கிடைக்கும் என்று சொல்வதை மக்கள் நம்பிக்கையீனமாகத்தான் பார்க்கிறார்கள். இங்கே நிலைமையும் அப்படித்தானே இருக்கு என்று. அதற்கு அவர் சொன்னார், என்னைப் பொறுத்தவரை நான் அரசாங்கத்துடன் நடத்துகின்ற பேச்சுக்களில் நம்பிக்கையுள்ளவனாகவே பேச வேண்டும். அதில் நம்பிக்கை வைத்தால்தான் பேசமுடியும். நீங்கள் உங்கள் இடத்திலி இருந்து கொண்டு பேசுவதைப்போல என்னுடைய இடத்திலிருந்து கொண்டு பேச முடியாது என. இறுதியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அந்த ஆட்சியும் கழிந்தது.

இப்ப இந்த அரசாங்கம் இப்போதிருக்கின்ற இந்தக் குறைந்த அளவிலான 13 ஐக் கூட இல்லாதொழித்து, புதிய திருத்தமொன்றுக்கு தயாராகிறது. இதை நாம் விட்டு விட முடியாது. இந்தச் சூழலில்தான் நாம் இந்தியப் பிரதமருக்கு இது குறித்து ஒரு கடிதத்தை எழுத முற்பட்டோம்.

ஏனென்றால் மாற்றுத்தீர்வைத் தராமலே இருக்கின்றதையும் எடுத்துக் கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என்ற வகையில்,  இந்த முயற்சியை செல்வம் அடைக்கலநாதன் ஆரம்பித்து, பிறகு நானும் அவருமாக முயற்சித்து பின்பு ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கி அந்தக் கடிதத்தை இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்பினோம்.

இந்த 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவுக்கு நேரடியான பொறுப்பிருக்கிறது. ஏனென்றால் தமிழர்களின் சார்பில் அவர்கள்தான் கையெழுத்திட்ட தரப்பு. ஆகவே அவர்களுக்கு முழுமையான அதிகாரமும் பொறுப்பும் (Moral Responsibility) இருக்கிறது இதில்.

மற்றும்படி நாமும் முடிந்த முடிவாக 13 திருத்தத்தை நிறைவானது என்றோ மாகாணசபை முறைமை போதும் என்றோ கூறவில்லை. எமது இலக்கு சமஸ்டியே. ஆனால் அதை எட்டும் வரை இதை நாம் விட்டு விட முடியாது. இது ஒன்றுதான் இதுவரையான எமது அரசியல் போராட்டத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சட்டபூர்வமான ஏற்பாடு.” -என்றார்.