You are currently viewing கூட்டமைப்பால் தயார் செய்யப்படும் ஜெனிவாவிற்கான அறிக்கை : எம்.ஏ.சுமந்திரன்

கூட்டமைப்பால் தயார் செய்யப்படும் ஜெனிவாவிற்கான அறிக்கை : எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்குத் தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (30) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சனை தற்போது பூதாகாரமாக மாறியிருக்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புக்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் எனக் கலந்துரையாடியுள்ளோம்.

இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுப்பது எமது பிரதான கடமையாகக் கருதுகின்றோம். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்து மூலமான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும்.

மார்ச் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றைத் தயார் செய்கின்றோம்.

ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும் இரா. சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை மறுநாள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்குப் பகிரப்படும். மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கடிதமாக இரா. சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சரையும் வெளி விவகார அமைச்சரையும் சந்திக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

இதன்போது சிங்கள பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியான மாகாண சபை முறைமை புதிய அரசியல் அமைப்பில் இல்லை என்கின்ற விடயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள் அதனை அடியோடு மறுக்கின்றார்கள்.

அவ்வாறான பிரேரணை வரவில்லை எனவும் தெரிவித்தனர். அத்துடன் அந்த செய்தி தவறானது என அமைச்சர்கள் எனக்குக் கூறினார்கள். இதில் பத்திரிகை சொல்வது உண்மையா அமைச்சர்கள் சொல்வது உண்மையாக என்பது எனக்குத் தெரியாது.

அத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்படுகின்றது என ஒரு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கண்துடைப்பு நாடகம் என்றுகூடச் சொல்ல முடியாது. ஏனெனில் அதில் எதுவுமே இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு விடயத்தினையும் எடுத்துப் பார்த்தால் அதில் ஒரு மாற்றமும் கிடையாது.

ஆகவே வெளி விவகார அமைச்சர் பீரிசிடம் ‘ரிபோம்’ (Reform) என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் புதிய விளக்கம் கொடுக்கப்படவேண்டியுள்ளது எனத் தெரிவித்திருந்தேன். அவர் சிரித்து விட்டு எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்திற்கு நான் அறிவித்துள்ளேன் என்பதை அவருக்குத் தெரிவித்தேன். இது தொடர்பாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் வரும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

இலங்கை அரசாங்கம் இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதனையும் அவருக்குத் தெரிவித்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.