You are currently viewing வைரஸ் மட்டுந்தான் தோல்விகளுக்கு காரணமா? நிலாந்தன்.

வைரஸ் மட்டுந்தான் தோல்விகளுக்கு காரணமா? நிலாந்தன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசுத் தலைவரும் அரசும் இப்பொழுது ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

 ஆட்சிக்குள்ளேயே பங்காளிக் கட்சிகள் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அவ்வாறு அரசை விமர்சித்த சுசில் பிரேம் ஜயந்த அண்மையில் ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைப் பதவி நீக்கியமை ஒரு குறியீட்டு நடவடிக்கை என்று தென்னிலங்கையில் வர்ணிக்கப்படுகிறது.

அவர் மஹிந்தவுக்கு நெருக்கமானவர்.அவரைப்போலவே அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களும் மகிந்தவிற்கு நெருக்கமானவர்கள். 

அவர்களை தொடர்ந்தும் தாமரை மொட்டு கட்சிக்குள் வைத்திருப்பது மஹிந்ததான் என்ற ஒரு அபிப்பிராயம் தென்னிலங்கையில் உண்டு. அவர்தான் மேற்படி பங்காளிக் கட்சிகளை அரவணைத்து வைத்திருக்கிறார். அவருடைய சகோதரர்களுக்கு அந்த முகவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் சுசில் பிரேம் ஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டமை ஆட்சியில் மஹிந்த ராஜபக்சவின் நிலை மேலும் பலவீனமடைந்து வருவதை காட்டுவதாக ஒரு விளக்கம் தென்னிலங்கையில் கூறப்படுகிறது. 

இது எதிர்காலத்தில் பசில் ராஜபக்சவை பிரதமர் பதவிக்கு மேலுயர்த்தும் ஒரு நடவடிக்கையில் போய் முடியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஆளும் தரப்புக்குள்ளும் ஐக்கியம் பலவீனமாக இருப்பதை காட்டுகிறது. 

அதேசமயம் அரசாங்கத்துக்கு வெளியே பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும் கசப்பும் வெறுப்பும் அதிகரித்துவருகின்றன. நாட்டில் இப்பொழுது அரசாங்கம் என்ற ஒன்று உண்டா என்று தென்னிலங்கையில் மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமைகள் வந்துவிட்டன.அரசாங்கத்தை எதிர்க் கட்சிகள் கவிழ்க்கத் தேவையில்லை. அரசாங்கம் ஏற்கனவே கவிழ்ந்து விட்டது என்று கூறுகிறார் மனோ கணேசன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஓர் அரசாங்கமும் அரசுத் தலைவரும் இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் அபகீர்த்திக்குள்ளாவதற்கு காரணம் என்ன? covid-19 மட்டும்தான் காரணமா? அல்லது அதுவல்லாத வேறு காரணங்கள் உண்டா ?

Covid-19 உலகம் முழுவதற்குமான ஒரு பொதுப் பிரச்சினை. இலங்கை போன்ற பல சிறிய நாடுகளில் அது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அந்த எல்லா நாடுகளிலும் இலங்கையில் இப்பொழுது ஏற்பட்டிருப்பதை போன்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கவில்லை. 

அப்படி என்றால் covid-19 மட்டும்தான் இலங்கைத் தீவின் நெருக்கடிகளுக்கு காரணமல்ல என்பது தெளிவாக தெரிகிறது. அதுவல்லாத வேறு காரணங்களும் உண்டு என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதா?

அரசுத்தலைவர் கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பொழுது அவருடைய மூளை என்று கருதப்பட்ட வியத்மக அமைப்பு பெரும் எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்டது. ஓய்வு பெற்ற ராஜதந்திரிகள், படைப் பிரதானிகள், நிர்வாக அதிகாரிகள் போன்றோரை உள்ளடக்கி தொழில்சார் திறன்மிக்க புத்திஜீவிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைக் குழாமாக அது வர்ணிக்கப்பட்டது. 

தொழில்சார் திறன்களின் மூலம் நாட்டை கட்டி எழுப்புவதே அதன் வழி வரைபடம் என்றும் காட்டப்பட்டது. 

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்குரிய வழி வரைபடத்தை வியத்மக அமைப்பும் எலிய என்று அழைக்கப்படும் ஒரு சிவில் அமைப்பும்தான் உருவாக்கின என்று கூறப்பட்டது. கோட்டாபயவின் அரசாங்கத்தில் வியத்மக புத்திஜீவிகளும் நிபுணர்களும் பங்காளிகளாக காணப்படுகிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் வியத்மக அமைப்பைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது பேர் போட்டியிட்டார்கள் இவர்களில் எட்டுப் பேர் வெற்றிப் பெற்றார்கள். கொழும்பு – சரத் வீரசேகர, கம்பஹா – கலாநிதி நாலக கொடஹேவா, மாத்தளை -நாலக கோட்டேகொட, அனுராதபுரம் – போராசிரியர் சன்ன ஜயசுமன, குருணாகல் – பேராசிரியர் குணபால ரத்னசேகர, கண்டி – சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, அம்பாந்தோட்டை – மருத்துவர் உபுல் கலப்பத்தி, திகாமடுல்ல – திலக் ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வியத்மக அமைப்பை சேர்ந்த அனுர பெர்ணான்டோ தோல்வியடைந்தார். 

வியத்மக அமைப்பை சேர்ந்த அஜித் நிவாட் கப்ரால், சீதா அரம்பேபொல ஆகியோர் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

வியத்மக அமைப்பானது 2009 க்குப் பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை அறிவியல் மயப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. அதை அரசாங்கத்தின் மூளை என்றும் அழைத்தார்கள். தவிர மனோகணேசன் அதனை அரசாங்கத்துக்குள் ஒரு அரசாங்கம் என்று வர்ணித்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வியத்மக அமைப்பின் பொருளாதார திட்டங்களும் எனைய திட்டங்களும் எதிர்பார்த்த வெற்றிகளை பெறத் தவறிவிட்டதையே கடந்த இரண்டு ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன.

எனவே தொகுத்துப் பார்த்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் அடைந்த தோல்விகளுக்கு ஒருவிதத்தில் வியத்மக அமைப்பும் பொறுப்புத்தான். ஒரு சிந்தனை குழாத்தின் பின்பலத்தோடு ஆட்சிக்கு வந்த ஒரு அரசுத்தலைவர் இவ்வாறு வெற்றி பெறத் தவறியமை என்பது அந்த சிந்தனைக் குழாத்தின் தோல்வியும்தான். அப்படியென்றால் அந்த சிந்தனை குளத்தின் தொழில்சார் திறன், திட்டமிடல் போன்றவற்றிலும் தவறு இருக்கிறது என்றுதான் பொருள். வியத்மக அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கலாநிதி நாலக கொடகேவ அரசாங்கம் வியத்மக வகுத்த வழியில் செல்ல தவறியதே தோல்விகளுக்கு காரணம் என்று கூறுகிறார்.

இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் வைரஸ் தாக்கத்தால் மட்டும் ஏற்பட்டவை அல்ல. அதற்கு முன்னரே ஈஸ்டர் குண்டு வெடிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. வைரஸின் தாக்கம் பாதிப்பை மேலும் அதிகப்படுத்தியது என்பதே சரி. ஆயின் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு முன்பு பொருளாதாரம் செழிப்பாக இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா ? இல்லை அப்படியில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் நாடு கடனாளியாகத்தான் இருந்தது. அதனால்தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அவர் 99 ஆண்டு கால குத்தகைக்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு எழுதிக்கொடுத்தார். எனவே நாட்டின் பொருளாதாரம் வைரசுக்கு முன்பு செழிப்பாக இருந்தது என்று எடுத்துக்கொள்ள முடியாது.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் கூட நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியவில்லை என்பதே உண்மை. ஏன் முடியவில்லை? ஏனென்றால் இலங்கைத் தீவு தொடர்ந்தும் முதலீட்டு கவர்ச்சி குறைந்த ஒரு நாடாகக் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் ஏன் நாட்டை நோக்கி வரவில்லை? காரணம் மிகவும் எளிமையானது. நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்கு என்ன காரணம்? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏன் ஏற்படவில்லை? ஏனென்றால் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதுதான் காரணம். அதுதான் பிரச்சினை. அதுதான் அடிப்படைக் காரணம். தீர்க்கப்படாத இனப்பிரச்சினையின் தொடர் விளைவுகளை இவை.

யுத்தம் ஒரு காரணம் அல்ல. அது ஒரு விளைவுதான். அது இனப்பிரச்சினையின் விளைவு. இனப்பிரச்சினை எதனால் வந்தது? அது இன ஒடுக்குமுறையால் வந்தது. இன ஒடுக்குமுறை எங்கிருந்து தொடங்கியது ? ஒரு பெரிய இனமும் பெரிய மதமும் இச்சிறிய தீவுக்கு உரிமை கோரிய போது உருவாகியது. அதாவது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் பல்லினத் தன்மை மிக்க ஒரு தீவை ஏற்றுக்கொள்ள மறுத்தமைதான் இனப்பிரச்சினைக்கு மூல காரணம். 

அதே சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அதே நிலைப்பாட்டை 2009க்கு பின்னரும் அறிவியல் மயப்படுத்தி தொழிற் திறன்களுடன் முன்னெடுக்க முற்பட்டதன் தோல்விதான் நாடு இப்பொழுது எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளுக்கும் காரணம். 

எனவே வியத்மக மட்டுமல்ல எத்தனை சிந்தனை குழாம்களை உருவாக்கினாலும் அவை நாட்டின் பல்லினத் தன்மையை நோக்கி பல சமயப்பண்பை நோக்கி சிந்திக்கவில்லை என்றால் நாட்டை முதலீட்டுக் கவர்ச்சி மிக்கதாக கட்டியெழுப்ப முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் நாட்டை அவ்வாறு திட்டமிட முடியாமல் போனதன் விழைவின் மீது வைரஸ் ஏற்படுத்திய தாக்கம்தான் இன்று நாடு எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும். 

இந்த எளிமையான உண்மையை கண்டுபிடிப்பதற்கு தொழில்சார் திறன்மிக்க பெரிய புத்திஜீவித்தனமும் தேவையில்லை, புத்திசாலிகளும் தேவையில்லை.