You are currently viewing நடுத்தர வர்க்கத்தினருக்கு தலைமைத்துவம் வழங்கப்போவது யார்?

நடுத்தர வர்க்கத்தினருக்கு தலைமைத்துவம் வழங்கப்போவது யார்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் எதிர்பார்ப்பதாக கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 2024 ஜனவரி முதல் தேர்தல் பிரச்சார வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்கு மொட்டு கட்சியின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் ரணில் விக்கிரமசிங்கவும், அநுரகுமார திஸாநாயக்கவும் தற்போது போட்டியில் இறங்கியுள்ளனர்.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதே நாட்டில் உள்ள பிரதான பிரச்சினையாகும். இதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்ந்தெடுத்துள்ள வழி என்னவென்பது அனைவருக்கும் தெரியும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நாட்டைக் காப்பாற்றிவிடலாம் என ஜனாதிபதி நம்புகின்றார். 2022 ஆம் ஆண்டிற்கான அரச வருமானத்துடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டளவில் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 வீதம் அதிகமாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மூன்றாண்டு காலப்பகுதிக்குள் இந்த இலக்கை அடைவது கடினமாகும். சுமார் 2 ஆயிரம் பில்லியன் ரூபாவுக்கு மேல் கூடுதல் வருமானம் பெற வேண்டியுள்ளது. VAT அதிகரிப்பு போன்ற வரித் திருத்தங்களினூடாக இந்த இலக்கை அடைவதற்கு ஜனாதிபதி முயற்சித்துவருகின்றார். VAT அதிகரிப்பின் மூலம் 600 பில்லியனுக்கும் அதிகமான தொகையை வசூலிக்க அரசு எதிர்பார்த்தாலும், வரி அதிகரிப்பால் மக்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை சட்டமூலத்தை உற்று நோக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் பிரச்சினை, தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை போன்ற விவகாரங்களின்போது ஜனாதிபதி செயற்பட்ட விதம், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அவரின் போக்கு என்னவென்பது வெளிப்படுத்துகின்றது. இந்த வழியில் சென்றால், நாட்டில் IMF வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், மக்கள் வரி செலுத்தினாலும் அதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும் நாடு மீளும் என்று கருத முடியாது. சிலவேளை ரபர் பந்தை தற்காலிகமாக தண்ணீருக்குள் மறைத்துவைப்பதுபோல் செயற்படலாம். ஆனால் பந்து எப்படியும் மேலே வந்தே தீரும். நாட்டைக் கட்டியெழுப்புவதை ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்து, உண்டு மகிழ்ந்து, ஆடிப்பாடி, வரியும் செலுத்தி ஐந்தாண்டுகளுக்கு கஷ்டமான வாழ்க்கை வாழ விரும்பும் மக்கள், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆக்கலாம்.

சிலவேளை அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என வைத்துக்கொள்வோம். அவர் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவாரா? தனியார் மயமாக்கல் வேலைத்திட்டத்துக்கு என்ன நடக்கும்? இந்திய-சீனா பதற்றக் கோட்டில் அவர் எங்கு நிலைநிறுத்தப்படுவார்? நாட்டைக் காப்பாற்ற இவரின் திட்டம் என்ன? அநுரவின் உரைகள் மற்றும் ஜே.வி.பியின் சமீபத்திய கொள்கை அறிக்கைகள் மூலம், நாட்டைக் காப்பாற்ற இடதுசாரி வேலைத்திட்டத்தை அவர் நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக ஊழல், மோசடிகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

மக்களை மென்மேலும் வதைக்கும் வகையில் வரி சீர்திருத்தங்களை செய்யாமல், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி, மக்களுக்கு சுமையை திணிக்காமல், நாட்டையும் மீட்பதற்கான திட்டம் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மக்கள் அதனை நிச்சயம் நம்புவார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சி முறையாக அமையாதவரை, எதைச் செய்தாலும் வெற்றியடையாது என்று மக்கள் கருதுகின்றனர். நவீனத்தையும் ஜனநாயகத்தையும் மனித சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் அடைய வேண்டும் என கனவு காணும் இந்த நடுத்தர நெடுவரிசை மக்களை யார் வழிநடத்துவது? இதற்காக ரணில் மற்றும் அநுரவுக்கு பதிலாக முன்வரும் தலைவர் யார்? இந்த கேள்விக்கு விரையான பதிலை சாதாரண மக்கள் எதிர்பார்க்கின்றனர்.